search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பன் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
    X

    பாம்பன் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

    • மீன்கள் கிலோ ரூ.400 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை சரிந்துள்ளது.
    • புரட்டாசி மாதம் என்பதால் மீன்விலை மந்தநிலையை அடைந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன் பிடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கிருந்து 110 விசைப்படகுகள் தினமும் மீன் பிடிக்கச் செல்கின்றனர். 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு சென்று ஆழ்கடலில் மீன் பிடித்து வருவார்கள்.

    இவர்கள் பிடித்து வரும் மீன்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஒரு விசைப்படகில் 1 டன் முதல் 1.50 டன் வரை மீன்கள் பிடிபடும். முரல் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட சில மீன்கள் வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த மீன்கள் கிலோ ரூ.400 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை சரிந்துள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் மீன்விலை மந்தநிலையை அடைந்துள்ளது.

    இந்தநிலையில் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதாலும், வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்துவிட்டதாலும் பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று (2-ந்தேதி)முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் பாம்பன் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மீனவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேரடியாக 1000 மீனவர்களும், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபடும் 2 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக தினமும் ரூ.1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி பாம்பன் பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தால் மட்டுமே நாங்கள் தொழில் செய்ய முடியும். மீன்களுக்கு விலை இல்லாமல் நாங்கள் மீன் பிடித்து வந்தால் நஷ்டமே ஏற்படும். மீண்டும் மீன் விலை உயர்ந்த பின்னரே மீன்பிடிக்க செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×