என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே இன்று அதிகாலை கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கீழ்வேளூர்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பகவதீஸ்வரன் (வயது 59) தேங்காய் வியாபாரி.

    இவர் கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    பகவதீஸ்வரன் புதியதாக கார் வாங்கினார். இதனால் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி அவர் தனது மனைவி ஜெயவேணி (49), மகன் திலீப்(30), மற்றும் உறவினர்கள் ஆறுச்சாமி (55), தாரணி (24) ஆகியோருடன் கேரளாவில் இருந்து சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நேற்று புது காரில் வந்தார். பின்னர் நாகை வேளாங்கண்ணிக்கு சென்று அங்கு தங்கினார்.

    இன்று அதிகாலை திருநள்ளாறுக்கு செல்வதற்காக அவர்கள் காரில் புறப்பட்டனர்.

    அதிகாலை 4 மணியளவில் கார் நாகை அடுத்த பரவை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சென்றது.

    அந்த சமயத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய ஒரு மினிலாரி, நாகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார், தேங்காய் பாரம் ஏற்றிய லாரி மீது மோதியது. மேலும் எதிரே வந்த மற்றொரு மினிலாரி மீதும் கார் மோதியது. இதில் கார் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் காரில் இருந்த ஜெயவேணி, மகன் திலீப், மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் காரில் இருந்த பகவதீஸ்வரன், தாரணி மற்றும் தேங்காய் பாரம் ஏற்றிய மினிலாரி டிரைவர் கோவிந்தசாமி (52), லாரி உரிமையாளர் தெய்வேந்திரன் (40), மற்றொரு மினி லாரி டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
    நாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த இரு வேறு விபத்துக்களில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஈ.சி.ஆர் சாலையில் இன்று காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. தெற்கு பொய்கைநல்லூர் அருகே சென்றபோது, அந்த கார் மீது மினி லாரி ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர்.

    அவர்கள் கேரளாவை சேர்ந்த திலீப், ஆரிசாமி, கிருஷ்ணவேணி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் படாளத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அகிலா என்ற பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

    சென்னை கோயம்பேட்டில் வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
    விவசாய நிலம் வழியாக தரங்கம்பாடிக்கு எண்ணெய் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் கடந்த 2013-ம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எண்ணெய் துரப்பன பணி மேற்கொண்டு வருகிறது.

    தற்போது இருவக்கொல்லை, தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கூடுதலாக 7 கிணறுகளை உருவாக்கியுள்ள அந்த நிறுவனம் நாள்தோறும் சுமார் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் எண்ணெய் எடுக்கிறது. இதற்கான ரசாயன கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடிநீர் அப்பகுதி சுற்று வட்டாரங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பழைய பாளையம், அகரவட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் அமைக்க திட்டமிட்டு அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான சட்டம் 1962-ன்கீழ் (சட்டம்50-62) பிரிவு 3-ன்கீழ் பிரசுரிக்கப்பட்ட இந்திய அரசிதழில் விளம்பர பலகையில் விளம்பரப்படுத்துதல் தொடர்பான விவரங்களை கெயில் நிறுவன அதிகாரம் பெற்ற அலுவலர் கையொப்பம் இட்ட நோட்டீஸ் பொதுமக்கள் பார்வையில் படும்படி மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இது பழையபாளையம், அகர வட்டாரம், வேட்டங்குடி, எடமணல், திருநகரி கிராம விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து நஞ்சை, புன்செய் விவசாய மாவட்ட சங்க தலைவர் வில்வநாதன் கூறுகையில், பழையபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் வேட்டங்குடி கிராமத்தில் இருவக் கொல்லை என்ற இடத்தில் எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் குடிநீர், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பழைய பாளையத்திலிருந்து விவசாய நிலம் வழியாக தரங்கம்பாடிக்கு எண்ணெய் குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


     கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கெயில் நிறுவனம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.

    அதுமட்டுமல்லாமல் குழாய் அமைக்க விவசாயிகளிடம் கையெழுத்து கேட்டு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

    எனவே விளை நிலங்களை எண்ணெய் நிறுவனம் கையகப்படுத்த நினைத்தால் பொதுமக்கள், விவசாயிகள் ஒன்று திரண்டு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews



    குத்தாலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    குத்தாலம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35) தொழிலாளி. இவரது மனைவி ராதா, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 11-ம் தேதி சுரேஷ்குமார் மனைவியை தனது வீட்டிற்கு அழைத்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சுரேஷ்குமார் வீட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். 

