என் மலர்
திருநெல்வேலி
- தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.
- வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் விவசாயம் பார்த்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது தோட்டத்தில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று வழக்கம் போல அதிகாலையில் தோட்டத்திற்கு அரிராம் சென்றார்.

சிறுத்தை புலி கால் தடம்
அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை புலி கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 2 ஆடுகளை அது தூக்கி சென்றதும் தெரியவந்தது. இவரது தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.
- களக்காடு, நாங்குநேரியில் சாரல் மழை பெய்தது.
- குண்டாறு அணை பகுதியிலும் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக இன்று காலை வரை பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறில் 5.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 115.55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 122 அடியை எட்டியுள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1167 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.59 அடியாக உள்ளது.
இன்று காலை 8 மணிவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 96 மில்லி மீட்டர் அதாவது 9.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து பகுதியில் 82 மில்லி மீட்டர் 8.2 சென்டிமீட்டர், காக்காச்சி எஸ்டேட் பகுதியில் 6.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 14 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 33.18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர பகுதியை பொறுத்தவரை 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான காற்று வீசி வருகிறது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் விட்டு விட்டு சாரல் அடித்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சேரன்மகா தேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம், கூடங்குளம், பணகுடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்பை சுற்றுவட்டாரத்தில் 15 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. களக்காடு, நாங்குநேரியில் சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் 2 நாட்களாக வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதோடு, அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் குண்டாறு அணை பகுதியிலும் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
ஏற்கனவே அந்த அணை நிரம்பி வழிந்து வரும் நிலையில், தற்போது கூடுதாலாக நீர் வெளியேறி வருகிறது. அடவி நயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 16 மில்லிமீட்டரும், ராமநதியில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 78.50 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 113 அடியை கடந்துள்ளது.
- தப்பியோடிய விசாரணை கைதியான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 37).
இவர் தற்போது கரையிருப்பு ரைஸ்மில் தெருவில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடி, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 25-ந்தேதி இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் அவருக்கு வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் ஜெயில் அதிகாரிகள் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விசாரணை கைதியான மணி கண்டனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாநகர பகுதி முழுவதும் சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த
- சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
- மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
நெல்லை:
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், அண்டை பகுதியான தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்துள்ளது. இதனால் அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக மிக குறைவாகவே பெய்திருந்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கார் பருவ சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது.
அணைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால் பாசனத்திற்காக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பாபநாசத்தை ஒட்டி தாமிரபரணி ஆறு தொடங்கும் இடங்களில் நெல் நடவு பணிகள் முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச் செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணி முடிந்துவிட்டது.
தற்போது நெல்லை கால்வாய் மூலமாக பயன் பெறும் கண்டியப்பேரி உள்ளிட்ட மாநகரின் பல இடங்களில் நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் மாநகரை கடந்து பாளையங்கால்வாய் மூலமாக பாசனம் பெறும் இடங்களில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று சேர்வலாறு அணை பகுதியில் அதிக பட்சமாக 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணையின் நீர்மட்டம் 115.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம்120.77 அடியாகவும் இருக்கிறது.
அணைகளுக்கு வினாடிக்கு 415 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1,104 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மலைப்பகுதியில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.
இதனிடையே விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவிகளில் கூட்டம் கூட்டமாக சென்று உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ராமநதி அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், விடுமுறையையொட்டி அங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த அருவிகளில் இருந்து வரும் நீரின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மானூர் பெரிய குளத்திற்கும் குற்றாலம் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்தது.
- இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
நெல்லை,ஜூலை.28-
ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெரும்பாலான இடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கும்போது ரெயிலில் பழுது பார்ப்பு, எரிபொருள் செலவு என்பது நிலக்கரி மற்றும் டீசல் என்ஜின் ரெயில்களை விட குறைவாக இருந்ததன் காரணமாக தமிழகத்திலும் பல வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜின் மூலம் இயங்கிவந்த செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதையை மின்மயமாக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கியது. மலை குகை பகுதிகளிலும், பாலங்களிலும் சுமார் 34 கிலோமீட்டர் தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூரிலும், செங்கோட்டையிலும் 110 கிலோ வோல்ட் ரெயில்வே துணை மின் நிலையங்கள் தலா ரூ.28 கோடியில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.
