என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.
வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
- அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.
திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டி பாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேரும் என 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 பேரும், திருப்பூர் தெற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரும் உள்ளனர்.
பெருந்துறையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பேரும், மூன்றாம் பாலின த்தவர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர். பவானியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். இதுபோல் அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் உள்ளனர்.
மேலும், கோபிசெட்டி பாளையத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்கு ச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர்.
நாளை (வெள்ளி க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவ சாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடு கிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன. வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது.
- கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் 1972ம் ஆண்டு மின்சார கட்டண உயர்வு போராட்டத்தால் உயிர் நீத்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவு படுத்துவது நமது கடமை. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும். தியாகி சுப்பையன் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர்.
தியாகிகளின் நினைவிடத்தில் இருந்து இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறோம். கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச்செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது.
நேற்று நீதிமன்றம் 5 குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு 6 ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும். ரஷியா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.
நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். 2029ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளோம்.
கியாஸ்க்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024 ம் ஆண்டு தோல்விக்கு பிறகும் இந்தியா கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது. எனவே அமெரிக்காவைப் பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டாம். இந்தியாவைப் பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
- திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமலானது. தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 428 பணத்தை பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 471 மதிப்பிலான பொருட்களையும், மது மற்றும் போதைப்பொருட்கள் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், டி.வி., பாத்திரங்கள், சால்வை, அரிசி, வேட்டி, சேலைகள், டி-சர்ட்டுகள், பனியன்கள் உள்பட ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 170 மதிப்பிலும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட்டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
- செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.
மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.
கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.
ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.
ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.
அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும் 16-ந்தேதி அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 17-ந்தேதி கைலாச வாகன புஸ்ப விமானம் நிகழ்ச்சி நடக்கிறது.
18-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
19-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், வெள்ள யானை வாகன காட்சி நடைபெற உள்ளது. 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21-ந்தேதி சிறிது தொலைவு தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.
மீண்டும் 22-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. 23-ந்தேதி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்காக பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
- நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது
கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.
நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.
தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.
திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.
கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.
மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது
பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஜிஎஸ்டி வரி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
- இதனால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பெண், பா.ஜ.க.வினரிடம் சானிடரி நாப்கின்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணே வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியது. இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் கோவையில் பா.ஜ.க. வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வினர் 5 பேர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலில் கோவையில் பாஜக வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் !
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 12, 2024
கோவையில் பாஜகவுக்கு தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பாஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து… https://t.co/uAvjMFmtjB pic.twitter.com/GoHQGvGqpf
- தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
- தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தாராபுரம்:
ஈரோடு பாராளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி தமிழை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காக்க பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியவர் மோடி. எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு செய்துள்ளார்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நிறைய நிலுவைப்பணி இருக்கிறது. சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையாக சரி செய்யவில்லை. இந்த தொகுதி மேலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். உயர வேண்டும். பாராளுமன்ற தொகுதி மென்மேலும் அனைத்து துறையிலும் உயர வேண்டும். அதற்கு நீங்கள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு செய்யும் தொகை உயர்வு என தி.மு.க.வின் கஜானாவை நிரப்பி கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.
தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளார்.
- திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13ந்தேதி) சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், வேலூர் கிராமத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பூர் வருகை தர உள்ளார்.
எனவே முதலமைச்சரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 13-ந்தேதி எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






