என் மலர்
சேலம்
- தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ் கண்டன் (25). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமம் தோழுரை சேர்ந்த குமாரசெல்வம் என்பவரது மகள் ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் நட்பு காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமண வயதினை எட்டியிருந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்த இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக கதற கதற காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ்கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.
இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் ரோஷினியை கடத்திச் சென்ற கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டி.எஸ். பாளையத்தில் பதுங்கி இருந்த கும்பலை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோஷினியை மீட்டனர்.
மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்தரா மற்றும் அவரது சகோதரி சவுமியா, உறவினர் லட்சுமணன், ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் வழக்கில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்ட ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை எடப்பாடி போலீஸ் நிலைய பெண் போலீசார் செய்து வருகின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.
- அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
- 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ரூ.10-க்கு உணவு வழங்கி ரூ. 100 கோடி வரை வசூலித்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நூதன முறையில் அரங்கேறிய மோசடி சம்பவத்தில் மக்கள் ஏமாற இருந்தனர். எனினும், காவல் துறையினர் மோசடி கும்பலை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த மோசடி கும்பல் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10-க்கு உணவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.
விளம்பரத்தை நம்பி பலரும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். நேற்று, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. திருமண மண்டபத்தில் இருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 81.16 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 111.92 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.16 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும்.
- டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
ஓமலூர்:
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும். தி.மு.க. ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்து தி.மு.க. அரசு சாதனை படைக்க உள்ளது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், சேகர் பாபுவும் என்னை 'அமைதிப்படை அமாவாசை' என்று விமர்சனம் செய்கிறார்கள். இருவரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்த போது சட்டசபையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்களை எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்று அவைக்குறிப்பில் உள்ளது என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு 'அமைதிப்படை அமாவாசை' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். தனக்குத்தானே அந்த பெயரை தேர்வு செய்து கொண்டார். அமைச்சர்கள் சேகர்பாபுவும், செந்தில் பாலாஜியும் அரசியலில் வேடந்தாங்கல் பறவைகள் போன்றவர்கள்.
சில காலம் ஒரு இடத்தில் இருப்பார்கள். சில காலம் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு. கட்சியின் மீது விசுவாசம் இருப்பவர்கள் என்னை போன்று ஓரிடத்தில் நின்று பொறுமை காப்பார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோன்று அரசு கொள்முதல் நிலையங்களில் 17-ல் இருந்து 21 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அங்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு திருப்பதியில் 2, 3 நாட்கள் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யவில்லையா? என்று கூறுகிறார். திருப்பதியில் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அது போன்று இங்கு என்ன வசதிகள் உள்ளது? பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதை விட்டு விட்டு அவர்களை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை கடந்த ஆண்டு 3-வது முறை நிரம்பியது. குறிப்பாக ஆண்டின் கடைசிநாளில் அணை 3-வது முறையாக நிரம்பியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது கடந்த 1-ந் தேதி முதல் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
- சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஏற்காடு:
தமிழகத்தில் கடந்த 13-ந் தேதி முதல் பொங்கல் தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். குறிப்பாக ஏற்காடு வந்துள்ள இவர்கள் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

குளிர் அதிகமாக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் படகு பயணம் செய்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்113.24 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 83.09 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 3 முறை நிரம்பியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு அணை 3-வது முறையாக 120 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அதே நேரம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் அதிகபட்சமாக 12 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் கடந்த 18 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்113.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 129 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 83.09 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த போது லைலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- ரெயில் நிலையம் 5-வது நடைபாதையிலேயே லைலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
சேலம்:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா-லைலா தம்பதியினர் கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் லைலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததன் காரணமாக பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு நேற்று இரவு கணவருடன் கேரளாவில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த போது லைலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக லைலா ரெயிலில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார்.
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஆனால் அதற்குள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் 5-வது நடைபாதையிலேயே லைலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கண்ணன் மற்றும் டிரைவர் வடிவேல் ஆகியோர் தாய் லைலாவுக்கும், குழந்தைக்கும் முதலுதவி அளித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் தண்ணீர் திறப்பு படிபடியாக குறைக்கப்பட்டு வந்தது. இன்று காலை டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 745 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 674 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 85.76 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
- குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 31-ந்தேதி மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீரை விட, கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
கடந்த 3-ந்தேதி முதல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட தினமும் கூடுதலாக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந்தேதி 12 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 831 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 116.10 அடியாகவும், நீர் இருப்பு 87.38 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
நீர்வரத்து 1000-க்கும் கீழ் சரிந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பின் அளவை மேலும் குறைத்துள்ளனர். அதன்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது.
- கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 694 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






