என் மலர்
திருநெல்வேலி
- தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர்.
- திரைமறைவில் நடந்த ‘உள்ளடி’ வேலைகளால் மேலிடம் அதிர்ச்சி
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தி.மு.க. சார்பில் புதிய மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் தி.மு.க.-கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேர் இருப்பதால், ராமகிருஷ்ணன் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று நடந்த மறைமுக தேர்தலில், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.
இதைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்த உள்ள 55 கவுன்சிலர்களில் ஒருவர் மட்டும் வரவில்லை. மீதமுள்ள 54 பேர் ஓட்டு போட்டதில் ஒரு ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 30 ஓட்டுகளும், பவுல்ராஜூக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.

கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கவுன்சிலர் 23 வாக்குகள் பெற்றது கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தலைமையின் உத்தரவையும் மீறி கவுன்சிலர் பவுல்ராஜிக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், திரை மறைவுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்கள், கவுன்சிலர்களின் உள்ளடி வேலைகள் நடைபெற்றுள்ளது என்கின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் இருக்கும் கவுன்சிலர்கள் அனைவருமே அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளராக இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டவர்கள். இவர்களில் 90 சதவீதம் கவுன்சிலர்கள் தற்போது வரை அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே இருந்த மேயர் சரவணனும் இவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆனால் மேயர் ஆனதிலிருந்து அவருக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மாநகராட்சி பணிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தலையீடு அதிகரிக்க தொடங்கியதால் சரவணன் அவரை எதிர்த்து களத்தில் இறங்கினார். இதனால் மேயரை செயல்பட விடாமல் செய்யும் நோக்கில் கவுன்சிலர்களை அப்துல் வஹாப் தவறாக வழிநடத்தியதாக பலரும் புகார் கூறினர்.
ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அதீத நெருக்கடியின் காரணமாக சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அப்துல் வகாப்புக்கு ஆதரவான கவுன்சிலரை மேயராக அறிவித்தால் மட்டுமே மீண்டும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்சனை இன்றி நடைபெறும் என்று தி.மு.க தலைமை கருதியது.
இதன் காரணமாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவரது ஆதரவாளரான ராமகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை ஆதரித்து வாக்களித்தால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று சில கவுன்சிலர்கள் பேரம் பேசியதால் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவோடு இரவாக 'வைட்டமின் ப' வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ராமகிருஷ்ணனை தேர்வு செய்யும் பட்சத்தில் அப்துல் வஹாப்பின் தலையீடு மாநகராட்சியில் மீண்டும் எழுந்து விடும் என்றும், நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் எல்லாம் கிடைக்காது என சில கவுன்சிலர்கள் கருதினர்.
இதனால் போட்டி வேட்பாளர் யாராவது நின்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுமார் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததாகவே தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான் கவுன்சிலர் பவுல்ராஜ் தனித்து போட்டியிடவே அவருக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் வாக்களித்தது தெரியவந்தது. தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கனவோடு காத்திருந்த கவுன்சிலர்களில் சிலரும், தங்கள் சமுதாயத்தை புறக்கணிப்பதாக கருதும் சில கவுன்சிலர்களும் பவுல்ராஜூக்கு வாக்களித்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இது தவிர முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கானின் ஆதரவு கவுன்சிலர்கள், மாநகர செயலாளருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் என சிலரும் பவுல்ராஜூக்கு ஆதரவாக வாக்களித்திருக்க கூடும் எனவும், இதனால் பவுல்ராஜ் 23 வாக்குள் பெற்றிருக்கிறார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லைக்கு வந்த அமைச்சர் கே. என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஒரு கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட்டிருந்தால் நிச்சயமாக போட்டி இருந்திருக்காது எனவும், மேயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்றும் கவுன்சிலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் கட்சி தலைமையும் முறையாக ஆலோசிக்காமல் மேயர் வேட்பாளராக நிறுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். இனிவரும் மாநகராட்சி கூட்டங்கள் கண்டிப்பாக ஒரு யுத்த களமாக காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கவுன்சிலர்கள் சிலர் கூறுகின்றனர்.
கவுன்சிலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பின்னரும், போட்டி இல்லாமல் ஒரு மனதாக மேயரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா என அமைச்சர்களையும், அப்துல் வகாப எம.எல்.ஏ.வையும் கட்சி தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் பவுல்ராஜூக்கு பின்னால் இருந்து செயல்பட்ட கவுன்சிலர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடிக்க தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இரவு வீடு திரும்பாததால் கடைக்கு வந்து தந்தை பார்த்தபோது தான் சையது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
- கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சையது தமீமை வெட்டிக்கொன்று தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் ஆமீன் புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அமீர் அம்சா. இவரது மகன் செய்யது தமீம் (வயது 31).
இவர் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகே அம்பை சாலையில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளையும் இவர் செய்து வருகிறார்.
நேற்று இரவு தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செய்யது தமீம் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் அவர் கடைக்கு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அமீர் அம்சா சந்தேகம் அடைந்து கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே அவர் அவசரம் அவசரமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமீர் அம்சா கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செய்யது தமீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்யது தமீமின் குடும்பத்திற்கு தூத்துக்குடி, கயத்தாறு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு சொத்தை விற்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இடப்பிரச்சனை தொடர்பாக அந்த கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாமா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.
- வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு உள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று (திங்கட்கிழமை), மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் மாநகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
மேலும் வளாகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று காலை கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர். முன்னதாக தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சுகபுத்ரா முன்னிலையில் வேட்பு மனு வழங்கப்பட்டது. அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.
