என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி
- 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையே மட்டும் தான் போட்டி என்று விஜய் தெரிவித்தார்.
- நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.
இன்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்றைய தினம் பொதுமக்களுடைய பிரச்சினைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேச முயன்றபோது எனக்கு சட்ட பேரவை தலைவர் அனுமதி வழங்க வில்லை. குறிப்பாக உசிலம்பட்டி காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், மற்றொன்று சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக பேச முயன்றேன். அனுமதிக்கவில்லை.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையில் என்னுடைய கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க முற்பட்டேன். அதற்கு அனுமதி கொடுக்க வில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள் என்றார்.
தொடர்ந்து நிருபர்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.விற்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் போட்டி என நடிகர் விஜய் பேசி உள்ளது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அது அவருடைய கருத்து என்றும், ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளர்ச்சிக்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காகவும் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க தான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டு பிரதான எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர் என்றார். பின்னர் செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து கேள்வி கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.






