என் மலர்
செய்திகள்

நாகை மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
கீழ்வேளூர்:
தென்மேற்கு வங்க கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தற்போது இது தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டுள்ளது. அது இன்று தீவிர புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் அதிக பட்சமாக மணிக்கு 70 கீலோமீட்டர் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தீவிர மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது. ஆனால் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
திருவாரூர், திருத்துறைப் பூண்டி மற்றும் நாகை, கீழ்வேளூர்,வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. சுமார் 15முதல் 30 நிமிடங்கள் வரையே மிதமான அளவில் பெய்தது.
இதற்கிடையே நாகை கடல் பகுதி சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுவதால் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இன்றும் 3 -வது நாளாக நாகை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகை நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் மற்றும் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #tamilnews






