என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே பதுக்கி வைத்திருந்த 5 ஆயிரம் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
சீர்காழி:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் தேஷமுக் சேகருக்கு சீர்காழி பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஸ் தலைமையில் 5 போலீசார் கொண்ட குழு இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சீர்காழி அருகே உள்ள செம்மங்குடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. அதில் மது பாட்டில்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி தனிபடை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பாக்ஸ், பாக்சாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பேலீசார் அந்த இடத்தில் சோதனை செய்த போது கட்டிடத்தின் அருகே உள்ள கழிவறையிலும் மதுபாட்டில்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. அதே தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிலும் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் 3 இடங்களிலும் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தமாக 109 பெட்டிகள் பறிமுதல் செய்தனர். அதில் 5 ஆயிரத்து 232 மது பாட்டில்கள் இருந்தது. மது பாட்டில்களை இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிக்கு அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






