என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத ஸ்ரீமாயூரநாதர் கோவில் உள்ளது.
பிரசித்திபெற்ற இக்கோவிலில் மாயூரநாதர் லிங்க வடிவிலும், அபயாம்பிகை தனி சன்னதியிலும் அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அபாயாம்பாள் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்காரத்தை ராஜ் என்ற அர்ச்சகர் செய்திருந்தார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த காட்சியை கண்ட ஒருசில பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் சுடிதார் அணிந்த நிலையில் காட்சிதந்த அபாயம்பிகையை படம் எடுத்துள்ளனர். அம்மன் சுடிதார் அணிந்துள்ள படத்தை சிலர் வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பாக வெளியானதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை பொதுச்செயலாளர் அழகிரிசாமி கூறியதாவது:- 7-ம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு இந்து கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
சீர்காழி:
சீர்காழியை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், தில்லை விடங்கன் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவர்களின் திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை நடைபெற்றதால் அதில் கலந்து கொள்வதற்காக அரூரிலிருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வேனில் சென்றனர். அந்த வேன் சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த ரமேஷ், நீதிமோகன் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. #tamilnews
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் முதற் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் 1999-ம் வருடத்தில் தொடங்கப்பட்டது. இங்கு தொல்லியல் சின்னங்கள், கற்சிற்பங்கள், மானிடவியல், விலங்கியல், தாவரவியல், நாணயங்கள், ஓவியங்கள் தபால் தலைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு மாதந்தோறும் சிறப்பு கண்காட்சிகள், போட்டிகள், சொற் பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச அனுமதியும், ஏனைய பார்வையாளர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இங்கு நாகை மாவட்டத்தில் கிடைத்த புராதன சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வடக்குப்பொய்கை நல்லூரில் கிடைத்த திமிங்கலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அழிந்து போன புதுவெளிக்கோபுரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காட்சிக்கூடத்தின் பராமரிப்பு பணி பற்றியும், புதிதாக இடம் தேர்வு செய்வது குறித்தும் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது அருங்காட்சியககாப் பாட்சியர் மருதுபாண்டியன், நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த அகரகொந்தகை வடக்கு செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவரது மனைவி அமுதா (30). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குழந்தைகளுடன் அமுதா தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அமுதாவிடம், செந்திலின் அண்ணன் குமார் (54) உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு அமுதா மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார்.
இந்த விஷயம் வெளியே சொன்னால் பிரச்சினை வரும் என்று குமார் கருதினார். இதனால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்ணெணையை எடுத்து அமுதா உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளமள என்று பரவியதில் அமுதா படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அமுதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழ்வேளூர்:
நாகை வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி மஞ்சுளா(வயது35). இவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது.
இதன்பேரில் நாகை ஏ.எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பலருக்கும் வாடிக்கையாக கஞ்சா விற்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது வீட்டிற்குள் ஒரு கிலோ அளவில் கஞ்சா பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் மஞ்சுளாவை நாகை வெளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரி குறித்து பொதுமக்கள் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார் அளித்தனர். இதில் ஆஸ்பத்திரி டாக்டர், டாக்டருக்கு படிக்காமலேயே சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர்கள் ராஜா, விஜயபாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி நடத்தி வந்த நடராஜன், டாக்டருக்கு படிக்காமலேயே தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
பின்னர் ஆஸ்பத்திரியை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கான 4 படுக்கைகள் கொண்ட அறைகள் இருந்தன. அங்கு இருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவ குழுவினர் கைப்பற்றி பொறையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், வனிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் நடராஜனை(வயது 45) கைது செய்தனர். கைதான நடராஜன் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர்.
போலி டாக்டர் நடராஜன், ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு மருத்துவக் குழு ஆய்வின்போது போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது இவர் மீண்டும் திருக்கடையூரில் ஆஸ்பத்திரி நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது மாவட்ட மாநாடு நடை பெற்றது. இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண் டார்.
இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் கடைசி பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கருப்பு பணத்தை மீட்போம் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது.
அது போல் விவசாயத்தை வரும் 2022 -ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அடுத்த தேர்தல் வந்து அதில் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என கூறியிருப்பது விவசாயிகளை ஏமாற்றுகின்ற வஞ்சிக்கின்ற அறிவிப்பாக உள்ளது.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்படும் என்று காத்திருந்த நிலையில் எதுவும் இல்லாதது ஏமாற்றமே. விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்துவிடாது.
வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். மொத்ததில் மத்திய அரசின் இன்றைய பட்ஜெட் அறிக்கை என்பது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
சீர்காழி:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் தேஷமுக் சேகருக்கு சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஸ் தலைமையில் 5 போலீசார் கொண்ட குழு இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சீர்காழி அருகே உள்ள செம்மங்குடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. அதில் மது பாட்டில்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி தனிபடை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பாக்ஸ், பாக்சாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பேலீசார் அந்த இடத்தில் சோதனை செய்த போது கட்டிடத்தின் அருகே உள்ள கழிவறையிலும் மதுபாட்டில்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. அதே தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிலும் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் 3 இடங்களிலும் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தமாக 109 பெட்டிகள் பறிமுதல் செய்தனர். அதில் 5 ஆயிரத்து 232 மது பாட்டில்கள் இருந்தது. மது பாட்டில்களை இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிக்கு அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
வேதாரண்யத்தில் தனியார் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. வேதாரண்யத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இக்கல்வி நிறுவனத்தில் ஆய்வு செய்து, பல்வேறு ஆவணங்களை கொண்டு சென்றனர். அப்போது இக்கல்வி நிறுவனம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு உரிய அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்நிறுவனத்தை மூடி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். தற்போது இக்கல்வி நிறுவனத்தில் 33 மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து கலெக்டர் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதனடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். போலீசார் மூலம் கல்வி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்னர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்து முழுமையாக தொடர்ந்து வேலை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வெற்றியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் போராட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்டக்குழு முத்துராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியத் தலைவர் பன்னீர்செல்வம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்து போராட்டம் குறித்து பேசினார். 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து குடும் பத்தினருக்கும் தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும், ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கும் வறட்சிக்கான 100 நாள் வேலையை வழங்கிட வேண்டும், வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலை, கூலி கிடைக்கும் வகையில் தொழிலாளர் பட்ஜெட்களை தயார் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்னதாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ஆணையர் சேகர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தனர். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி முடிவு எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மேலையூர் புலியடித்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (32). லாரி டிரைவர். இவருக்கும் அருளரசி (28) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த குருமூர்த்தி, அருளரசி இருவரும் விஷம் குடித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு இருவரையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குருமூர்த்தி இறந்தார். அருளரசி சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரரர் கோவில் 1500 ஆண்டுகளுக்கும்மேல் பழமையானது. பாடல் பெற்ற ஸ்தலமாகும். சிவபெருமான் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களை பொதுமக்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் குன்னலூர் கிராமத்தில் 1500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இதில் விளைந்த நெல் மணிகளை ஆண்டுதோறும் முதலில் நெல் கோட்டையாக கட்டி கோவிலில் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதுபோல் இவ்வாண்டும் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்த நெல் மணிகளை நெல் கோட்டையாக கட்டி இன்று காலை வேதாரண்யம் கொண்டு வந்தனர். அங்கு மேலவீதியில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் நெல் மணிகள் நிறைந்த நெல் கோட்டையை தலையில் சுமந்து ஊர்வலமாக வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவந்து சன்னதியில் வைத்து தீபாராதனை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி சுவாமிகள் அதனை பக்தர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார். இதையடுத்து அந்த நெல் கோட்டையை எடுத்து சென்று காயவைத்து அரைத்து பொங்கல் சமைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவர்.






