என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டூவிட்டர் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எச்.ராஜாவை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் மற்றும் அவரது உருவப்படம் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள திருக்கடையூரில் அவரது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எச்.ராஜா திருக்கடையூர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். இது குறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருக்கடையூர் கோவில் முன்பு திரண்டு எச்.ராஜா வந்த போது கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர் கோவிலில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் மக்கள் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சுகிதா. இளையராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சுகிதா தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது சகோதரியின் வளைகாப்பு விழாவுக்காக சுகிதா வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மாலை வீட்டிற்கு வந்த பால்காரர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, சுகிதாவுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சுகிதா வீட்டிற்கு வந்து பார்த்ததில் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் இரண்டு அறைக்கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்கள், பட்டுப் புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி சுகிதா அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதி அறிக்கை பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை பூமி இன்றைக்கு பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால் பாலைவனமாக மாறும்.
மேலும் காவிரி மேற்பார்வை குழு அமைப்பது என்பது பசிக்கு பஞ்சு மிட்டாய் வழங்கும் கதையாகி விடும். நாங்கள் இந்த குழு அமைப்பதை கண்டிக்கிறோம். எதிர்த்து போராடுவோம். ஆனால் தமிழக அரசு எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழக மக்கள் இதற்கான நீதிபெறாமல் விட மாட்டார்கள். பா.ம.க. இறுதிவரை போராடும்.
வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருபவர்கள் தமிழகத்தில் கேட்கும் லஞ்சத்துக்கு பயந்து போய் ஓடிவிடுகிறார்கள். இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் 1 சதவீத மக்களிடம் உள்ளது. இதுதான் தற்போதைய நாட்டின் நிலைமை.
தற்போது வயதாகி விட்ட நடிகர்கள், பட வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் அரசியல்களத்தை நோக்கி திருப்புகின்றனர். ஒரு நடிகர் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சி நாட்டுக்கு நல்லது செய்ததா? அல்லது ஜெயலலிதா தான் நல்லது செய்தாரா? இல்லை.
ஜெயலலிதாவால் 2011-ல் விரட்டப்பட்டு புதுச்சேரியில் இருந்த தினகரன் இன்றைக்கு கட்சியை பிடித்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று கனவு காண்கிறார். பணநாயகம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. தமிழகத்தை உண்மையில் நல்ல மாநிலமாக மாற்றுவதற்கு திட்டமும், செயல்படும் திறமையும் கொண்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும் தான். அனைத்து திறமைகளையும் ஒருங்கே பெற்றவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் கடலோர காவல் படை மற்றும் போலீசார் சாகர் கவாச் என்னும் திட்டத்தின் கீழ் ஆறுகாட்டுத்துறையிலிருந்து கோடியக்கரை வரை ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரோந்து பணியில் 7 குழுக்களை சேர்ந்த 37 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்சோதனையில் கடல் வழியாக தீவிரவாதிகள், மற்றும் கடத்தல்காரர்கள் ஊடுருவுகிறார்களா? எனவும், இலங்கையில் இருந்து தங்கம், போதை பொருட்கள் எதுவும் கடத்தி வரப்படுகிறதா? என சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் இன்று காலை வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் 3 பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட மக்கள் அதனை எடுத்து பார்த்தபோது அது கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வேதாரண்யம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் பாலு, கடலோர காவல்படை டி.எஸ்.பி. கலிதீர்த்தான் மற்றும் போலீசார் சென்று பார்த்தனர். அங்கு கிடைத்த ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ எடையில் மொத்தம் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் அதனை மர்மநபர்கள் கடத்தி சென்றார்களா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே நாலுவேதபதியை சேர்ந்த மீனவர் தங்கராஜ் என்பவர் வலையில் ஒரு பொட்டலம் சிக்கியது. அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதுபற்றி தகவலறிந்த போலீசார் அதனையும் கைப்பற்றினர்.
