என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
அந்தமான், இலங்கை, ஒரிசா கடல் பகுதியில் காணப்படும் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது ஆலிவ் ரெட்லி ஆமைகள். இவை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை முட்டையிட நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார் பகுதி கடற்கரைக்கு வந்து செல்லும்.
அங்கு நள்ளிரவு நேரங்களில் கரையேறி கடற்கரையில் குழி தாண்டி 200 முட்டைகள் வரையிட்டு பின்னர் மீண்டும் குழியை மூடிவிட்டு கடலுக்கு ஆலிவ்ரெட் ஆமைகள் சென்று விடும்.
இந்நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் முதல் பழையார் மீனவர் கிராமம் வரை சுமார் 12 கி.மீட்டர் தூரம் கடற்கரையோரம் 200-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் வந்து இறந்து கிடந்த ஆமைகளை பார்வையிட்டனர். அப்போது மீனவர்கள் கூறுகையில்;
இந்த ஆமைகள் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், எனவே இறந்து கிடக்கும் ஏராளமான ஆமைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தொடுவாய் கடற்கரையோரம் உள்ள மீன் எண்ணை உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் ஆமைகள் இறந்து இருக்கலாம். எனவே ஆமைகள் இறந்தது குறித்து கடற்கரையோரம் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் வசிப்பவர் விக்னேஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மாடி வீடு கட்டி வருகிறார்.
இவர் வீட்டின் பின் பகுதியில் கழிவறை கட்டுவதற்காக ஆட்களை வைத்து நேற்று பள்ளம் தோண்டினார். 7அடிக்கும் கீழ்பள்ளம் தோண்டிய போது சிலை ஒன்று கிடைத்தது. மேலும் தோண்டும் போது ஒன்றன் பின் ஒன்றாக 11 சாமி சிலைகள் கிடைத்தன. சிலைகள் அனைத்தும் 1அடி முதல் 3அடி உயரம் உடையதாக இருந்தது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் ராமர்- லட்சுமணர் உள்ளிட்ட சாமி சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டவை ஆகும்.
கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள் பழங்கால சிலைகள் என்றும், பல லட்சம் மதிப்புடையது என்றும் தெரியவந்துள்ளது. அவைகளை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றி நாகையில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார். #tamilnews
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பட்டமங்கலத் தெரு உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஏராளமான கடைகள் அருகருகே நெருக்கமாக அமைந்துள்ளது. இந்த தெருவில் மருத்துவமனையை ஒட்டி ‘பாம்ஸ் ரெசிடென்சி’ என்ற தங்கும் விடுதியுடன் கூடிய உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த உணவு விடுதியின் தரைத்தளத்தில் சமையல் கூடம் இயங்குகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த சமையல் கூடத்தில் ஊழியர்களின் கவனக்குறைவால் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக கடை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லையாம். தீயை அணைப்பதற்கான உபகரணங்கள் கடையில் இருந்ததாக தெரியவில்லை. இந்த தீ விபத்தால் கடும் புகை மூட்டம் சமையல் கூடத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மருத்துவ மனைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. கடைத் தெருவிலும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இதனையடுத்து ‘பாம்ஸ் ரெசி டென்சி’யின் மேல் தளங்களில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் இதைக்கண்டு பெரும் அச்சமடைந்தனர்.
பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது தனியார் விடுதியில் தீப்பற்றியதை கண்டு அச்சத்துடன் விடுதி அறையில் இருந்தும், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து பட்டமங்கலத் தெருவில் பெரும் பதட்டமான சூழல் நிலவியது.
தீ விபத்து பற்றி உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர். இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான தனியார் ஓட்டல்கள் உள்ளன. ஆனால் இந்த கடைகளில் அரசு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நிறைந்த கடைத்தெருவில் தனியார் ஓட்டலில் கவனக்குறைவாக தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதுவே இரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறினர். #tamilnews
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது45). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தனது மனைவி ராணி (40), மகன் காளிதாஸ் (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளிலும் வந்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணையன் பரிதாபமாக இறந்தார்.
மேலும் கண்ணையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரது மனைவி ராணி, மகன் காளிதாஸ் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்புமுருகன், முகமது உமர்பாரூக் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #tamilnews
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினர்.
