என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை தொழில் முனைவோரிடம் பிரதமர் மோடி, “வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.
    மயிலாடுதுறை:

    ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுடன் அவர் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மோடி காணொலி காட்சி மூலம் உரையாடியவர்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர். இவர் மயிலாடுதுறையில் ‘ஐமார்க் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் சுரேசை தொடர்பு கொண்டு உரையாடினார். சுரேஷ் தனது நிறுவனத்தில் இருந்தபடி பிரதமருடன் பேசினார்.


    சுரேசுடன் பிரதமர் பேசத்தொடங்கும் போது, “வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று தமிழில் பேசி நலம் விசாரித்தார். அதன்பிறகு அவர் ஆங்கிலத்தில் உரையாடினார்.

    அப்போது, டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விரிவாக பேசிய மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பொதுமக்களுக்கு குறிப்பாக ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே பொது சேவை மையம் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
    வேதாரண்யம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பாலு மற்றும் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம், மயிலாடுதுறை தனிப்படை உதவி ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை பகுதிக்கு ரோந்து பணி சென்றனர்.

    அப்போது அங்குள்ள அக்கரை பள்ளிவாசல் தென்புறம், கடற்கரை பகுதியில் 4 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த சுகுமாறன் (வயது 24), கோடியக்காடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (43), புஷ்பவனத்தை சேர்ந்த குமரசெல்வம் (40), அதே பகுதியை சேர்ந்த உமா ரமணன் (23) ஆகிய 4 பேரும் அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு உள்ளிட்ட குழுவினர் அவர்கள் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கிலோ கொண்டு கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கொண்டல் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25) இவருடன் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (45), கல்யாண சுந்தரம் (58), ரூபன் ராஜ்(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கொண்டல் அண்ணா பஜார் என்ற இடத்தில் சென்றபோது சாலையோர மணலில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். கல்யாண சுந்தரம், ரூபன்ராஜ் ஆகயோர் படுகாயம் அடைந்தனர். இதில் காயமின்றி தப்பிய பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான அறிவழகன் உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    நேற்று மாலை 5 மணியளவில் வள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இந்தநிலையில் வள்ளியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை கண்டித்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டுத்தான் மாணவி வள்ளி இறந்ததாக புகார் தெரிவித்தனர்.

    மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    மேலும் வயிற்று வலியால் தான் மாணவி இறந்ததாக மாணவியின் தந்தையை மிரட்டி பள்ளி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

    இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
    திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.

    இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    ‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.

    ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.

    எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews
    பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியில் அருள் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல தோப்புத்துறையில் விஜயகுமார் (37) என்பவரது கடையில் சோதனை செய்த போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 
    கீழ்வேளூர் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் வெள்ளித் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ராசாத்தி (வயது 55).

    சம்பவதன்று இவர் தனது மகள் அனிதாவை நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பொரவச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னிசன் பயிற்சி படிப்பதற்காக சேர்த்து விட்டு கல்லூரி வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்து அவரை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    மயிலாடுதுறை:

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    திருவாரூரில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தது. இதைதொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து உள்ளனர். உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகின்றார்.

    மயிலாடுதுறைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் ஆகியோர் நேரில் சென்று பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மயிலாடுதுறை சின்னக்கடைத்தெரு இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது முதல்- அமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதை மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரும் பாதை, திரும்பி செல்லும் பாதை, கார்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ள நகராட்சி மருத்துவமனை வளாக திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், பாதுகாப்பு காரணங்களையொட்டி போலீசார் பணிபுரிய வேண்டிய இடங்கள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள், மாற்றம் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து வழித்தடங்கள், திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் சிரமப்படாமல் அமரும் வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalanisamy
    புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் சங்பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநில அரசை எதிர்பார்க்க தேவையில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
    கீழ்வேளூர்:

    நாகை அடுத்த நாகூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசை எதிர்பார்க்க தேவையில்லை. வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, அரசுத் துறைகளில் இணை செயலாளர்களாக நியமிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    மேலும், நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார அமைப்புகளை அரசு துறைகளில் உள்ளே கொண்டு வரவே மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதை ஒரு போதும் புதுச்சேரி அரசு ஏற்றுக் கொள்ளாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மூவலூர் தேரடி வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

    தி.மு.க. வை விட்டு விலகிச் சென்றவர்கள் அனைவரும் தற்போது வைகோ, வந்தது போல மீண்டும் தி.மு.க.விடமே வந்து சேர்வார்கள். அ.தி.மு.க. இரண்டு தலைமைகள் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இது நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. சிதறி சின்னா பின்னமாகிவிடும்.

    தி.மு.க. வில் 2-வது தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    சினிமாவில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிற ரஜினி நிஜத்தில் தனது உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லி மக்களை குழப்புகிறார்.

    தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தமிழகத்திலேயே ஓடும் ரெயிலுக்கு ‘அந்த்யோதயா’ என்ற இந்தி பெயரை வைத்துள்ளனர். அந்த ரெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடியை காட்டி தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை இந்தியை திணிக்க முடியாது.

    தற்போது தமிழை மறக்கடிக்க வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க இன்னும் 250 ஆண்டுகளாவது ஆகும். எதனையும் எதிர்க்க தயாராக தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கேரளாவில் சென்று எழுதினால் என்ன தவறு? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வர இருக்கிற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும், தமிழிசை வெளிமாநிலத்திலும் நின்று ஜெயிக்க முடியுமா?

    இவ்வாறு ராதாரவி பேசினார். #DMK #RadhaRavi #ADMK #BJP
    ×