    அருகில் இருந்தவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews

    கோடியக்கரை பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அபூர்வ வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    ஆழ்கடல் பகுதியில் இரை தேடி வரும் அபூர்வ வகை ஆலிவர்ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டின் கடலோர மணல் பாங்கான பகுதிகளில் வந்து குழி தோண்டி முட்டையிட்டு திரும்பி செல்கின்றன.

    இந்த முட்டைகள் 45 நாட்களுக்கு பிறகு பொரித்து குஞ்சுள் கடலுக்குள் சென்று விடும். கடற்கரை பகுதியில் இடும் முட்டைகளை சமூக விரோதிகள் திருடிச் சென்று விடுகிறார்கள்.

    வனத்துறையினர் அழிந்து வரும் ஆமை இனத்தை காப்பாற்ற முட்டைகளை சேகரித்து வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் உள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் முட்டைகளை பாதுகாத்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அதை கடலில் விடுவார்கள்.

    இந்நிலையில் இனப் பெருக்கத்திற்காக கடற்கரை பகுதியில் மணற்பாங்கான இடத்திற்கு ஆழ்கடல் பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து வரும் இந்த ஆமைகள் கப்பல், பெரிய விசைப்படகு, மீன்பிடி வலைகளில் சிக்கி இறந்து கரை ஒதுங்குவது சர்வசாதாரண நிகழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி வரை கோடியக்கரை பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அபூர்வ வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி ஆமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #tamilnews

    கடல் சீற்றம் காரணமாக 3 -வது நாளாக நாகை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    கீழ்வேளூர்:

    தென்மேற்கு வங்க கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தற்போது இது தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டுள்ளது. அது இன்று தீவிர புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்றும் நாளையும் அதிக பட்சமாக மணிக்கு 70 கீலோமீட்டர் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தீவிர மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது. ஆனால் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

    திருவாரூர், திருத்துறைப் பூண்டி மற்றும் நாகை, கீழ்வேளூர்,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. சுமார் 15முதல் 30 நிமிடங்கள் வரையே மிதமான அளவில் பெய்தது.

    இதற்கிடையே நாகை கடல் பகுதி சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுவதால் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இன்றும் 3 -வது நாளாக நாகை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    நாகை நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் மற்றும் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #tamilnews

    நிலக்கடலை கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்காவில் கத்தரிப்புலம், புஷ்பவனம், பெரியகுத்தகை, செம்போடை, நாகக் குடையான், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேதாரண்யம் பகுதியில் வழக்கமாக குறுவை, ஜெ.எல். போன்ற கடலை ரகங்களைத்தான் விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து சி-2, சி-7 விதைக்கடலை வாங்கி வந்து பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதற்கு காரணம் அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் கடலை சாகுபடியில் பல்வேறு நோய் தாக்குதல்களும் தண்ணீர் பற்றாகுறையினாலும் சரிவர விளைச்சல் இல்லை. மேலும் கடலையை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

    கடந்த ஆண்டு கடலை கிலோ 60ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். .ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்கின்றனர். விளைச்சல் சரி இல்லாததாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாலும் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    எனவே நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டு மன்னார்குடி, குமராட்சி, நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளை சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த கொள்ளிடம் தடுப்பணைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    குழு தலைவர் விஜய்பாரி தலைமை வகித்தார். அழகுராஜ் வரவேற்றார். ஊழல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர் ஜெகசண்முகம், சிதம்பரம் விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன், திருப்பாற் கடல் விவசாய சங்கத் தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் விவசாயிகள் சங்கத் தலைவர் சந்திரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உப்பு நீரால் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் சுட்டிக் காட்டும் இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட நிதி ஒதுக்க வேண்டும். தடுப்பணைக் கட்டத் தவறினால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட மக்கள் தண்ணீரின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வெளியூர்களுக்கு இடம் பெயரும் அபாயம் ஏற்படும்.

    வரும் 15-ம்தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட் அறிக்கையில் தடுப்பணைக்கான திட்டவரைவுக்கு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்து, இந்த நிதி ஆண்டிலேயே தடுப்பணைக் கட்ட வேண்டும். இல்லை என்றால்ஆயிரக் கணக்கான விவசாயிகள் திரண்டு முன்னறிவிப்பு இல்லாத மாபெரும் போராட்டத்தை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குமராட்சி விவசாயிகள் சங்கத்தலைவர் நீலமேகம், சிதம்பரம் நகர வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ், விவசாயி கலைச்சந்திரன், கொள்ளிடம் தெற்குராஜன் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கத் தலைவர் சீராளன், கலைச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜவேல் நன்றி கூறினார்.