திருமருகல்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஆற்றங்கரை தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது 28). மினி லாரி ஓட்டி வருகிறார். இவரது சொந்த ஊர் காரைக்கால் மாவட்டம் காசாகுடி வடபாதி ஆகும். இவரது மனைவி ஆனந்தி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராஜஸ்ரீ (2), ஆசாத் (6 மாதம்) என்ற குழந்தைகள் உள்ளனர்.
ராஜசேகர் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை வரதட்சணை வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரது அக்கா ராதிகா என்பவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆனந்தியின் உறவினர்கள் காரைக்காலில் வசித்து வந்த இருவரையும் கட்டுமாவடிக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். அங்கு வாடகை வீட்டில் இருவரும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வாரம் ஒருமுறை காரைக்காலில் இருந்து கட்டுமாவடிக்கு வரும் ராஜசேகர் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து வரதட்சணை வாங்கி வர சொல்லி தகராறு செய்வாராம். நேற்று வீட்டுக்கு வந்த அவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஆனந்தி நள்ளிரவில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. தனி விசாரணை நடத்தி வருகிறார்.
வரதட்சணை கொடுமையால் 2 கைக் குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகூர் ஆண்டவர் தர்காவில் 461-வது பெரியகந்தூரி விழா நாளை (17-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.
இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று நாகூர் ஆண்டவர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முகம்மது கலிபா ஷாகிப் கடந்த மாதம் சென்னை ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தமிழக கவர்னர் வருகிற 18-ந்தேதி கந்தூரி விழாவில் கலந்து கொள்கிறார்.
அவர் நாளை (17-ந்தேதி) காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் மூலம் சிதம்பரத்திற்கு வருகிறார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.
காலை 9.45 மணி அளவில் சுவாமி சஹஜானந்தா ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து 10.30 மணி அளவில் புறப்படும் கவர்னர் 10.45 மணி அளவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் மாலை 5 மணி வரை ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நாட்டியாஞ்சலி பரதநாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து புறப்படும் அவர் நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இரவு நாகை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதைத்தொடர்ந்து மாலை 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நாகப்பட்டினம் சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனு பெறுகிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்படும் கவர்னர் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நாகூர் பெரிய ஆண்டவரின் கந்தூரி விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர். #tamilnews
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி கோகுலம் நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பூர்ணசந்திரன் (வயது 18). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று பூர்ணசந்திரன், தனது நண்பர்களான தினேஷ்குமார், பிரசன்னகுமார் ஆகியோருடன் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.
இதனை தொடர்ந்து அவர்கள், கடல் முகத்துவாரம் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.
இதில் தினேஷ்குமார், பிரசன்னகுமார் ஆகியோர் கரைக்கு திரும்பினர். ஆனால் பூர்ணசந்திரன் மட்டும் குளித்து கொண்டிருந்தார். அப்போது அலையில் சிக்கி பூர்ணசந்திரன் கடலில் மூழ்கினார். இதனை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். சிறிது நேரத்தில் பூர்ணசந்திரனின் உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் பூர்ணசந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது 38). விவசாயி. இவருக்கு கீதா (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
மகேந்திரனுக்கும், அவரது அண்ணன் கந்தவேலுக்கும் சொந்தமான விவசாய நிலம் நாகை மாவட்டம் திட்டசேரி அருகே உள்ள அருள்மொழிதேவன் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் அருள் மொழிதேவன் கிராமத்தில் வயலுக்கு மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சுவதற்காக மகேந்திரன் புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி கீதா, அருள்மொழிதேவன் கிராமத்தில் உள்ள கந்தவேலிடம், தகவலை கூறினார். இதையடுத்து அவரும் தம்பியை பல இடங்களில் தேடி பார்த்தார்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள நரிதின்ன வாய்க்கால் கரையோரத்தில் மகேந்திரன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திட்டசேரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் விவசாயி மகேந்திரனை எரித்து கொன்றது யார்? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.
போலீசார், மகேந்திரனின் மனைவி கீதாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அப்போது அவரது செல்போனை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். இதில் ஹரிஹரன் என்ற வாலிபரிடம் கீதா பேசியது தெரிய வந்தது. நள்ளிரவில் ஏன் வாலிபரிடம் பேச வேண்டும்? என்று கீதாவிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலன் ஹரி ஹரனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் கீதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ஹரிஹரன் (வயது 30) என்பவர் எனது கணவர் மகேந்திரனின் நண்பர் ஆவார். இதனால் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வந்து செல்வார். இதில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தோம்.
