என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்தாலம் கோஷ்டி மோதல்"

    குத்தாலம் அருகே கோவில் திருவிழா கணக்கு கேட்டதில் கோஷ்டி மோதல் சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சேத்தூர் மேலத்தெருவில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நடத்திய வரவு செலவு கணக்கு சம்பந்தமாக அப்பகுதியில் இருதரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சேத்தூர் மேலத்தெருவை சேர்ந்த கலியன் (வயது70) என்பவரை கோயில் கணக்கு வழக்குகளை கேட்டதால் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், பரமானந்தம், ஞான சேகர்(31), கணேஷ்குமார்(46) மாதவன் (36), தினேஷ்குமார்(23), ரவி(51), வீரபாண்டியன்(40), தாஸ்(30), சேதுராமன்(32), புவனேஸ்வரி ஆகியோர் கலியன் மற்றும் அவரது மனைவி ராணியை வழிமறித்து, தகராறு செய்து அரிவாள் மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து கலியன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் மாரியப்பன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஞானசேகர், கணேஷ்குமார், மாதவன், தினேஷ்குமார், ரவி, வீருபாண்டியன், தாஸ், சேதுராமன் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    இதேபோன்று சேது ராமன்(32), அவரது மனைவி புவனேஸ்வரி(28) ஆகிய இருவரையும் குணசேகரன் (34), கலியன், சுந்தர்(30), கோபி(30), ராஜேந்திரன் (59), இளையராஜா(38), மகேந்திரன்(23), வரதராஜன், மணிகண்டன், சிற்றரசன், ராணி(60) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சேதுராமன் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து குணசேகரன், சுந்தர், கோபி, ராஜேந்திரன், இளையராஜா, மகேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் சேத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×