என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 மீனவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்கவும், போராளிகள் ஊடுருவலை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இருந்தபோதிலும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருதல், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்லுதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, தோப்புத்துறை ஆகிய இடங்களில் சுங்க இலாகா அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ரோந்து செல்லும் நவீன படகுகள் பழுதாகி விட்டன. எனவே சுங்க இலாகாவினர் ரோந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வேதாரண்யம் பகுதியில் கடலோர காவல் படை, கப்பல் படை அலுவலங்களும் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் கண்காணிப்பை மீறி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆறுக்காட்டுத்துறையில் இருந்து இலங்கைக்கு கடத்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், மும்தாஜ் பேகம் மற்றும் போலீசார் ஆறுக்காட்டுத்துறைக்கு விரைந்து சென்று வெற்றிவேல் என்ற மீனவரின் உறவினருக்கு சொந்தமான கொட்டகையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 20 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைபற்றபட்டது. அதில் 20½ கிலோ கஞ்சா இருந்தது.

    இது தொடர்பாக போலீசார் வெற்றிவேல் (வயது 41), ராஜேந்திரன் (56) ஆகிய 2 மீனவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா வைக்கப்பட்டிருந்ததா? இதில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #ONGC
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

    இந்த எண்ணெய் குழாய்கள் விளைநிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  #ONGC


    வேதாரண்யம் அருகே தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டை காரனிருப்பு அடுத்த சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று சந்தோஷ், வேட்டைக்காரனியிருப்பில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி காரில் வந்தார். காரை டிரைவர் ஓட்டினார். திடீரென மோட்டார் சைக்கிள் மீது எம்.எல்.ஏ. கார் மோதியது.

    இதில் மாணவர் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு எம்.எல்.ஏ. காரிலேயே சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேட்டை காரனிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ. கார் மோதி கல்லூரி மாணவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    மயிலாடுதுறையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தது தொடர்பாக தினகரன் கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    மயிலாடுதுறை:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசும்போது ‘‘ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டியவர் டி.டி.வி.தினகரன்’’ என்று கூறினார்.

    இதனை கண்டித்தும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

    முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் இருந்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் அந்த கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி வந்தடைந்தவுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், திடீரென திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றினர்.

    பின்னர் போலீசார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மாவட்ட செயலாளர் செந்தமிழன் உள்பட 47 பேரை கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    சீர்காழியில் தேவையான மாத்திரைகள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சீர்காழி:

    சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர். 

    இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

    முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    குத்தாலம் அருகே லோடு ஆட்டோ மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகம் செங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின்(40). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் பாலையூர் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஸ்டாலின் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மயிலாடுதுறையில் இன்று அதிகாலை அம்மன் கோவில் உண்டியல் உடைத்து 2 பேர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் 2-வது புதுத்தெருவில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை கோவில் பகுதியில் இருந்து ஏதோ உடைக்கப்படும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி வேகமாக தப்பி சென்றனர்.

    பின்னர் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது வாசலில் இருந்த இரும்பு உண்டியலின் பூட்டை அந்த 2 மர்ம நபர்கள் உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது.

    உடனடியாக இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று உண்டியலை உடைத்து திருட முயற்சிப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கடந்த 8-ந் தேதியும் இதேபோல் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இதே கோவிலில் கடந்த 2 முறை உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இக்கோவிலின் அருகில் தரங்கம்பாடிக்கு செல்லும் ரெயில்வே வழித்தடம் உள்ளது. இதில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அமர்ந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மயிலாடுதுறை போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அ.தி.மு.க. அரசின் சட்ட போராட்டத்தால் காவிரி வழக்கில் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பபாடி பழனிசாமி கூறினார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    கிட்டத்தட்ட 38 ஆண்டு காலம் நடைபெற்ற காவிரி பிரச்சினைக்கு இன்றைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அம்மாவின் அரசினால் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது.

    ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, 38 ஆண்டுகள் காவிரி நீரை பெற தமிழக விவசாயிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் போராடினர். அதில் முக்கியமாக போராடியது அ.தி.மு.க. என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். யார் வேண்டுமானாலும் போராடலாம். ஆனால் யார் போராடினால் தீர்வு கிடைக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அந்த தீர்வை பெற்றுத்தந்தது அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் தான்.

    சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்ற தலைவி ஜெயலலிதா. இதற்காகத்தான் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு கொடுத்தார்கள். அப்போது நானும் ஒரு விவசாயி என்று மகிழ்ச்சியுடன் ஜெயலலிதா கூறினார். இது வரலாற்று சாதனை.

    ஒரு முதல்-அமைச்சர் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று வரலாற்று சாதனையை பெற்றார். ஆனால் அதன் பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதனை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதினார். எந்த தீர்வும் கிடைக்காததால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்றைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. சட்டபோராட்டத்தின் மூலமாகத்தான் இந்த தீர்ப்பை ஜெயலலிதா பெற்று தந்திருக்கிறார்.

    விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்சினையும் தீர்த்து வைத்த அரசு அ.தி.மு.க. அரசு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவுக்கும் உறுப்பினரை நியமித்துள்ளது. கேரளா, புதுச்சேரி அரசும் உறுப்பினரை நியமித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு உறுப்பினரை நியமிக்காமல் மறுத்து வருகிறது.

    இதுகுறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். பருவ காலம் தொடங்கி விட்டது. விவசாயிகள், தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே இரண்டு குழுக்களின் கூட்டத்தை உடனே கூட்டி அந்த கூட்டத்தின் வாயிலாக 38 ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தினேன். காவிரி பிரச்சினையை கையாண்டு அ.தி.மு.க. அரசு தீர்த்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது காவிரி பிரச்சினைக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருக்கிறதா?.

    விவசாயிகளின் உரிமைக்காக போராடிய அரசு அ.தி.மு.க. அரசு தான். தமிழகத்தின் உரிமையை பெற, விவசாயிகளின் உரிமையை பெற மாவட்டந்தோறும் உண்ணாவிரதம் இருந்து விவசாயிகளின் குரலை ஒலிக்க செய்தோம்.

    ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். எல்லோருக்கும் தெரியும் அணையில் தண்ணீர் இருந்தால் திறக்க முடியும் என்று. அணையில் தண்ணீர் இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தால்தான் திறக்க முடியும். போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் திறக்க முடியாது. 5 ஆண்டுகள் அணை திறக்க வாய்ப்பில்லை என்றாலும் சரியான நேரத்தில் குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு ரூ.115 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சி பட்ஜெட் போடும் வரை நீடிக்குமா? என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். பட்ஜெட் போட்டு விட்டோம். மானிய கோரிக்கையை நிறைவேற்றும் வரை தாக்குப்பிடிக்குமா? என்றார். மானிய கோரிக்கையையும் நிறைவேற்றினோம்.

    6 மாத காலத்தில் ஆட்சி கலையும் என்றார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழிந்து 4 மாதங்கள் ஆகி விட்டது. 16 மாதங்களாக அம்மா அரசு வெற்றிகரமாக வீறுகொண்டு செயல்பட்டு வருகிறது. ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் முளைத்து வந்தாலும் அ.தி.மு.க. அரசை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

    கட்சியை உடைக்க மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் முடியவில்லை. சில பேரிடம் ஆசைவார்த்தை காட்டி, மூளை சலவை செய்து சில எம்.எல்.ஏ.க்களை எங்களிடம் இருந்து பிரித்தீர்கள். அதற்கு சில விஷமிகள் துணைபோனார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் டி.டி.வி.தினகரன் எப்படியெல்லாம் கொடிகட்டி பறந்தார். அவர் யார்? கட்சிக்கு உழைத்தாரா? எதுவும் செய்யவில்லை.

    ஒருவரின் சொந்தக்காரர் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வளவு ஆட்டம் போட்டார். எப்படியெல்லாம் ஆட்டி படைத்தார். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. கட்சிக்காரர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் ரூ.2 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சி ஆனதாண்டபுரம் செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நகராட்சியில் எடுக்கபடும் குப்பைகளை இங்கு 50 ஆண்டுகாலமாக கொட்டபட்டு மலை போல் குவிக்கப்பட்டு உள்ளது. இதை தரம் பிரித்து ரீசைக்கிளிங் முறையில் பயன்படுத்தபட்டு வந்தது. இதை சுற்றி 20-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு அடிக்கடி தீ பற்றுவதால் இதிலிருந்து எழும் புகையால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் குப்பை கிடங்கை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதனை அடுத்து தமிழ்நாடு நகராட்சி இயக்குனரக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி குப்பை கிடங்கு மேம்பாட்டுக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைகொண்டு குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து உரமாகவும் கழிவுகளை சாலை அமைக்க அனுப்பப்படும்.

    இப்பணி தொடரும் பட்சத்தில் குப்பை சேருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிடங்கை சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயிலாடுதுறையில் இன்று காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
    மயிலாடுதுறை:

    சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பு பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் இன்று (திங்கட்கிழமை) மாலை காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்குகிறார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவையொட்டி முதல்-அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு காலை 11.40 மணிக்கு வருகிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக கார் மூலம் மயிலாடுதுறை வருகை தருகிறார்.

    பின்னர் மாலை 6 மணியளவில் முதல்-அமைச்சர் பேசுகிறார். பலத்த போலீஸ் பாதுகாப்புமுதல்- அமைச்சர் வருகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு தலைமையில், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 29 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று மயிலாடுதுறை நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் வாக்கி டாக்கியுடன் செயல்படுகின்றனர்.

    நகர எல்லைப்பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் வழியில் உள்ள பாலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் குறிப்பாக கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் சாலையில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீருடை அணியாத போலீசாரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #CauveryIssue #TNCM #EdappadiPalanisamy
    கும்பகோணம் அருகே குட்டையில் விளையாடிய போது மண்சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 10), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் மகள் வர்சினி (12). சியாமளா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், வர்சினி 7-ம் வகுப்பும் படிந்து வந்தனர்.

    பள்ளி விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜகாலனி கீழத்தெருவை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி வீட்டுக்கு மாணவி சியாமளாவும், வர்சினியும் சென்று இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொம்புகாரன் குட்டையில் ஆழமாக மண் எடுக்கப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2 பேரும் இறங்கி விளையாடிய குழியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள் 2 பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சியாமளாவும், வர்சினியும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குட்டையில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாகவும் , அந்த குழியை சரிசெய்யாமல் விட்டுச்சென்றதுதான் சிறுமிகள் சாவுக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, உதவி கலெக்டர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வேலைக்கு செல்லாததற்கு பெற்றோர் கண்டித்ததால் அரளி விதையை அரைத்து தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் குத்தாலம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜ்குமார் (வயது20). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை (விஷம்) அரைத்து தின்றார். உடனே அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×