என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் வேதாரண்யம் பஸ் நிலையம்
    X

    போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் வேதாரண்யம் பஸ் நிலையம்

    வேதாரண்யம் பஸ் நிலையம் இட நெருக்கடியால் பஸ்களை நிறுத்த முடியாமல் சிக்கித்தவிக்கிறது.

    வேதாரண்யம்:

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் மேலவீதியில் இரு பஸ்களை நிறுத்தும் அளவில் வாடகை இடத்தில் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் வடக்குவீதி கீழவீதி சந்திப்பில் சுமார் 10 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது அதே இடத்தில் அரசுப் பேருந்துகள் 54-ம், 20-த்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும், 15-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகளும் அரசு விரைவுப்பேருந்துகளும் வந்து செல்ல வேண்டி உள்ளது.

    காலை மற்றும் மாலை வேளைகளில் தனியார், அரசு, மினி பேருந்துகள் அனைத்தும் அதிக அளவில் வருவதால் பேருந்தை நிறுத்த முடியாமல் இட நெருக்கடியில் பேருந்து நிலையம் சிக்கித்தவிக்கிறது. 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த இடம் உள்ள இந்த பேருந்து நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் சென்று பேருந்தில் ஏறுவதற்கு இடமில்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

    மேலும் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களையும் நிறுத்திவிட்டு செல்வதால் காலை மற்றும் மாலை வேளைகளில் வரும் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளும் பயணிகளும் நிற்கக்கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். சென்ற ஆண்டு வேதாரண்யம் கோயில் தேரோட்டத்திற்காக பேருந்து நிலையத்தின் வடக்கு புறத்தில் உள்ள சுற்றுசுவரும் இடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தின் வெளியிலும் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

    எனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளும் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக நிலையத்தில் நிறுத்தப்படும் பேருந்து அல்லாத பிற வாகனங்களை நிறுத்த தடை விதித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×