என் மலர்
திருப்பூர்
- ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.
- பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.
பல்லடம்:
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருப்பூர் -கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.
எனவே பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
- மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.
பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
- மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எனவே அச்சுறுத்தலாக இருந்து வரும் அந்த மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
- கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.
உடுமலை:
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 4ம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் கடந்த ஜனவரி 13-ந்தேதி வரை நீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்க திட்டக்குழு சார்பில் வலியுறுத்த ப்பட்டது.
கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.
இந்நிலையில் முதல் மண்டல பாசனத்துக்கு இன்று முதல் மே 22-ந் தேதி வரை 100 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு,2½ சுற்றுக்கள் அடிப்படையில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டது.
அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, தளிகால்வாய், ஏழு குளம் பாசனத்திலுள்ள 2,786 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் மே 31-ந் தேதி வரை, நீர் திறக்கவும் அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று காலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும். மேலும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தளி வாய்க்காலில் 20 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய வட்டங்கள், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,521 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து நீர் பங்கீட்டு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். அப்போது செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை (ஆழியாறு வடிநிலகோட்டம்) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு.
- திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.
சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.
தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.
நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.
அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.
தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.
இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
- விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
திருப்பூர்:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய த்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட ப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் தொடக்க விழா, 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் தொடக்க விழா மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் மகளிர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு த்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மை நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 5,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அயலக தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திக்கேய சிவ சேனாதிபதி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து 2 முறை உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தந்துள்ளது தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் மாநகர் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் நிகழ்ச்சிகள் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
- வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
- மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.
வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.
புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
- தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.
அவினாசி:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சித்து பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அவரது தொகுதியான நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள்தான் தி.மு.க.வினர். அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்.ஜி.ஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர். பற்றி இழிவாக பேசிய அவருக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அ.தி.மு.க.தான். இந்த 30 ஆண்டுகால ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தினார்.
50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அத்திகடவு-அவிநாசி திட்டத்திற்கு ரூ. 1512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீதம் முடிந்த நிலையில் 10 சதவீத பணியை முடிக்காமல் 2½ ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கடுமையான மின் கட்டண உயர்வால் திருப்பூர்-கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீர் திட்டங்களுக்கு தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். நாளை மறுநாள் 11-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. முதியவர்கள் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில்தான் கோவையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி இவற்றை முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும்.
கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., பாதுகாப்பில்லாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
2019, 2021 தேர்தல் அறிக்கையை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்ததால் மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார்கள் . அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள். இது தி.மு.க.வின் இரட்டை வேடம். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு.
திருப்பூர் என்றாலே அந்நிய செல்வாணியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார்.
ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னர் ஒரு பேச்சு என திமுக, அரசு இருக்கின்றது. தி.மு.க.வினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள். தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும்.
எம்.ஜி.ஆரை பற்றி பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சித்தால் இதுதான் தண்டனை என்பதை மக்கள் உணர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி., வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், தனபால், வி.பி.கந்தசாமி, கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் அமைப்பு செயலாளர் தாமோதரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அவினாசியில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி அவினாசியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
* நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அ.தி.மு.க.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
- அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது.
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது.
இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.
பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.இன்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதேபோன்று அமராவதி ஆற்றங்கரையோர பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை தினமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். கோவில்களுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், தயிர்சாதம், தக்காளிசாதம், சுண்டல், துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லா ற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
- 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஜல்லி, பவுடர் மற்றும் மூலப்பொருட்களின் அதிரடி விலை ஏற்றத்தினால் ஹாலோ பிளாக் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக ஜல்லியின் விலை சுமார் ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் வரை உயர்ந்து இருப்பதினால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறிய லாபம் கூட தற்போது கிடைப்பதில்லை.
எனவே ஹாலோ பிளாக் விலை நிர்ணயம் பற்றியும் கல்குவாரிகளில் ஜல்லி, பவுடர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் ஒரு வார காலம் (7 நாட்கள்) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் தங்களது அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ. 10 கோடி வரை ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் , உடனடியாக அரசு கவனம் செலுத்தி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும். மேலும் வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டியது . வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30-ந் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 82.52 அடியாக குறைந்துள்ளது.






