என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது நியாஷ்
    X
    முகமது நியாஷ்

    4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நாகை வாலிபர்

    4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக நாகை வாலிபர் மீது இலங்கையை சேர்ந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள புதுநகரைச் சேர்ந்த நஜிமுதின் மகன் முகமது நியாஷ் (வயது 32). இவர் துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    அவருக்கு இலங்கையை சேர்ந்த முகமது நியாஷ் மகள் சித்தி ஜெசிமா (29). என்பவர் அறிமுகமானார். இருவரும் அடிக்கடி சந்தித்ததில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் புதுநகர் வந்துள்ளனர். அப்போது முகமது நியாஷ், ஜெசிமாவிடம் வியாபாரம் செய்ய போவதாக கூறி 30 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வாங்கி உள்ளார்.

    இதன் பின்னர் முகமது நியாஷ் துபாய் சென்று விட்டார். கர்ப்பிணியான சித்தி ஜெசிமா பிரசவத்திற்காக இலங்கைக்கு சென்று விட்டார். இதன் பின்னர் முகமது நியாஷிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெசிமா இலங்கையில் இருந்து குத்தாலம் அருகே உள்ள புது நகருக்கு வந்தார்.

    அவர் தனது கணவர் வீட்டிற்கு சென்ற போது கணவர் குடும்பத்தினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் ஏமாற்றி விட்டதை அறிந்து வேதனையடைந்தார். மேலும் கணவர் குறித்து அக்கம் பக்கத்தில் அவர் விசாரித்த போது ஏற்கனவே முகமது நியாசுக்கு இரண்டு முறை திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தற்போது அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதும் தெரியவந்தது.

    கணவர் தன்னை ஏமாற்றியது போல் பல பெண்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதை அறிந்த அவர் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதினார். இதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசிடம் இதுபற்றி புகார் செய்தார். அதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் முகமது நியாசை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    Next Story
    ×