என் மலர்
சேலம்
- பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையாளும் பிரிவு, மின் உற்பத்தி பிரிவு, சாம்பல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் வேலையை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் 5 தொழிலாளர்கள் ஏறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- நோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை பகுதியில் வசிப்பவர் தனபால் (வயது 50). இவர் அதே பகுதியில் மாடர்ன் ரைஸ் மில் வைத்து, அரிசி வியாபார கடையும் நடத்தி வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் வெளியூரில் படித்து வருவதால் தனக்கு சொந்தமான ரைஸ் மில்லில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் தனபால் வீட்டை பூட்டிவிட்டு ரைஸ் மில்லுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை ரைஸ் மில்லில் இருந்து வீடு திரும்பிய தனபால், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
- இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம்:
சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
- இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
சேலம்:
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம். இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
- கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து சால்வையை கே.பி.ராமலிங்கம் பறித்தபோது அவர் கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்டு உள்ளார். அதுதொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
- தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாங்கி பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக சேலம் கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெரு மற்றும் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படையினர் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த சுதர்சன் (25), தினேஷ்குமார் (24), கிஷோர் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பர் (56) உட்பட 13 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
மேலும் அதில் தொடர்புடைய இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள் 50 சிரஞ்ச், 2 மோட்டார் சைக்கிள், 11,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊசிகளையும் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
- முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
- எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.
அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.
இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.
2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.
எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
- கோ பேக் மோடி இல்லை நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.
சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, " GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், " நீங்க GET OUT MODI என ட்வீட் போடுங்கள்.. நாளை காலை 6 மணிக்கு நான் GET OUT STALIN என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்.
நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்றார்.
முன்னதாக, கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.
வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்றார்.
- திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
- உதயநிதி தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.
சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, " தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்" என்று அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.
காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது ?
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
- தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.
அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.
அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.
4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.
அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம்.
- ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
ஏற்காடு:
ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். தாவரவியல் பூங்காவில் டேலியா, பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு ஆகிய மலர் விதைகள் நூற்றுக்கு மேற்பட்ட தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் மட்டும் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதனால் தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.
எனவே கோடை விழா தொடங்கும்போது, நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
- பெண்கள் சிறையில் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட பல்வேறு கைதிகளும் அடங்குவர். சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கிடைப்பதாகவும், கைதிகள் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாகவும், சிறையில் இருந்தபடியே கைதிகள், நண்பர்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு அவர்களை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி வருவதாகவும் சிலர் புகார் கூறி வந்தனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 90-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறை வார்டன்கள், சிறை காவலர்கள் 50 பேர் என மொத்தம் 140 பேர் இன்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
தொடர்ந்து அங்குள்ள 19 பிளாக்குகளிலும் உள்ள கைதிகள் அறைகள், கைதிகளுக்கான ஆஸ்பத்திரி, உணவு தயாரிக்கும் கூடம், விவசாய நிலங்கள், காலியிடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அங்குள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன், சார்ஜர்கள், சிம்கார்டுகள் , கஞ்சா உள்பட ஏதாவது பொருட்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.
இது தவிர அருகில் உள்ள பெண்கள் சிறையிலும் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த சோதனைகளில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை அடிக்கடி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே சோதனை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் இன்று காலை ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






