என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் சாலையில் திடீர் பள்ளம்- பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    மயிலாடுதுறையில் சாலையில் திடீர் பள்ளம்- பொதுமக்கள் அதிர்ச்சி

    மயிலாடுதுறையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரூ. 47 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி 36-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பதிப்பதற்காக நகர் முழுவதும் படிப்படியாக குழி தோண்டப்பட்டு குழாய்கள் அமைத்து வந்தனர். இந்த பணிகள் நடைபெறும்போது பல்வேறு விபத்துகள் நடைபெற்றன. பல இடங்களில் மழைகாலங்களில் மண் உள்வாங்கியது. இதனால் சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பாதாளசாக்கடை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் பாதாள சாக்கடை மூடிகள் அடிக்கடி உடைவதும், அதை மாற்றுவதும் நடந்து வந்தது.

    நேற்று மாலை மயிலாடுதுறை நகரில் கச்சேரி சாலையில் ஒன்றிய அலுவலகம் அருகில் திடீர் பள்ளம் ஏற்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சுமார் 20 அடி ஆழம் வரை சாலை உள் வாங்கியுள்ளதால் அந்த வழியாக போக்குவரத்தை தடை செய்தனர்.

    பின்னர் வழியாக திருவாருர் செல்லும் பஸ்கள் கூறைநாடு சென்று காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சப்- கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் விஜயராகவன், நெடுஞ்சாலைதுறை உதவிகோட்ட பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து நேற்று இரவு நகராட்சி, பொதுபணித்துறையினர் இணைந்து திடீர் பள்ளத்தை மூடும் பணியை தொடங்கினர். பாதாள சாக்கடையில் இணைப்புகள் வழியாக உடைப்பு ஏற்பட்டு மண் உள்வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    Next Story
    ×