search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
    X

    தருமபுரி பஸ்நிலையத்தில் பெய்த மழையினை படத்தில் காணலாம்.

    விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை

    • தேன்கனி கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
    • கால்வாய்கள் சீராக தூர்வாரப்படாததால் ஒட்டுமொத்த மழைநீரும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், கடந்த 3 மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அனல்காற்று வீசியதால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.

    கடந்த 4ம்தேதி, அக்னிநட்சத்திரம் தொடங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து நேற்று மாலை திடீரென தருமபுரி நகர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இந்த மழை தருமபுரி நகரில் விடிய விடிய பெய்துள்ளது.

    நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் பகுதியில், நேற்று மாலைபெய்த கனமழையின் காரணமாக, தொப்பையாறு அணை, பப்பிரெட்டியூர், கம்மம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள நீரோடை கால்வாய்களில் மழைநீர் செந்நிராகஓடியது.

    பப்பிரெட்டியூர் கிராமத்தில் பெய்தமழைக்கு, கால்வாயில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் இருந்து, வரப்புகளை உடைத்துக்கொண்டு, கால்வாயில் தண்ணீர் நுழைந்தது. கால்வாய் ஒட்டிய பகுதியில் சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். மேலும் அப்பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    வனப்பகுதியில் இருந்து வந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் சீராக தூர்வாரப்படாததால் ஒட்டுமொத்த மழைநீரும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

    அங்கு முருகன் என்ற விவசாயியின் தோட்டத்தில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி கிழங்கு செடிகளில் கால்வாயில் செல்லக்கூடிய மழைநீர் அனைத்தும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தேங்கியது.

    இதனால் மரவள்ளி கிழங்குகள் மற்றும் செடிகள் தேங்கியுள்ள மழை நீரால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை, தேன்கனி கோட்டை கெலமங்கலம் தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. இன்று காலை வரைமேகமூட்டத்துடன் தூரல் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    Next Story
    ×