    வேதாரண்யத்தில் மாமரம் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்காவில் கத்தரிப்புலம், செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், குரவப்புலம், நாலுவேதபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை இப்பகுதியில் விளைகின்றன. மாம்பழ சீசன் காலத்தில் இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் டன் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மாமரங்கள் பூக்கத் துவங்கி மார்ச் மாதத்தில் மாம்பிஞ்சுகள் விடும். ஆனால் தற்போது மாமரங்கள் பூக்குகிறதை தவிர பிஞ்சுகள் விடுவதில்லை. மாம்பூக்கள் அனைத்தும் கருகிவிடுகிறது. விவசாயிகள் மாமரத்தை காய்ப்பதற்கு பலமுறை ரசாயன மருந்துகளை அடித்தும் எந்த பயனும் இல்லை. மேலும் தத்துப்பூச்சி மாவுப்பூச்சி தாக்குதலும் அதிகமான பனியாலும் பூக்கள் கருகிவிடுகிறது. இப்பகுதியில் மரத்தில் மாங்காய்களை காய்க்க வைப்பதற்கு விவசாயிகள் கடுமையான ரசாயன மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

    இதனால் மரங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ரசாயன மருந்து அடிக்காமல் மாங்காய்களை காய்க்க வைக்கும் விவசாயிகளுக்கும் பிஞ்சு பிடிக்கவில்லை. பூத்த பிஞ்சுகள், பூக்கள் அனைத்தும் கருகி கொட்டுகின்றன. இந்த பாதிப்பு தொடர்ந்தால் இந்த ஆண்டு மா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடுமையான ரசாயன உரம், கடும் வெப்பம், பருவ நிலை மாற்றம் இவற்றால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒரு லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தோட்டக் கலைத்துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
    கீழ்வேளூர்:

    மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிபோடுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    உடனடியாக தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனியூஸ்டு கட்சியினர் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலையை உடைத்ததற்கும், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றவேண்டும் என்று கூறிய எச்.ராஜாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் அம்பிகாபதி, விவசாய சங்க ராமச்சந்திரன், செந்தில், விவசாய சங்க தொழிலாளர் அணி வெற்றியழகன் மகளிரணி ஒன்றியச் செயலாளர் வசந்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோல் தலைஞாயிறு பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர் வேணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு அலெக்சாண்டர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பேரூர் செயலாளர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க சம்பந்தம், மகளிரணி ஒன்றிய செயலாளர் செல்வி மாணவர் பெருமன்றம் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews

    மயிலாடுதுறையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரூ. 47 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி 36-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பதிப்பதற்காக நகர் முழுவதும் படிப்படியாக குழி தோண்டப்பட்டு குழாய்கள் அமைத்து வந்தனர். இந்த பணிகள் நடைபெறும்போது பல்வேறு விபத்துகள் நடைபெற்றன. பல இடங்களில் மழைகாலங்களில் மண் உள்வாங்கியது. இதனால் சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பாதாளசாக்கடை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் பாதாள சாக்கடை மூடிகள் அடிக்கடி உடைவதும், அதை மாற்றுவதும் நடந்து வந்தது.

    நேற்று மாலை மயிலாடுதுறை நகரில் கச்சேரி சாலையில் ஒன்றிய அலுவலகம் அருகில் திடீர் பள்ளம் ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சுமார் 20 அடி ஆழம் வரை சாலை உள் வாங்கியுள்ளதால் அந்த வழியாக போக்குவரத்தை தடை செய்தனர்.

    பின்னர் வழியாக திருவாருர் செல்லும் பஸ்கள் கூறைநாடு சென்று காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சப்- கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் விஜயராகவன், நெடுஞ்சாலைதுறை உதவிகோட்ட பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து நேற்று இரவு நகராட்சி, பொதுபணித்துறையினர் இணைந்து திடீர் பள்ளத்தை மூடும் பணியை தொடங்கினர். பாதாள சாக்கடையில் இணைப்புகள் வழியாக உடைப்பு ஏற்பட்டு மண் உள்வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    ×