என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுவன் கடத்தல் வழக்கு - பூவை ஜெகன்மூர்த்தி காவல்நிலையத்தில் ஆஜர்
    X

    சிறுவன் கடத்தல் வழக்கு - பூவை ஜெகன்மூர்த்தி காவல்நிலையத்தில் ஆஜர்

    • பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார்.
    • ஐகோர்ட்டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் கார ணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 6-ந்தேதி இரவு சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்த ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்றபோது ஆதரவாளர்கள் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும், போலீசார் விசாரணைக்கு சென்றபோது ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    விசாரணைக்கு செல்லும்போது கூட்டமாக ஆட்களை திரட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் தனியாகவே செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    இதனை ஏற்று பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. இன்று காலை 10 மணி அளவில் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆதரவாளர்கள் யாருமின்றி தனி ஆளாகவே பூவை ஜெகன்மூர்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

    இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். காதல் விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் உங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த மாதிர யான உதவிகளை கேட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார். பூந்தமல்லி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தான் களாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று காதல் ஜோடியை வீடு புகுந்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படியே கடந்த 6-ந்தேதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் காதல் ஜோடி அங்கு இல்லாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி உள்ளனர்.

    அதுவே இப்போது பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படி காதல் விவகாரத்தில் அரங்கேற்றப்பட்ட கடத்தல் பின்னணி பற்றிய முழுமையான தகவல்களையும் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் இருவரும் போனில் பேசிய உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணை என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

    திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையிலான போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதன் முடிவிலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ஜெகன்மூர்த்தியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் சிறுவன் கடத்தல் வழக்கில் அவரது பங்கு என்ன? எப்படி திட்டம் தீட்டப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதனை மையமாக வைத்தே முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×