என் மலர்tooltip icon

    சேலம்

    • ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
    • மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    • சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், நாம் தழிமர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வெங்கடாஜலத்தை இன்று முதல் கட்சிபொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை.
    • 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார்.

    இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    இவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாசனத்தின் மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது.
    • மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையின் நீர்இருப்பு குறைவாக இருந்ததால் வழக்கம் போல் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. காலதாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 533 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 79.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை.
    • கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.

    சேலத்தில் இன்று நடந்த பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி பேசினார்.

    அப்போது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களாக அன்புமணி கூறியதாவது:-

    நெக்ஸலிசம் என்று ஒன்று தமிழ்நாட்டில் இல்லாமல் போனதுக்கு காரணம் மருத்துவர் அய்யா. எவ்வளவோ இருக்கு.. பேசிக்கிட்டே போகலாம்... எவ்வளவு செய்தீர்கள் என்று மக்களுக்கு சொல்லலாம் என்றார்.

    அப்போது ஒரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு உன்னையும் தான் சேர்த்து சொல்றேன். உன் தொகுதியில வாங்குனியே ஓட்டு... உட்காரு. 52ஆயிரம் ஓட்டு வாங்குன தொகுதி அதெல்லாம். இது எல்லாருக்கும் தான் சொல்றேன். 10 மாதம் தான் இருக்கு... களத்துல இறங்கணும். வெறி வரணும். கோபம் வரணும்... என்றார் மீண்டும் அதே நிர்வாகியிடம் வருமா? என கேட்டு பின், உன் முகத்த பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே எனக்கு... களத்தில் இறங்குகள். இரண்டில் ஒன்று பார்த்துக்கலாம். என்று சொல்லிக்கொண்டு மற்றொரு நிர்வாகியின் பெயரை குறிப்பிட்டு என்ன கோவம் வந்துருச்சா என கேட்டார்.

    இதனிடையே, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அருகருகே அமர்ந்தும் ராமதாஸ்- அன்புமணி பேசிக்கொள்ளவில்லை. கடந்த மாதம் நடந்த சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    • மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.
    • 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும்.

    * வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    * வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இருந்தது.

    * மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார்.

    * எம்.ஜி.ஆர். ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.

    * கலைஞர் கூட வன்னியர்களுக்கு ஏதோ கொஞ்சம் செய்தார்.

    * கலைஞர் MBC வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தார்.

    * ஜெயலலிதா வன்னியர்களுக்கு நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை.

    * எடப்பாடி பழனிசாமி காலத்தில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    * நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தால் உள் ஒதுக்கீடு ரத்தானது.

    * எங்களிடம் செய்து தருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

    * 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என கூறுகிறார் முதலமைச்சர்.

    * வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

    * நானும் ராமதாசும் பலமுறை முதலமைச்சர் சந்தித்து விட்டோம் என்றார். 

    • கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர்.
    • நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் முத்தையால் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 46). வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி ரேகா (40). இந்த தம்பதியின் மகள் ஜனனி (17). ஒரே மகள் ஆவார். இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பால்ராஜ் தான் வசித்து வந்த இடத்தில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதியதாக 2 தளங்களை கொண்ட அடுக்குமாடி வீடு கட்டினார். மேலும் மனைவியும் தனியாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்ப செலவுக்கும், கடன் தொகைக்கும் செலவழித்து வந்தார்.

    இதனிடையே அவருக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கடன் தொகையை மாதந்தோறும் செலுத்த முடியாமல் தாமதமானது. கடன் தொகையை குறிப்பிட்ட நாளில் சரியாக கட்டாததால் கடன் தொகை, அபராத வட்டியுடன் சேர்த்து பல மடங்கு அதிகமானது.

    இதனால் கணவன்-மனைவி இருவரும் செய்வதறியாது தவித்தனர். இதனிடையே கடன் தொகையை திரும்பி கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தினமும் குடும்பத்தினர் மன வேதனையில் தவித்தனர்.

    நேற்றும் வங்கியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வந்து கடன் தொகை கேட்டு சத்தம் போட்டனர். அப்போது நாளை (இன்று) கடனை கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

    இந்த நிலையில் வங்கியில் கடன் செலுத்த பணம் இல்லாததால் மன வேதனை அடைந்த பால்ராஜ் இரவு உயிரை விட முடிவு எடுத்தார். நேற்று இரவு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் உறவினர் சந்தேகம் அடைந்தார். உறவினரின் மகள் வழக்கம்போல் பள்ளிக்கு ஜனனியுடன் செல்வார்.

    இதனால் ஜனனியை பள்ளிக்கு கூப்பிட வேண்டி உறவினர் மகள் அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் அறையில் பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய 3 பேரும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர்.

    இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் கீதா மற்றும் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி, மகள் ஆகிய 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அறையில் கடிதம் இருக்கிறாதா? என சோதனை நடத்தினர். இதில் ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. பால்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். அதில் கடன் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.

    மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அணையின் நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறிப்பிட்ட நாளில் அல்லது பின்னர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு வந்ததும் அதிகாரிகள் தண்ணீர் நிறுத்தம் செய்வார்கள்.

    • பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
    • கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்ததால் குளிரின் தாக்கம் சற்று குறைந்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடாமாடுகின்றனர்.

    இந்த குளிர் காலை 11 மணி வரை நீடிப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிர்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் நேற்று குளிரின் தாக்கம் சற்று அதிகரித்தது. இன்று மேலும் பனிப்பொழிவு அதிகரிப்பால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது.

    இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்திய படியே பொது மக்கள் தூங்கும் நிலை ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் 9 மணி வரை குளிரின் தாக்கம் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கும் நிலையே நீடித்தது.

    • தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சேலம்:

    90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.

    97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.

    • 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
    • நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்ட பொருளாளர் சதீஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் சேலம் மேற்கில் போட்டியிட்ட நாகம்மாள் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ள நிர்வாகிகள், அதற்கான காரணம் ஏதும் கூறவில்லை.

    ×