என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறையாறு அருகே வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி
    X

    பொறையாறு அருகே வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

    திருட்டு வழக்கு தொடர்பாக வாலிபரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது விபத்தில் போலீஸ் ஏட்டு பலியானார். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வாலிபர் காயம் அடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூரில் பகுதியில் ஒரு வீட்டில் திருட முயன்ற ஒரு வாலிபரை நேற்று இரவு அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் இதுபற்றி பொறையாறு போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனே சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு இளங்கோவன் ஆகியோர் திருக்கடையூருக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தினர். இதில் திருட வந்த வாலிபர் பொறையாறு அருகே உள்ள சிங்கானோடை கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 37) என தெரியவந்தது.

    இதையடுத்து குற்றவாளி முருகனை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிப்பதற்காக சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டு இளங்கோவன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை ஏட்டு இளங்கோவன் ஓட்டினார். பின்னால் முருகனும், சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியனும் உட்கார்ந்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சாலிப்பநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஏட்டு இளங்கோவன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஏட்டு இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். 

    இந்த விபத்தில் காயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த முருகன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான ஏட்டு இளங்கோவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான ஏட்டு இளங்கோவனுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை சித்தர்காடு ஆகும். ராணி என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். ராணி மணல்மேட்டில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்தும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சஞ்சய்குமார், மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு சென்று ஏட்டு இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #tamilnews

    Next Story
    ×