என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் திருக்கடையூரில் பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்ற ஒரு வாலிபரை நேற்று இரவு அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி பொறையாறு போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனே சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு இளங்கோவன் ஆகியோர் திருக்கடையூருக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தினர். இதில் திருட வந்த வாலிபர் பொறையாறு அருகே உள்ள சிங்கானோடை கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 37) என தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளி முருகனை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிப்பதற்காக சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு இளங்கோவன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.
மோட்டார் சைக்கிளை ஏட்டு இளங்கோவன் ஓட்டினார். பின்னால் முருகனும், சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியனும் உட்கார்ந்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சாலிப்பநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஏட்டு இளங்கோவன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஏட்டு இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த முருகன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான ஏட்டு இளங்கோவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான ஏட்டு இளங்கோவனுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை சித்தர்காடு ஆகும். ராணி என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். ராணி மணல்மேட்டில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்தும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சஞ்சய்குமார், மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு சென்று ஏட்டு இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மணியன் தீவு என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கடலில் டால்பின் மீன்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை ஒரு டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அந்த டால்பின் மீனை பார்வையிட்டனர்.
இறந்து கிடந்த டால்பின் மீன் 200 கிலோ எடையுடன் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் டால்பினை வனத்துறையினர் மீட்டு கடற்கரையில் புதைத்தனர்.
கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் ஒதுங்கியதை கேள்விப்பட்டு மீனவ கிராம மக்களும் வந்து பார்வையிட்டு சென்றனர். #tamilnews
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை 2-வது புதுத் தெருவில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உண்டியல் திறக்கப்பட்டு 2 மாதங்களான நிலையில் உண்டியலில் காணிக்கை பணம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் மஞ்சள் துணியை போட்டு மூடி வைத்திருப்பதை பார்த்தார். அவர் துணியை அகற்றி விட்டு பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவர் கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அதில் உண்டியலை உடைத்து கொள்ளையன் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
இது பற்றி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். #tamilnews
சீர்காழி:
சீர்காழி-சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் சேந்தங்குடியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரைக்கால், நாகப்பட்டிணம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ரெயில்வே கிராசிங் இருந்து வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சேந்தங்குடி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.13.50 கோடி செலவில் கட்டும் பணி 4 ஆண்டுகள் நடைப்பெற்று கடந்தஆண்டு ஜூலை மாதம் முதல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்தன.இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்துவருகிறது.
மேம்பாலத்தில் எல்.இ.டி பல்புடன் கூடிய 20 கம்பங்கள் மற்றும் மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலையில் 14 கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிந்து மின்விளக்குகள் எரியவிடப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றுக்கரை சித்தமல்லி ரோட்டு தெருவை சேர்ந்தவர் தில்லைசெல்வன். இவர் மணல்மேடு மின்வாரியத்தில் ஆபரேட்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி வாசுகி.சம்பவத்தன்று வீட்டில் வாசுகி கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் அருகில் சென்று தீயை அணைக்க பயந்து வாசுகி வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகைகள் உள்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு ஊராட்சியைச் சேர்ந்த இளந்தோப்பு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான சவுடு மண் குவாரி அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிகிறது. இதனை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்.டி.ஓ.விடம், சவுடு மண் குவாரி அமைத்தால், இங்கிருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் போக்குவரத்தால் எடமணல் கிராமத்திலிருந்து புதுப்பட்டினம் செல்லும் கிராமச் சாலை பாதிக்கப்படுவதுடன் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும், சுற்றுப்புறச் சுகாதாரமும் பாதிக்கும்.எனவே சவுடு மண் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.
சீர்காழி:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்தது. அதன்பிறகு ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது.
இதற்கிடையே இரவு, மற்றும் காலை நேரங்களில் கடும் பனிபொழிவு ஏற்பட் டது. இதனால் பொது மக்கள் கடுங்குளிரால் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது.
நள்ளிரவில் சுமார் 1½ மணி நேரம் மழை பெய்தது. இன்று காலையில் லேசான தூறல் மழை பெய்தது.
சீர்காழி பகுதியில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்வேளூர்:
நாகை அந்தணப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மோனிசா (வயது 22). பி.எட்.பட்டதாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு, வழியான்செட்டிகட்டளை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவ-மாணவிகளின் குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் துப்புரவு பணியாளர் நாகம்மாள் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி காலை பள்ளிக்கு வந்தார். அப்போது, குடிநீர் தொட்டிக்கு அருகே விஷ மருந்து பாட்டிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் வடிவேலிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியரும் பள்ளி மாணவர்களும், குழாயை திறந்து பார்த்தபோது தண்ணீர் வெள்ளையாக வந்தது. இதனால் யாரும் தண்ணீரை அருந்தவில்லை. இதுகுறித்து காரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று குடிநீர் தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பள்ளியின் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததால் பள்ளிக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம கும்பல், குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வேதாரண்யத்தில் இருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த குடிநீரை பரிசோதனை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பல உயிர்களை உரிய நேரத்தில் காப்பாற்றிய துப்புரவு பணியாளர் நாகம்மாளை குடியரசு தின நிகழ்ச்சியின் போது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டினர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் சி.சுரேஷ் குமார் நாகம்மாளை நேரில் அழைத்து பாராட்டினார். #tamilnews
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மயில்வாகனன். இவருக்கு சொந்தமான பெரிய விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த குமரமுத்து (வயது 30), கோபால் (45), ரஞ்சித் (26), சுப்பிரமணியன் (45), சிவக்குமார் ஆகிய 5 பேர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே உள்ள கடலுக்குள் விசைப்படகை நிறுத்தி நேற்று இரவு வலைகளை கடலில் வீசி உள்ளனர். அப்போது அந்த பகுதியில் இலங்கை மீனவர்கள் ஒரு சிறிய படகில் வந்தனர்.
இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்களின் விசை படகில் ஏறமுயன்றனர். இவர்கள் படகு பெரிய படகு என்பதால் இலங்கை மீனவர்களால் படகில் ஏற முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்கள் கடலில் வீசி இருந்த 300 கிலோ கொண்ட 6 கட்டு வலைகளை அவர்கள் அறுத்து வீசினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குமரமுத்து உள்பட 5 பேரும் செல்போன் மூலமாக மயில்வாகனனுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எறிந்த சம்பவம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேரும் கரை திரும்பிய பின்னர் தான் இது குறித்து விரிவான தகவல் கிடைக்கும். மேலும் இது குறித்து புகார் செய்யப்படும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடி சீசனையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகையை அடுத்த தரங்கம் பாடி பெருமாள் பேட்டையை சேர்ந்த செல்வம் என்ற மீனவர் பைபர் படகில் கோடியக்கரை பகுதியில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க சென்றார். அவர் இன்று காலை கரை திரும்பினார்.
அவரது வலையில் ஒரு ராட்சத கும்ப திருக்கை மீன் சிக்கியிருந்தது. 150 கிலோ எடை கொண்ட அந்த மீன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் மீனவர் செல்வம் மகிழ்ச்சியடைந்தார். அவரது வலையில் சிக்கிய கும்ப திருக்கை மீனை அனைத்து மீனவர்களும் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.