அப்போது தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார்.
தொடர்ந்து 2 பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் கிட்டுவுக்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாமூர்த்தி, முன்மொழிந்தார். கோகுல வாணி வழிமொழிந்தார்.
இதே போல் வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார். ம.தி.மு.க. கவுன்சிலரான சங்கீதா வழிமொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தொடங்கியது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கிட்டு வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் திமுக சார்பில் பேட்டியிட்ட கிட்டு 30 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவை சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
- கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர்.
- வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு உள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று (திங்கட்கிழமை), மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் மாநகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
மேலும் வளாகத்தில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து காலை 10 மணி முதல் கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர். முன்னதாக தி.மு.க மேயர் வேட்பாளர் ராம கிருஷ்ணன் சைக்கிளில் தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார். கவுன்சிலர்கள் தவிர வேறு யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சுகபுத்ரா முன்னிலையில் வேட்பு மனு வழங்கப்பட்டது. அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார். இதனால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 2 பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் கிட்டுவுக்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாமூர்த்தி, முன்மொழிந்தார். கோகுல வாணி வழிமொழிந்தார்.
இதே போல் வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் வசந்தா முன்மொழிந்தார். ம.தி.மு.க. கவுன்சிலரான சங்கீதா வழிமொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் தொடங்கியது.
- மனுவை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்ததால் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மேயர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை வந்தனர்.
இன்று காலை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சியில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டியின்றி கட்சி தலைமை முடிவு செய்யும் மேயர் வேட்பாளருக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
பின்னர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
கவுன்சிலர் கிட்டு அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர்.
- சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சாமி தரிசனம்.
- துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினார்.
திருச்செந்தூர்:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியின் போது பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் முருகன், நகரத் தலைவர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
- வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஒருவர் மீது தண்ணீரை சிந்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர்களுக்கிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மாணவர் தனது வீட்டில் இருந்து சிறிய அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீர் சிந்திய மாணவரை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர் அலறி துடித்தார். உடனே அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாணவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி செல்ல தடை.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன், திருவிழாவை யொட்டி வனப்பகுதியில் குடில் அமைத்து அங்கேயே தங்குவார்கள். அப்போது பூக்குழி இறங்குதல், கிடா வெட்டு என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.
திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடிலில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்வதற்காக இன்று மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று அதிகாலை 6 மணி முதலே வாகனங்களில் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இன்று 8 மணி அளவில் சுமார் 200 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பாபநாசம்-நெல்லை சாலையில் டானா பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் அதிக அளவிலான வாகனங்கள் செல்லும் என கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் இன்று மாலை 5 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் அரசு பஸ்களில் பக்தர்கள் செல்ல வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கிடையே திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், வனத்துறை, சிங்கை, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது.மேலும் தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடில்கள் அமைக்கப்படுகிறது. இதில் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பணம் செலுத்தி குடிலை வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளலாம்.
மேலும் 97 நிரந்தர கழிப்பறைகளும், 130 மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை வெகுவாக குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வெயில் அடிக்க தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1317 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 143 அடி கொண்ட அந்த அணையில் 120.45 அடி நீர் இருப்பு உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை கடந்து விட்டது. கொடுமுடியாறு அணையில் 27 அடியும், மணிமுத்தாறு அணையில் 70.73 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாஞ்சோலை மற்றும் காக்காச்சி எஸ்டேட்டுகளில் தலா 2 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையில் 117.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 71 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கருப்பாநதியில் 52.17 அடியும், ராமநதியில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77.90 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
- தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
- கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார்.
பாளை வி.எம் சத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றங்கள் ஒட்டு மொத்தமாக சமூகத்தில் நடக்கவே நடக்காது என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஆனால் ஒரு அரசாங்கம் குற்ற செயல்களை தடுப்பதற்கும், குற்ற செயல்கள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்தும் உள்ள அரசின் நடவடிக்கையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் உள்ள இந்த அரசாங்கம் முற்றிலுமாக சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையில் தான் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறக்கூடிய கொலைகள், நெல்லை மாவட்டத்தில் கூட காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார் என்பது கூட இதுவரை தெரியவில்லை.
தமிழகத்தில் எப்போதும் பாதுகாப்பு இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு கூட இங்கு உத்திரவாதம் இல்லை. அதாவது கட்சியின் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கு இல்லாத சூழ்நிலை தான் நிலவுகிறது.
இதுகுறித்து கருத்து சொல்லும் பொழுது பொறுப்பற்ற வகையில் பதில் அளிப்பதே இங்குள்ள சட்டத்துறை அமைச்சர் மற்றும் பலருக்கும் வழக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது.
- தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்திருந்த நிலையிலும், மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று பிற்பகலில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,940 கனஅடி நீர் அந்த அணைக்கு வருகிறது. 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 120.10 அடியை எட்டியுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127 அடியை கடந்த நிலையில் இன்று 2 ½ அடி உயர்ந்து 130 அடியை நெருங்கிவிட்டது. இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1154 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் மட்டும் நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரையிலும் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 52.50 அடி கொண்ட அந்த அணை நீர்மட்டம் 27 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 47 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 1.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 182 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 77 அடியானது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 82 அடியானது.
குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழியும் நிலையில், அடவிநயினார் அணை பகுதியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 117 அடியை எட்டியுள்ளது.
மாவட்டம் முழுவதும் இதமான காற்று வீசி வருகிறது. குளங்களுக்கு நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.






