என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறையில் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் வேளாண்மை கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் 2016..2017 ஆண்டு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்திருந்தனர்.

    இதில் மணல்மேடு, கிழாய், கேசீங்கன், நடராஜபுரம் கிராமங்களை சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.58 லட்சம் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயி செழியன் தலைமையில் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சங்க செயலர் செல்லபாண்டியன் ஒரிருதினங்களில் காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
    நாகூர் அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர்.
    நாகூர்:

    சென்னை விஜயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் அரவிந்த் (வயது25). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அரவிந்த் ஓட்டி வந்துள்ளார். அப்போது நாகூர் அருகே பூதங்குடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார், சாலையின் ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் வந்த 7 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். மேலும், தகவல் அறிந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் கைவிட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட சில மீனவர் கிராமங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளும் கடலில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கோடியக்கரையில் இருந்து நேற்று ஒருசில படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வலையில் ஒரு கிலோ இரண்டு கிலோ என குறைந்த அளவிலேயே வாவல் மீன்கள் மட்டும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர். ஒருநாள் மீன்பிடிக்க சென்று வர குறைந்தபட்சம் ரூ.3500 செலவாகும் நிலையில் பிடிபடும் மீன்கள் ரூ.500க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.3000 நஷ்டத்தை சந்திக்கும் பைபர் படகு மீனவர்கள் படகுகிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தாங்களும் வீடுகளில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

    தற்போது ஆறுகாட்டுத்துறையில் சென்றுவந்த ஒருசில படகுகளில் சீலா, இறால், நண்டு குறைந்த அளவில் கிடைத்தன. சீலா கிலோ 600க்கும் இறால் 150க்கும் புள்ளி நண்டு 150க்கும் நீலக்கால் நண்டு 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது ஆறுகாட்டுத் துறையில் கானாங்கெளுத்தி, மத்தி, வாவல், சுறா, காலா போன்ற மீன்கள் அதிகளவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மீன்கள் அறவே கிடைக்காததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இது குறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர் ஒருவர் கூறும்போது,

    விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி. இரட்டைமடி பயன்படுத்துவதால் மீன்வளம் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் சிறிது தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை முற்றிலும் தடை செய்து சிறு மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.
    தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கட்சிகள் மீது பயம் ஏற்பட்டுள்ளதால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என பிதற்றி வருகிறார்.

    தமிழகத்தில், தீவிரவாதம் எங்கு இருக்கிறது? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இங்கு தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #OSManian

    நாகை அருகே பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள்-ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இசபெல்லா ஜூலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பள்ளி ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலியை சூழ்ந்து கொண்டு, நீங்கள் வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று கூறி அவரது கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மாணவ, மாணவிகளின் பாசப்போராட்டத்தை கண்ட ஆசிரியையும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியையின் பாச போராட்டத்தை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டனர். மாணவ, மாணவிகள் ஆசிரியையை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. 
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
    திருச்சிற்றம்பலம் அருகே தந்தை மகன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்சிற்றம்பலம்:

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர். ( வயது 40 ). இவர் வசிக்கும் பகுதியில் அரசு புறம் போக்கு இடத்தில் பொது பாதை உள்ளது. இந்த பாதையை பலர் நீண்ட வருடங்களாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சம்மந்தப்பட்ட பாதையில் லாரியில் மண் கொண்டு வந்து நிரவிக்கொண்டிருந்தார். அதை இதே பகுதியில் வசித்து வரும் பிரான்சீஸ்சேவியர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜோசப்பின் சகோதரி கிரேசி, கிரேசி அவரது கணவர் அருள், ஜான். அருண்பிரபு, பிரவீன்குமார், சேசு இமானுவேல், மெலீக்கீஸ்ராஜ் ஆகிய 7 பேரும் வீட்டில் இருந்த பிரான்சீஸ்சேவியர், அவரது தந்தை பாக்கியம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரான்சீஸ் சேவியர் மற்றும் அவரது தந்தை பாக்கியம் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த ஆரோ அருளின் ஆட்கள் மாந்தோப்பு என்ற இடத்தில் மீண்டும் வழி மறித்து தாக்கி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பிரான்சீஸ் சேவியர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ஞானசுமதி 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செருதூர் - வேளாங்கண்ணி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளையாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட பாலத்தையும், தலைஞாயிறு ஒன்றியம் வண்டல் அவுரிக்காடு சாலையில் நல்லாறு, அடப்பாறு, முள்ளியாற்றில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இணைப்பு பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

    மேலும், பொதுப்பணித்துறை சார்பில் அரிச்சந்திரா நதியின் குறுக்கே பிரிஞ்சிமூலை இயக்கு அணையை ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவித்திட்டம் மூலம் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புணரமைத்து மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும், கள்ளிமேடு கிராமத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வெண்ணாறு உபவடிநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டுமான பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் சாலைகுகன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்்பொறியாளர்கள் வேட்டைச்செல்வம், ஞானசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார்கள் சங்கர், தையல்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந் தனர். 
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. 
    திட்டச்சேரி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமருகல்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உள்ள மத்தியகுடியைச் சேர்ந்த தம்புதாஸ் மகன் பிரபாகரன் (வயது 27). இருவரும் நண்பர்கள் ஜீவன் ராஜகுரு (27). காமராஜ் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திட்டச்சேரியிலிருந்து திருப்பட்டினம் நோக்கி சென்றனர்.

    அவர்கள் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடிச்சேரி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காமராஜ், ஜீவன் ராஜகுரு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்த பிரபாகரன் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த காரைக்கால் அருகே கோவில்பத்தை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருக்கண்ணபுரம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் தனது தாயை பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து சென்ற போது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் திட்டச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி தாசில்தாரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி தாசில்தாராக இருந்து வருபவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேலகொண்டத்தூர் மண்ணியாற்று பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது அங்கு நின்ற ஒலையாம்புத்தூர் பகுதியை சேர்ந்த வரதராஜன் (30) மற்றும் அவரது நண்பர் ஆகியோர் , தாசில்தார் பாலமுருகனிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார் பாலமுருகன், இந்த சம்பவம் பற்றி வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாசில்தாரை மிரட்டிய வரதராஜனை கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சம்பள உயர்வுகோரி ரேசன் கடை பணியாளர்கள் 9-ந்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். #Rationshopstrike

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாகையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரே‌ஷன் கடைகளுக்கு சரியான எடையிலும், கார்டு எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்களுக்கும், ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சரியான எடையில், ரே‌ஷன் கார்டுகளுக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு வழங்க வேண்டும்.

    ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு என தமிழக அரசு தனித்துறை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். எனவே 9-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rationshopstrike

    ×