என் மலர்
செய்திகள்

சீர்காழி ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி
சீர்காழி:
சீர்காழி-சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் சேந்தங்குடியில் ரெயில்வே கிராசிங் உள்ளது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காரைக்கால், நாகப்பட்டிணம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ரெயில்வே கிராசிங் இருந்து வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சேந்தங்குடி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.13.50 கோடி செலவில் கட்டும் பணி 4 ஆண்டுகள் நடைப்பெற்று கடந்தஆண்டு ஜூலை மாதம் முதல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்தன.இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்துவருகிறது.
மேம்பாலத்தில் எல்.இ.டி பல்புடன் கூடிய 20 கம்பங்கள் மற்றும் மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலையில் 14 கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிந்து மின்விளக்குகள் எரியவிடப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.






