என் மலர்tooltip icon

    சேலம்

    • அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது.
    • அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கோடைகாலத்திலும் வினாடிக்கு 500 அடிக்கு மேல் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1385 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
    • கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.

    கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.

    மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

    இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.

    ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.

    முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வரி உயர்வை திரும்ப பெற கோரி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
    • கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகள மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு கனிம வள வரி என்ற பெயரில் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்குவாரி உரிமையாளர்கள் இந்த பல மடங்கு வரி உயர்வால் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய வற்றிற்கு 1 யூனிட்டிற்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் அரசு வரியை குறைக்கவில்லை.

    இந்த நிலையில் வரி உயர்வை திரும்ப பெற கோரி குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குவாரி தொடர்பாக ரூ. 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் கிடைக்க ாமல் கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குவாரி உரிைமயாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
    • உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    சேலம்:

    டீசல் விற்பனை வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், 19 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கர்நாடகாவில் உள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாததால் தண்ணீர் வினியோகம், கியாஸ் வினியோகம் உள்பட அத்தியாவசிய பணிகளும் முடங்கி உள்ள நிலையில் அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு வரும் லாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட வில்லை.

    கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே உள்ள பொம்ம சந்திரா பகுதிகளில் லாரிகளை மொத்தமாக நிறுத்தி வைத்து போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஓசூர், ஜுஜுவாடி, மூக்கண்டப்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து பொருட்கள் ஏற்றிய லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் அந்தந்த மாவட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒரே நாளில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதன் உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், பூண்டு, வெங்காயம், எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுவதும் தடை பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் விரைவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் 10 ஆயிரம் லாரிகளிலும் வேலை பார்க்கும் டிரைவர், கிளீனர், லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 10 ஆயிரம் லாரிகளுக்கும் ஒரே நாளில் ஒரு லாரிக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் லாரி உரிமைாளர்களுக்கு மொத்தத்தில் ரூ. 20 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிைடயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் சித்தாராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    • நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.
    • அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன.

    பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் க ன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. இதனால் அங்கு இன்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கறது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 26.2, சேலம் மாநகர் 10.6, ஏற்காடு 7.6, சங்ககிரி 4, எடப்பாடி 2.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர்.
    • விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயி. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் பழனிேவல் இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    வழக்கம்போல்  வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை, வெள்ளி டம்ளர், குத்து விளக்கு உள்ளிட்ட 1 கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஆத்தூர் நகர போலீசில் பழனிவேல் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

    • குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இம்மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 60 வயதான கூலித் தொழிலாளி பழனிசாமி என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இதில் கர்ப்பமான மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சேலம் மாவட்ட போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பூரணம் தலைமையிலான போலீசார், மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை பெற காரணமான கூலி தொழிலாளி பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    மும்பை, சென்னை உட்பட பல இடங்களில் தேடிய போலீசார் ஒரு வழியாக முதியவர் பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.

    இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணை பராமரிப்பு சிறப்பாக உள்ளது.
    • மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் தமிழக நீர்வள துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை என்ஜினீயர் தயாள குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் மங்கத்ராம்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டூர் அணை பராமரிப்பு சிறப்பாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆய்வுப் பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது. தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். மீண்டும் பாசன காலம் முடித்த பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.79 அடியாகவும், நீர் இருப்பு 75.30 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதோடு ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்ததண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2520 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 107.79 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது.
    • கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் வீடுகளில் மு டங்கினர். சேலத்தில் நேற்று 101.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக எடப்பாடி மற்றும் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ள காடாக காட்சி அளித்தது. ஏற்காட்டில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னல் ஏற்பட்டது. ஆனால் லேசாான தூறலுடன் மழை நின்று போனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது. சங்ககிரி 10.4, சேலம் மாநகர் 3, ஏற்காடு 2, ஆனைமடுவு 1 என மாவட்டம் முழுவதும் 66.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எருமப்பட்டி, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்பட பல பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 26.2, நாமக்கல் 4.5, பரமத்திவேலூர் 30, புதுச்சத்திரம் 4, சேந்தமங்கலம் 2, திருச்செங்கோடு 8, கலெக்டர் அலுவலகம் 7, கொல்லிமலை 10 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 151.7 மி.மீ. மழை பெய்து உள்ளது.

    ×