கடந்த 3 நாட்களாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கஞ்சா பொட்டலங்கள் எப்படி கரை ஒதுங்கியது? ஏதேனும் படகு கவிழ்ந்து இந்த கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தரங்கம்பாடி:
காரைக்காலிருந்து தரங்கம்பாடி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்த படுவதாக தனி பிரிவு ஏட்டு சரவணபவன், பொறையார் போலீசார் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் தரங்கம்பாடி அருகே ராஜூவ்புரம் என்ற இடத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மீன்பாடி வண்டியை நிறுத்த முயன்றனர். ஆனால் அது நிற்காமல் செல்லவே அதனை போலீசார் விரட்டி சென்றனர். காத்தான் சாவடி என்ற இடத்தில் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது தப்பி ஓட முயன்ற டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரமணன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் ஓட்டிவந்த மீன்பாடி வண்டியை சோதனை செய்த போது அதில் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே 89 அட்டை பெட்டிகளில் 4300 குவார்ட்டர் மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தையும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் ரமணனை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சீர்காழி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவரது வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 31 அட்டை பெட்டிகளில் 1480 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட அந்த மதுபானங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த வீட்டில் இருந்த ராம்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பாண்டியனை தேடி வருகின்றனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சீர்காழியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் மேலவீதியில் இரு பஸ்களை நிறுத்தும் அளவில் வாடகை இடத்தில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் வடக்குவீதி கீழவீதி சந்திப்பில் சுமார் 10 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது அதே இடத்தில் அரசுப் பேருந்துகள் 54-ம், 20-த்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும், 15-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும் அரசு விரைவுப்பேருந்துகளும் வந்து செல்ல வேண்டி உள்ளது.
காலை மற்றும் மாலை வேளைகளில் தனியார், அரசு, மினி பேருந்துகள் அனைத்தும் அதிக அளவில் வருவதால் பேருந்தை நிறுத்த முடியாமல் இட நெருக்கடியில் பேருந்து நிலையம் சிக்கித்தவிக்கிறது. 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த இடம் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் சென்று பேருந்தில் ஏறுவதற்கு இடமில்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களையும் நிறுத்திவிட்டு செல்வதால் காலை மற்றும் மாலை வேளைகளில் வரும் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளும் பயணிகளும் நிற்கக்கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். சென்ற ஆண்டு வேதாரண்யம் கோயில் தேரோட்டத்திற்காக பேருந்து நிலையத்தின் வடக்கு புறத்தில் உள்ள சுற்றுசுவரும் இடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தின் வெளியிலும் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளும் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்து அல்லாத பிற வாகனங்களை நிறுத்த தடை விதித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியால் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது.
இதனால் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியின் முன்பு கடந்த 20-ந் தேதி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.
அப்போது ராமர் படத்தை போராட்டக்குழுவினர் செருப்பால் அடித்து அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
போராட்டத்தின் போது ராமர் படத்தை அவமதித்த பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கண்டித்து இந்து கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கச்சேரி சாலை, கும்பகோணம் ரோடு, மகாத்மா காந்தி சாலை, பட்டமங்கலம் சாலை, பெரிய கடை வீதி, பெரிய கண்ணார வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மயிலாடுதுறை பகுதியில் சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடையடைப்பு போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விடுதி கிராமத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் நடந்த போராட்டத்தில் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம், முதலியார் தோப்பைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கலையரசி (வயது 18) கல்லூரி மாணவி.
இவர் வேதாரண்யத்தில் செயல்படும் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த கலையரசி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுபற்றி சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் நேற்று பிணமாக மிதந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிக்கும், அவரது தாய்க்கும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த கலையரசி குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் மாணவி சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஒருநாள் முழுவதும் மாயமான அவர் மறுநாள் குளத்தில் பிணமாக மிதந்ததின் பின்னணியில் ஏதும் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான கல்லூரி மாணவி குளத்தில் பிணமாக மிதந்தது வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






