என் மலர்
நாகப்பட்டினம்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மதுபானம், சாராயம் கடத்தல் நடந்து வருகிறது. இவைகளை தடுக்க சோதனை சாவடிகள் செயல்பட்டபோதும் மது கடத்தல் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார், பெரம்பூர், குத்தாலம், சித்தர்காடு ஆகிய இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.
அப்போது மதுபாட்டில்களையும் சாராயத்தையும் கடத்தி வந்த 2 சொகுசு கார்கள் ஒரு மினி லாரி ஆகியவை பிடிபட்டன. அவைகளில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 544 மதுபாட்டில்கள், 600 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த காரைக்காலை சேர்ந்த சதீஷ் (வயது31), வின்ஸ்ராஜ் (21), மதிவாணன் (40), கார்த்திகேயன் (28), சுரேஷ் (44), விக்டர் (32), பவித்ரன் (19) உள்பட 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள், வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
காரைக்கால், கும்பகோணம் பகுதிக்கு மதுபாட்டில்களை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களின் பின்னணியில் முக்கிய நபர்கள் உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
கீழ்வேளூர்:
நாகை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 27). இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. பிரபல ரவுடியான சிவராமன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பரவை என்ற கிராமத்துக்கு சிவராமன் சென்றார்.
பின்னர் அங்குள்ள ஓட்டலில் அவர் சாப்பிட்டார். அப்போது சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதையடுத்து பணம் எதுவும் கொடுக்காமல் அந்த ஓட்டலை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் சிவராமன், வடவூர் ரோட்டில் தலையில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவராமனை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி சிவராமன் பரவை கிராமத்தில் உள்ள ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வாராம். நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் இந்த பிரச்சினையால் சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை மர்ம கும்பல் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பா.ஜனதா தலைவர் தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழிசையை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் பெண்களை இழிவாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க. செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் நாகை கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேளாங்கண்ணி சின்ன மாதா கோவில் அருகே அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் நின்று கொண்டு இருந்ததை பார்த்தனர்.
அவர்கள் அருகில் சென்ற கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின்போது அவர்கள், முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்களை போலீசார் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள், இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் என்பது என்பது தெரியவந்ததுய இவர்கள் மதுரை அகதிகள் முகாமில் இருந்து தப்பி வந்துள்ளதும் தெரியவந்தது.
இவர்கள் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து அதற்காக ஏஜெண்டுகள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து கள்ள படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தபோது கியூ பிரிவு போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
நாகையை அடுத்த நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர்கள் சிவக்குமார் மனைவி கலா (வயது 35). ஆறுமுகம் மனைவி சுமித்ரா(35). புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி(30). ரத்தினவேல் மனைவி ஜெயபிரியா(35). ரமேஷ் மனைவி இன்பவள்ளி(36). இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்.
இன்று காலை நாகையில் இருந்து லோடு ஆட்டோவில் மீன் ஏற்றிக் கொண்டு வாஞ்சூரில் விற்பதற்காக வந்துள்ளனர். லோடு ஆட்டோவை மேலவாஞ்சூர் ஆசாரி தெரு பக்கரி சாமி மகன் நாகராஜ்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் லோடு ஆட்டோ வந்தபோது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால் பண்ணைச்சேரி கீழத் தெரு சிவக்குமார் மகன் இசால் (வயது17) மீது மோதாமல் இருக்க நாகராஜ் பிரேக் போட்டுள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ தலை கீழாக கவிழ்ந்தது. நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த கலா உள்பட 5 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜ், இசால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பூதங்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நரிமணத்தில் உள்ள ரேசன் கடையில் உள்ள பொருட்கள் வாங்க நரிமணம் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் தாங்க முடியாமல் திடீரென கிருஷ்ணன், ரோட்டில் சுருண்டு கீழே விழுந்தார். இதில் அவரது பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவிலில் சிவன். முருகன், விநாயகர் கோயில்களும் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு வந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து செல்கின்றனர்.
சீனா பெய்ஜிங்கை சேர்ந்த யன் என்பவர் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகிறார். சீனா சங்காயைச் சேர்ந்த ரூபிங் அழகுகலை நிபுணராக இருந்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பட்டு நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஒளிலாயத்தை தேர்வு செய்து அங்கு வந்தனர். அருள், கணேஷ், செந்தில், பழனி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யன், ரூபிங் திருமணம் நாதஸ்வரம், மேளக்கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டு புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது பலரும் அர்ச்சகை தூவி ஆசி வழங்கினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணபெண்ணிற்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு திரண்டிருந்தவர்கள் அன்பளிப்பு பொருட்களை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கு அறுசுவையுடன் விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடி முத்து, செந்தமிழன், மாமல்லன் செய்திருந்தனர். #ChineseCouple
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நாகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவரது மகன் விக்ரம் (வயது 35).
