என் மலர்tooltip icon

    சேலம்

    • ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன.
    • ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளான அண்ணா பூங்கா, மான் பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், படகு இல்லம், சேர்வராயன் கோவில், கிளீயூர் நீர் வீழ்ச்சி, காட்சி கோபுரம் உள்பட பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு படகு குழாமில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    மாலை நேரத்தில் ஏற்காட்டில் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதுடன் படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்பு விசைப்படகு துடுப்பு படகு மட்டுமே இயக்கப்பட்டது. படகு சவாரி மழையால் தடைபட்டதால் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகிற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    மேலும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. அதேபோல் உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வெள்ளிக்கிழமையான இன்றும் காலை முதலே ஏற்காட்டில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன. மேலும் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவுவதால் ஏற்காட்டில் இயற்கை சூழலை ரசித்த படி குடும்பத்துடன் பொது மக்கள் வலம் வருகிறார்கள். இதனால் அங்குள்ள முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    • கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.
    • நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடிக்கிறது. குறிப்பாக நேற்று 102.2 டிகிரி வெயில் பதிவானது.

    இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. கடும் வெயிலால் பொதுமக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள்.

    காலையில் இருந்தே அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அதிகளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.

    வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு, செயற்கை குளிர்பானங்களை நாடுகின்றனர்.

    மேலும் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே முடங்குகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கின்றன. இதனால் உடல் முழுவதும் வியர்வை வியர்த்து கொட்டுகிறது. தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர்

    இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கடலோர பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்று குவிதல் காரணமாக இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1363 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால் கோடையிலும் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    • பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.
    • குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    நாகர்கோவில்- பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 17236) மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 7.15 மணி அளவில் நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் உள்ள கடைசி பொது பெட்டியில் பயணம் செய்து வந்த வீரமணி (வயது 29) என்பவரிடம் மதுரை ரெயில் நிலைய நடைமேடையில் வண்டி நிற்கும்போது பெயர், முகவரி தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.

    அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது. அடுத்த ரெயில் நிலையமான திண்டுக்கல் வந்தும் குழந்தையை கேட்டு யாரும் வராததால் இது குறித்து வீரமணி உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் ரெயில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டபானி, பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் வீரமணி என்பவரிடம் இருந்து குழந்தையை பெற்று போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் குழந்தைகள் நல காப்பக களப்பணியாளரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் யார்? என கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

    • 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    கோடை விடுமுறையையொட்டி சேலம், நாமக்கல் கரூர் வழியாக பெங்களூரு-மதுரை இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பங்காரு பேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலத்திற்கு வந்தடையும். கரூருக்கு அதிகாலை 1.43 மணிக்கும், மதுரைக்கு காலை 6.15 மணிக்கும் வந்தடையும். மறு மார்க்கத்தில் மே மாதம் 1-ந் தேதி காலை 9,10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடையும் இந்த இரவு 7. 30 மணிக்கு பெங்களூருக்கு சென்றடையும். 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 2, 3 அடுக்கு ஏ.சி. பெட்டி 16, லக்கேஜ் பெட்டி உள்பட மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

    அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
    • மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 24-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

     அந்த வகையில் நாளை ஏப்ரல் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    சின்னக்கடை வீதி முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோயில், மேட்டு தெரு, ஈஸ்வரன் கோயில் பகுதி, ப்ரெட்ஸ் ரோடு, அருணாச்சலம் ஆசாரி தெரு, கடைவீதி, கல்லாங்குத்து ஒரு பகுதி, ஏடிசி டிப்போ, கோவிந்தன் தெரு, பெரியார் தெரு, வ உசி மார்க்கெட், மடம் தெரு, பழைய பேருந்து நிலையம், வணக வளாகம், சிங்க மெத்தை, அசோக்நகர், பாலாஜி நகர், பச்சப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்க தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். 

    • குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
    • போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

    இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

    போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    • அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
    • தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.59 அடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோடையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது.
    • தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது.

    சேலம்:

    பா.ஜ.க. கட்சியின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் ஓமலூரில் பா.ஜ.க. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க. தொண்டர்கள் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போது காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழக்குப்பதிவு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் 'பாத யாத்திரை' நடத்தி கட்சியை வளர்த்தார். அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முறையில் பாத யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார்.

    தமிழகத்தில் தாமரை மலர்ந்து தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். நாம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. மிகப்பெரிய கூட்டணி. ஒரு சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். ஆனால் இதுதான் நியாயமான கூட்டணி. எனவே தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பலர் இந்த கட்சிக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்கள் தியாகம் செய்ததால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். கூட்டணி வெற்றி பெற எத்தனை சீட் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. ஏன் என்றால் தேசிய தலைமை முடிவு செய்யும். தேசிய தலைமை ஜெ.பி.நட்டாவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள்.

    தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதை மறைப்பதற்காக நீட் தேர்வு, மாநில சுயாட்சி எனவும், கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என வெறும் தீர்மானங்கள் மட்டுமே போட்டு விட்டு சென்று விட்டனர். 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்திலிருந்த தி.மு.க. அப்போது இதற்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். நிச்சயமாக ஆட்சி மாற்றம் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×