search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
    X

    திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் தண்ணீரை கலெக்டர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்த காட்சி.

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    • கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.

    உடுமலை:

    பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 4ம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் கடந்த ஜனவரி 13-ந்தேதி வரை நீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு நீர் திறக்க திட்டக்குழு சார்பில் வலியுறுத்த ப்பட்டது.

    கடந்த 7-ந் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் முதல் மண்டல பாசனத்துக்கு இன்று முதல் மே 22-ந் தேதி வரை 100 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு,2½ சுற்றுக்கள் அடிப்படையில், 5 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டது.

    அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, தளிகால்வாய், ஏழு குளம் பாசனத்திலுள்ள 2,786 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் மே 31-ந் தேதி வரை, நீர் திறக்கவும் அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று காலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழங்கப்படும். மேலும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தளி வாய்க்காலில் 20 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய வட்டங்கள், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,521 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.

    விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து நீர் பங்கீட்டு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். அப்போது செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித்துரை (ஆழியாறு வடிநிலகோட்டம்) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×