இவர், சென்னையில் சின்னத்திரை மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். விக்ரம், கும்பகோணத்தில் உள்ள தனது அக்கா அனுராதா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது கும்பகோணம் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் மகள் நீலாவதியுடன் (21), விக்ரமுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலாவதி குளித்துக் கொண்டிருந்தபோது விக்ரம் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
தனது செல்போனில் எடுத்த படத்தை நீலாவதியிடம் காட்டிய விக்ரம், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீலாவதி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் விக்ரம், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த படத்தை அனைவரிடமும் காட்டுவேன் என கூறி நீலாவதியை மிரட்டினார். இதனால் செய்வதறியாது திகைத்த நீலாவதி, கும்பகோணம் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் தனது நண்பர் ராகுலிடம்(23) இது குறித்து கூறினார். இந்த நிலையில் விக்ரம், வேளாங்கண்ணிக்கு சென்று வரலாம் என கூறி நீலாவதியை அழைத்துள்ளார். இதை நீலாவதி, தனது நண்பர் ராகுலிடம் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலாவதியும், ராகுலும் சேர்ந்து விக்ரமை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதன்படி நேற்று விக்ரமும், நீலாவதியும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து ராகுலும் வேளாங்கண்ணிக்கு வந்தார். வேளாங்கண்ணி கடலில் நீலாவதியும், விக்ரமும் குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராகுல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்ரமின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலாவதியையும், ராகுலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசும்போது கூறியதாவது:-
“2004 ம் ஆண்டு சுனாமி எனும் பேரிடரை தமிழகம் சந்தித்த போது, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசு அலுவலர்களை முடுக்கி விட்டு, சுனாமியால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடு, உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, உணவு, உடையின்றி தவித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், போர்க்கால அடிப்படையில் செய்திட அறிவுறுத்தினார். இதன் மூலம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த போர்க்கால நடவடிக்கையினை பார்த்து உலகமே வியந்தது. இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களது நிரந்தர வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியின் மூலம் தனியாரிடம் நிலம் வாங்கி நில ஆர்ஜிதம் செய்து, குடியிருப்புகள் கட்டப்பட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிமனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கிராம மற்றும் வட்ட கணக்குகளில் உரிய பயனாளிகளின் பெயரில் மாற்றம் செய்து பட்டா வழங்கப்படுகிறது.
சுனாமி நிரந்தர குடியிருப்புகள் வழங்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்து கொள்ளவும், அல்லது வங்கிக்கடன் பெற்று புதிதாக கட்டிக்கொள்ள ஏதுவாகவும், பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகள் மேற்கோண்டு வருகிறது. சுனாமி வீடு பழுதுபார்ப்பதற்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்வளக் கல்லூரியில் பயில மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வானகிரி, செருதூரில் முகத்து வாரங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகமும், தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்திட தமிழக அரசு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மயிலாடுதுறை ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சேத்தூர் மேலத்தெருவில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நடத்திய வரவு செலவு கணக்கு சம்பந்தமாக அப்பகுதியில் இருதரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சேத்தூர் மேலத்தெருவை சேர்ந்த கலியன் (வயது70) என்பவரை கோயில் கணக்கு வழக்குகளை கேட்டதால் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், பரமானந்தம், ஞான சேகர்(31), கணேஷ்குமார்(46) மாதவன் (36), தினேஷ்குமார்(23), ரவி(51), வீரபாண்டியன்(40), தாஸ்(30), சேதுராமன்(32), புவனேஸ்வரி ஆகியோர் கலியன் மற்றும் அவரது மனைவி ராணியை வழிமறித்து, தகராறு செய்து அரிவாள் மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து கலியன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் மாரியப்பன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஞானசேகர், கணேஷ்குமார், மாதவன், தினேஷ்குமார், ரவி, வீருபாண்டியன், தாஸ், சேதுராமன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இதேபோன்று சேது ராமன்(32), அவரது மனைவி புவனேஸ்வரி(28) ஆகிய இருவரையும் குணசேகரன் (34), கலியன், சுந்தர்(30), கோபி(30), ராஜேந்திரன் (59), இளையராஜா(38), மகேந்திரன்(23), வரதராஜன், மணிகண்டன், சிற்றரசன், ராணி(60) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சேதுராமன் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து குணசேகரன், சுந்தர், கோபி, ராஜேந்திரன், இளையராஜா, மகேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் சேத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் நேற்று இரவு பணி முடிந்து சாதாரண உடையில் மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற 3 பேர் கும்பல் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை தள்ளி விட்டனர். இதை கண்ட ரவிச்சந்திரன், அவர்களை கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், ஏட்டு ரவிச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த நடராஜன் (34), வானாதிராஜபுரத்தை சேர்ந்த பாலு (38), மற்றும் வினோத்குமார்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 1 வாரமாக கோடியக்கரை பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கோடியக்கரை பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோடிக்கரை மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