இதற்கிடையே எங்களது கள்ளத்தொடர்பு கணவர் மகேந்திரனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.
இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதை ஹரிஹரனிடம் கூறினேன். அவரும் கொலை செய்ய ஒத்துகொண்டார்.
அதன்படி நள்ளிரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச கணவர் புறப்பட்டு சென்ற போது நான் உடனே கள்ளக்காதலன் ஹரிஹரனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தேன். உடனே அவரும் அருள்மொழி தேவன் கிராமத்துக்கு புறப்பட்டார்.
அங்கு கணவர் மகேந்திரனை சந்தித்து ஹரிஹரன் பேசினார். அப்போது நரிதின்ன வாய்க்கால் அருகே திடீரென கணவர் மகேந்திரனை, ஹரிஹரன் கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதன்பின்னர் மகேந்திரன் உடலில் டீசலை ஊற்றி எரித்து விட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தால் ஹரிஹரனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கள்ளக்காதலன் ஹரிஹரன், கீதா ஆகியோரை திட்டசேரி போலீசார் கைது செய்தனர். #tamilnews
குத்தாலம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நாகை மாவட்டம் மங்கைநல்லூருக்கு செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் திருவிடைமருதூரை அடுத்த பிள்ளையார் பேட்டையை சேர்ந்தவர்.
இவர் நேற்று மாலை வழக்கம் போல் பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் குத்தாலத்தை அடுத்த கத்திரி மூலைப்பகுதியில் நிற்காமல் சென்றதால் அதில் பயணம் செய்த கத்திரி மூலையை சேர்ந்த கஜேந்திரன் (28), கனகசபை (32) ஆகிய இருவரும் கண்டக்டர் கார்த்திகேயனுடன் தகராறு செய்தனர்.
பின்னர் அவரை கீழே இழுத்து அடித்துள்ளனர். இதில் கார்த்திகேயனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இது பற்றி அவர் பாலையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய 2 பேரையும் கைது செய்தார்.
இந்த சம்பவம் பஸ் பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், அண்டகத்துறையை சேர்ந்தவர் தெய்வராசு (வயது 43). விவசாயி. இவரது மனைவி வேதநாயகி. தெய்வராசு தனது மனைவியை வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை கேட்காமல் வேதநாயகி வேலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக தெய்வராசு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவர் அடிக்க சென்றதால் வேதநாயகி அருகில் உள்ள உறவினர் அன்பழகன் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற தெய்வராசு என் மனைவிக்கு உன் வீட்டில் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று தகராறு செய்து இரும்பு கம்பியால் அன்பழகனை அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து தெய்வராசுவை கைது செய்தார்.
காரைக்கால் மாவட்டம் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது 38). விவசாயி.
மகேந்திரனுக்கும், அவரது அண்ணன் கந்தவேலுக்கும் சொந்தமான விவசாய நிலம் நாகை மாவட்டம் திட்டசேரி அருகே உள்ள அருள் மொழிதேவன் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வயலுக்கு மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சுவதற்காக மகேந்திரன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கையில் டீசல் கேனும் எடுத்து சென்றிருந்தார்.
இதற்கிடையே வயலுக்கு சென்ற மகேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாக தம்பி வராததால் கந்தவேல், வயலுக்கு சென்று பார்த்துவர இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார்.
வயலுக்கு சென்று பார்த்த போது, நரிதின்ன வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள வாய்க்கால் கரையோரத்தில் மகேந்திரன் முகம் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு கந்தவேல் அதிர்ச்சி அடைந்தார். மகேந்திரன் தலையில் பின்பக்கம் வெட்டுக்காயம் இருந்தது.
இதையடுத்து அவர் திட்டசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, மகாதேவன் ஆகியோர் விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் நள்ளிரவில் மர்ம கும்பல் மகேந்திரனை வெட்டிக்கொன்று விட்டு பின்னர் முகத்தை டீசல் ஊற்றி எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
பின்னர் மகேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகேந்திரன் முன் விரோதத்தில் எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். நாகையில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் மோட்டார் சைக்கிள் அல்லது காரில் தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.
கொலையுண்ட மகேந்திரனுக்கு கீதா என்ற மனைவியும், கோமதி (8), அனுஷ்கா (5) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது விவசாயி எரித்து கொன்ற சம்பவம் திட்டசேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews






