என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறையில் எச்.ராஜாவின் படத்தை தீயிட்டு எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் எச்.ராஜாவின் படத்தை தீயிட்டு எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோகன்குமார் தலைமை தாங்கினார். பெரியாரின் சிலைகளை தமிழகத்தில் இடிக்க வேண்டும் என்று கூறிய எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாடத்தில் பேசினர். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடகட்சிகள், மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டார். #tamilnews

    4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக நாகை வாலிபர் மீது இலங்கையை சேர்ந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள புதுநகரைச் சேர்ந்த நஜிமுதின் மகன் முகமது நியாஷ் (வயது 32). இவர் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    அவருக்கு இலங்கையை சேர்ந்த முகமது நியாஷ் மகள் சித்தி ஜெசிமா (29). என்பவர் அறிமுகமானார். இருவரும் அடிக்கடி சந்தித்ததில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் புதுநகர் வந்துள்ளனர். அப்போது முகமது நியாஷ், ஜெசிமாவிடம் வியாபாரம் செய்ய போவதாக கூறி 30 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வாங்கி உள்ளார்.

    இதன் பின்னர் முகமது நியாஷ் துபாய் சென்று விட்டார். கர்ப்பிணியான சித்தி ஜெசிமா பிரசவத்திற்காக இலங்கைக்கு சென்று விட்டார். இதன் பின்னர் முகமது நியாஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெசிமா இலங்கையில் இருந்து குத்தாலம் அருகே உள்ள புது நகருக்கு வந்தார்.

    அவர் தனது கணவர் வீட்டிற்கு சென்ற போது கணவர் குடும்பத்தினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் ஏமாற்றி விட்டதை அறிந்து வேதனையடைந்தார். மேலும் கணவர் குறித்து அக்கம் பக்கத்தில் அவர் விசாரித்த போது ஏற்கனவே முகமது நியாசுக்கு இரண்டு முறை திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தற்போது அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதும் தெரியவந்தது.

    கணவர் தன்னை ஏமாற்றியது போல் பல பெண்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதை அறிந்த அவர் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதினார். இதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசிடம் இதுபற்றி புகார் செய்தார். அதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் முகமது நியாசை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் சாமி, ரிஷபம், பூதம், யானை, அன்னபட்சி, இந்திரவிமானம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக கல்யாண சுந்தரர், மீனாட்சி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் அருகே உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் தெப்பம் 3 முறை வலம் வந்தது.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தவைலர் தென்னரசு, மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் குணசேகரன், கோவில் செயல் அலுவலர் ராமநாதன், யாழ்ப்பாணம் வரனிஆதீனம் செவ்வந்திநாத பண்டாரசந்நதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பது வீட்டிலா? வெளியிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. வர்த்தக சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. #tamilnews
    மணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று காங். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் ஒரு பிரிவினரும், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை இருபிரிவினரும் தனிதனியாக நடத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியில் இரு பிரிவு நிர்வாகிகளிடம் உச்சக்கட்ட புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.

    இதில் முன்னாள் மாவட்ட இளைஞர்தலைவர் ராம. சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் கமலநாதன்.செய்தி தொடர்பாளர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மணிசங்கர் அய்யரை நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கல்யாண ராமன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    இதேபோல் நகர காங்கிரசில் மற்றொரு பிரிவு கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

    மாநில பொதுகுழு உறுப்பினர்கள் உத்தமன், நீடுர் நவாஸ், சிறுபான்மை பிரிவு துணைதலைவர் சம்சுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார் இதில் பூவாலைமதி, பத்ம நாபன், செய்தி தொடர்பாளர் சிவாஜிசேகர் கலந்து கொண்டனர். #tamilnews

    அ.தி.மு.க.வை இயக்குவது மோடி தான் என்பது அனைவரும் அறிந்தது தான் என்று வேதாரண்யத்தில் சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார். #ADMK
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சசிகலா சகோதரர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது. இன்னும் 6 மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தல் வந்து விடும். எம்.எல்.ஏ. பிரபுவை தொடர்ந்து இன்னும் எம்.எல்.ஏ.க்கள் வரலாம். எல்லோரும் நம்ம எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்கள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் இருப்பார்கள்.

    குழப்பத்தின் உச்சக் கட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை வைத்தது காமெடியாக போய்விட்டது. இந்த சிலையின் முகம் மட்டும் மாற்றப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அரசையும், அ.தி.மு.க. வையும் யார் பொறுப்பாக கவனிக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.


    இலவச திட்டங்களை எதிர்க்கும் பிரதமர் மோடியை கொண்டு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் சிலையை சட்டமன்றத்தில் வைப்பதில் சட்ட சிக்கல் வரலாம். ஆனால் தலைமை கழகத்தில் சிலை வைப்பதில் பிரச்சனை இல்லை. எனவே சிலையை திறக்க பிரதமர் மோடியை அழைத்து இருக்கலாம். அ.தி.மு.க.வை இயக்குவது மோடி தான் என்பது அனைவரும் அறிந்தது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    திருமருகல் அருகே நடந்து சென்ற இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமருகல்:

    நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள சின்னைய்யன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சேகர் நேற்று இரவு 8 மணி அளவில் சீயாத்த மங்கையில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முடிகொண்டான் சமத்துவப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் பலியான சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகை வழங்காவிட்டால் தலைமை செயலகத்தில் படுத்து தூங்கும் போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #tnSecretariat

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிபுலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கத்திரிபுலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். வேதாரண்யம் கத்திரிபுலம் விவசாயிகள் 69-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகையை வேதாரண்யம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை தலைமை செயலகத்தில் படுத்து தூங்கும் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tnSecretariat ##ayyakannu

    சென்னையில் தலைமை கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதா உருவம் போல் இல்லை என்று நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். #jayalalithastatue #edappadipalanisamy #nanjilsampath

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கொள்கை பரப்பு இணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் தலைமை கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறந்து வைத்துள்ளார். அந்த சிலை ஜெயலலிதா உருவம் போல் இல்லை. சிலையின் கையில் 6 விரல்கள் உள்ளது. ஜெயலலிதா சிலையை தத்ரூபமாக வடிவமைக்காமல் அவசரத்தில் செய்துள்ளார்கள். அப்படி என்ன அவசரம் என்று தெரிய வில்லை?

    ஜெயலலிதாவின் சிலை எடப்பாடி மனைவி மாதிரியே உள்ளதாக சமூக வலைய தளத்தில் வெளியாகி வருகிறது.


    எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் ஆகியோரது சிலைகள் எல்லாம் கைதேர்ந்த சிற்பிகள் மூலம் எவ்வளவு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா சிலையை ஏன் இதுபோல் செய்து விட்டார்கள் என்று தெரியவில்லை.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருக்கும் எந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ அதை எல்லாம் எடப்பாடி அரசு ஆதரித்து வருகிறது. மத்திய அரசிடம் எடப்பாடியும் , ஓ.பி.எஸ்.சும் அடிமை போல் இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும். டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அவர் நிச்சயம் முதல்- அமைச்சராக பதவி ஏற்பார்.

    ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளின் போது தினகரன் தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருப்பார். ஜெயலலிதா வழியில் தமிழகத்தை வழிநடத்தி செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #jayalalithastatue #edappadipalanisamy #nanjilsampath

    குத்தாலம் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பவுன்ராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய கட்டடங்களில் வகுப்புகளை துவக்கி வைத்தார்.
    குத்தாலம்:

    குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இப்புதிய கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    புதிய கட்டிடங்களில் வகுப்புகள் துவக்க விழாவிற்கு குத்தாலம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர் அகமது, நிலக்கிழார் அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜான்ஹென்றிராஜ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தினராக பவுன்ராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய கட்டடங்களில் வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். இங்கு நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய 10 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள் 3 கட்டிடங்களாக மூன்றடுக்கில் கட்டப்பட்டு உள்ளன. விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜியாவுதீன், நீலமேகம், வேல்முருகன், ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் சுகன்யா நன்றி கூறினார். #tamilnews
    1000 ஆண்டுகள் பழமையான வடரங்கம் வேணுகோபாலசாமி கோவில் சீரமைக்கப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே, வடரங்கம் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி, வேணு கோபாலசாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததும், சோழர் காலத்தை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில் கோபுரத்தை சேர்ந்த, மற்றக் கட்டிடங்களும், கோயில் மற்றும் தெருவுடன், கடந்த 1925-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கரையையொட்டி கோபுரம் மட்டுமே உள்ளது. இன்றுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே உள்ள இந்த கோபுரத்தின் உள்ளே, வேணுகோபால்சாமி நின்ற நிலையில் உள்ளார். ஆனால் இந்த கோபுரம் பூட்டியே கிடக்கிறது. சீமைகருவேல மரங்களும் கோபுரத்தை சூழ்ந்துள்ளது. சோழர்காலக் கட்டிடக் கலையைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்.

    இந்த கோபுரத்தை புணரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். #tamilnews

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.எம். அன்பழகன் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துக்கொண்டு பேசும்போது, மார்ச் 1-ல் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

    இதில் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், துணை செயலாளர் சிவக்குமார், சத்தியராஜ், தாமரைச் செல்வி, பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் மாவட்ட பிரதிநிதி தென்னரசன் நன்றி கூறினர்.

    இதேபோல் தெற்கு ஒன்றியம் சார்பில் பொறையாரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முகமது மாலிக் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மற்றும் கட்சி முன்னோடிகள் கலந்துகொண்டனர். #tamilnews
    மயிலாடுதுறையில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்ததை யொட்டி நேற்று 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பகுதியில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்ததை யொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் நேற்று இரவு மயிலாடுதுறை சின்னகடை வீதி மெயின் ரோட்டில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் மயிலாடுதுறையை சேர்ந்த சுரேஷ்குமார் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் அதே வழியில் வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்தனர். விழுப்புரம் கொங்கராம் பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த கன்னியப்பன். என்பவர் மணல் கடத்தியது தெரியவந்தது. அந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×