அவை வெற்றிகரமாக முடிந்ததால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி வண்டி எண் 16101/16102 சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. வண்டி எண்.16791/16792 நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16327/16328 மதுரை-குருவாயூர் இடையேயான எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில் உள்ளிட்டவை இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்த மின்வழித்தடத்தில் 25 ஆயிரம் கிலோவோல்ட் மின்சாரம் வரும் என்பதால் பொதுமக்கள் அந்த இடத்தை பாதுகாப்பாக கடக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார வேகம் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரம் கொண்ட பொருட்களுடன் வாகனங்களை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்காக கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
- நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.
நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.
மேயர் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி மேலிட அறிவுறுத்தலின்படி மேயர் ராஜினாமா செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் 5-ந் தேதி நடக்க உள்ள நிலையில், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது.
நெல்லை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. கே.ஆர்.ராஜூ, கிட்டு, உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், பவுல்ராஜ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.
கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து மேயர் நாற்காலியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர்.
- இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜெயக்குமார் வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 2 மாதங்களுக்கு பின்னரும் அவரது மரண வழக்கில் போதிய தடயங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன் அவரது கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே 2 முறை விசாரித்துவிட்ட நிலையில் தொடர்ந்து பல்வேறு நபர்களிடமும், தொழிலதிபர்களிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் தனித்தனியே நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சியிடம் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது அவரிடம் ஜெயக்குமாருக்கும், அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? எத்தனை வருடங்கள் பழக்கம்? ஜெயக்குமார் தனது கடிதத்தில் முதல் நபராக குறிப்பிட்டிருக்கும் ஆனந்த ராஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் எத்தனை வருட பழக்கங்கள் இருந்து வந்தது? அவர்களுக்கு இடம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்கு உரிய பதில்களை ஜோசப் பெல்சி கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார் அடுத்ததாக விசாரணைக்கு அழைக்கும்போது வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
- ஜெயக்குமார் சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.
ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது.
இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப், சபாநாயகர் அப்பாவு-வுக்கு நெருக்கமானவராக வலம் வருவபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பெல்சியோடு, ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி.
- சுமார் 17 மணிநேரத்திற்கு பிறகு சென்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அட்ட காசத்தில் ஈடுபடுவது வழக்கம்.
பின்னர் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. உடனே அதனை கண்ட மக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த கரடி அங்கிருந்த பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்காமல் நின்றது.
இதுகுறித்து அறிந்து, அம்பை வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி இறங்காமல் இரவு வரையிலும் மரத்தின் மீது நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு அந்த கரடி மரத்தில் இருந்து நைசாக இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அந்த மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அதனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, நள்ளிரவில் தேன் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மரத்திலேயே தூங்கியதாகவும், அதன்பின்னர் இறங்கி சென்றுவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் 17 மணி நேரம் அந்த கரடி மரத்தின் மீதே நின்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் இறங்கி சென்றுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி இதே இடத்திற்கு கரடி ஒன்று வந்து மரத்தில் ஏறி நின்றுவிட்டு நள்ளிரவில் இறங்கி வனத்துக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்களை விளாசினார்.
டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை குவித்தது. இந்த அணியின் ராதாகிருஷ்ணன் 35 பந்துகளில் 50 ரன்கள், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் எஸ் கணேஷ் 25 பந்துகளில் 36 ரன்களை விளாசினர். நெல்லை சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், இமானுவேல் செரியன் மற்றும் சோனு யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் திருப்பூர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெல்லை அணிக்கு ரித்திக் ஈஸ்வரன் 35 பந்துகளில் 59 ரன்கள், அருண் கார்த்திக் 36 பந்துகளில் 51 ரன்கள், சோனு யாதவ் 23 பந்துகளில் 40 ரன்களை எடுத்தனர். திருப்பூர் அணிக்கு நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.






