என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கல்லூரி மாணவருடன் திருமணமான பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரை சேர்ந்த சுப்பையா மகன் மணிகண்ட பிரபு (வயது 20). புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், மலேசிய நாட்டில் வசித்து வரும் பிரியா (35) என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் பேஸ்புக் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இருப்பினும் அவர் மணிகண்ட பிரபுவை காதலித்து வந்துள்ளார். தன்னை விட 15 வயது குறைந்தவர், கல்லூரி மாணவர் என்று தெரிந்தும் கூட, பிரியா காதலை கைவிட வில்லை. மகனின் முறைகெட்ட காதலை அறிந்த பெற்றோரும் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை.

    பேஸ்புக் மூலம் பேசி பழகி வந்த அவர்கள் நேரில் சந்தித்து பேசவும் முடிவு செய்தனர். அதன்படி பிரியா, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, மலேசியாவில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டபிரபு அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதையடுத்து மணிகண்ட பிரபுவின் தாய் அன்புராசு பொன்னமராவதி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில், தனது மகனை பிரியா கடத்தி சென்று விட்டதாகவும், எனவே அவனை மீட்டு தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டபிரபுவை தேடி வருகின்றனர்.

    மலேசியாவில் இருந்து தஞ்சை வந்த பிரியா, மணி கண்டபிரபுவை அழைத்து கொண்டு வெளியூருக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர். 

    ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே மாஞ்சக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாயில் நேற்று முன் தினம் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் மேல முத்துக்காடு சின்னையா மகன் சுப்பிரமணியன் (வயது 37) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுப்பிரமணியன் மழைக்காக அருகில் உள்ள புளியமரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து பிரச்சினையில் தந்தையை கொலை செய்த மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா செட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 65). இவரது மகன் சுயம்புராஜ் என்கிற சோம்புராஜ் (45). பால்ராஜ்க்கும், சோம்புராஜ்க்கும் இடையே குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்தை பிரிப்பதில் பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இதில் சோம்புராஜ் சொத்தை பெண்களுக்கு பிரித்து கொடுக்கக்கூடாது எனக்கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 16.11.2014-ம் ஆண்டு வீட்டின் அருகே வைத்து சோம்புராஜ், பால்ராஜை கட்டையால் தாக்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்த பால்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை கொலை செய்ததாக சோம்புராஜை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் மாலிக் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சொத்து பிரச்சினையில் தந்தையை கொலை செய்த சோம்புராஜ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக தர்மராஜ் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது.

    10-ம் வகுப்பில் தோல்வி பெற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்கதேவையில்லை.

    மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.

    மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணினை உதவித்தொகை விண்ணப்பத்துடன் இணைப்பதற்கு உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் ஆதார் அட்டையுடன் வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பகுதியில் உள்ள வெட்டுக்குளத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு பகுதியில் உள்ள வெட்டுக்குளத்தில் சுமார் 10 ஏக்கருக்குமேல் பரப்பளவில் நிலம் காணாமல் போய் விட்டதாக கூறி, அப்பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு துண்டு பிரச்சுர போஸ்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. குளத்தை மீட்க துணிச்சலான அதிகாரிகள் தேவை என கூறி வெளியிட்டிருந்தனர். இந்தத் துண்டுப்பிரசுரம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பு குளத்தை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, கறம்பகுடி தாசில்தார் வில்லியம் மோசஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லாமேரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குளத்தை ஆக்கிரமித்து நடவு மற்றும் பயிர்கள் செய்திருந்த விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    பின்னர் அரசு நில அளவையர்களால் ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணி தொடங்கியது. இதற்கிடையே அப்பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் விவசாயம் செய்து வருவதாகவும், அப்பகுதி விவசாயிகள் அதிகாரி முன்னிலையில் கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஆலங்குடியில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆலங்குடி:

    கஜா புயலால் ஆலங்குடி பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 32 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி, கோவிலூர் ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கக்கோரி கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வருவாய் வட்ட ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதி இருக்கும் பொருட்களை இதுவரை பெறாதவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பெரும்பாலான கடைகள் நகராட்சிக்கு முறையாக மாத வாடகை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வருவாய் அலுவலர் காந்தி தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், நைனாமுகமது, உதவி ஆய்வாளர்கள் கணேசன், திருமலைக்குமார், பாண்டியன் உள்ளிட்டோர் நகராட்சி பகுதிகளில் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாத அனைத்து கடைகளும் பூட்டி சீல் வைக்கப் படும் என தெரிவித்தனர்.
    அறந்தாங்கியில் சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து அப்பகுதியில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் வசித்து வரும் சந்திரகுமார் (வயது 50) என்பவர் கீரமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் தன் மகள் மெளலி(18) என்பவரை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக ராஜேந்திர புரம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிந்தார், அருகில் வனிதா (35) என்பவரும் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தனியார் பள்ளி வாகனம் வேகமாக வந்ததால் விபத்துக்கு ஏற்பட காரணம். எனவே அந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து.ராஜேந்திரபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு மட்டுமே உண்டு என்று புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை ஜம்மு, காஷ்மீருக்குள் நுழையவிடாமல் தடுத்தது கண்டனத்துக்குரியது. ஜம்மு, காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை இருப்பதையே இது காட்டுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளார். இரட்டை நிலைப்பாட்டில் இல்லை.

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது. ப.சிதம்பரம் கைதுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உணர்வு பூர்வமாக ஜனநாயக முறைப்படி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் எண்ணிக்கையை பார்க்காமல் உணர்வுகளை பார்க்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பா.ஜனதா கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்ததை வைத்து பார்க்கும்போது, அவர் பட்ஜெட் தாக்கல் செய்ததில் தவறு உள்ளதை உணர்த்துகிறது.

    காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பா.ஜனதா அரசின் திட்டங்களை ஆதரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறி உள்ளது தற்போது உள்ள சூழலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை கெடுக்க நினைப்பதால் ஏற்பட்ட ஆதங்கமே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காகவே அவர் இதுபோன்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு மட்டுமே உண்டு.

    திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முயற்சி கண்டனத்துக்குரியது. மேலும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்து வருவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியின் செயல்பாட்டில் எந்த விதமான குறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கறம்பக்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் இருந்து டிப்பர் லாரியில் மணல் அள்ளி வந்த தீத்தானிபட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடம் விசாரணை செய்த போது, அனுமதி இன்றி எடுத்துவரபட்ட மணல் என்பது உறுதியானது. பின்னர் அவர் மீதுவழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.

    கந்தர்வகோட்டை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி மலர்கொடி (38). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். வளவம்பட்டி விளக்குரோடு அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களில், பின்னால் இருந்தவர், மலர்கொடி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்கொடியும், செந்தில்குமாரும் சுதாரிப்பதற்குள், மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்தனர். 2 பேரும் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் மர்ம நபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. 

    இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    களமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனை திருநாவுக்கரசர் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    கீரனூர்:

    கீரனூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள களமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. 

    நிதிபற்றாக்குறை காரணமாக பணிகள் கிடப்பில் உள்ளன. ஏற்கனவே கட்டப்பட்ட இரும்புகம்பிகள், சிமெண்ட் பூச்சுக்கள் மற்றும் ரோடுகள் பெருமளவில் சேதமடைந்து விட்டன.

    நின்ற பணிகளை திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் முயற்சி எடுத்து ஒப்பந்தகாரர்களை மாற்றி மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். அப்பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் புதுகை  வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன்,காங்கிரஸ் தி.மு.க. பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    ×