என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன.
- ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளான அண்ணா பூங்கா, மான் பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், படகு இல்லம், சேர்வராயன் கோவில், கிளீயூர் நீர் வீழ்ச்சி, காட்சி கோபுரம் உள்பட பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு படகு குழாமில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மாலை நேரத்தில் ஏற்காட்டில் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதுடன் படகு இல்லத்தில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்பு விசைப்படகு துடுப்பு படகு மட்டுமே இயக்கப்பட்டது. படகு சவாரி மழையால் தடைபட்டதால் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகிற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மேலும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. அதேபோல் உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெள்ளிக்கிழமையான இன்றும் காலை முதலே ஏற்காட்டில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்று வருகின்றன. மேலும் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவுவதால் ஏற்காட்டில் இயற்கை சூழலை ரசித்த படி குடும்பத்துடன் பொது மக்கள் வலம் வருகிறார்கள். இதனால் அங்குள்ள முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.






