என் மலர்
நாகப்பட்டினம்
நாகை பகுதியில் பல்வேறு இடங்களில் பழச்சாறு விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில் குளிர்சாதன பெட்டியில் வைத்தவாறு விற்கப்படும் பழச்சாறு விற்பனைக்கடைகளும் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் கலவை பழச்சாறு(புரூட்மிக்சர்) தயாரிக்க பயன்படுத்தப்படும் பழங்கள் நல்ல நிலையில் உள்ளனவா? அல்லது கெட்டுப்போன பழங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் நாகை, வெளிப்பாளையம் பகுதிகளில் உள்ள 5 பழச்சாறு விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளிப் பாளையம் பப்ளிக் ஆபிஸ்ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் கலவை பழச்சாறு தயாரிப்பதற்காக அழுகிப் போன பழங்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அழுகிப் போன பழங்கள் மற்றும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழச்சாற்றினை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழிக்கப்பட்டது. பின்னர், ஆய்வு செய்யப்பட்ட பழச்சாறு விற்பனையாளர்களிடம் பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையான பழச்சாறில் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது. பழச்சாறு தயாரிப்பவர்கள் தன்சுத்தத்தை பேண வேண்டும். விற்பனை நடைபெறும் இடத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அனைத்து விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையிடம் பெறப்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
புதுச்சேரியில் இருந்து நாகை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தேஸ்முக்சஞ்சய் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு சீர்காழி அருகே உள்ள சூரக்காடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டிகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் காரையும் அதில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 400 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது 45). என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராஜமாணிக்கம் (வயது 23). கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்த தர்மன் மகன் சதீஷ் (27).
இவர்கள் 2 பேரும் பொறையாறு அடுத்த தில்லையாடி பைரவபிள்ளை தெருவை சேர்ந்த பட்டாசு வியாபாரி மோகன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சீர்காழி அருகே கொடுவாய் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக கோவில் நிர்வாகத்தினர் வாணவேடிக்கை நடத்துவதற்காக மோகனிடம் பட்டாசு ஆர்டர் கொடுத்திருந்தனர்.
இதனால் திருவிழாவுக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கொண்டு செல்ல இன்று அதிகாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ராஜமாணிக்கமும், சதீசும் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். பின்னால் ராஜமாணிக்கம் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை தனது வயிற்று பகுதியில் வைத்திருந்தார். மேலும் சில பட்டாசுகளை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் அடுத்த ஆக்கூர் முக்கூட்டு கருவேலி என்ற இடத்தில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு பாலத்தில் சென்ற போது பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் ராஜமாணிக்கம், சதீஷ் ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது திடீரென ராஜமாணிக்கம் வைத்திருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. இதில் பட்டா சுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்ததால் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சதீசும் படுகாயம் அடைந்தார். இந்த வீபத்தில் மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதமானது.

அதிகாலை நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி கிராம மக்கள் திரண்டு வந்தனர். அங்கு ராஜமாணிக்கம் உடல் சிதறி பலியாகி கிடப்பதையும், சதீஷ் காயத்துடன் சத்தம் போட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி பொறையாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் காயம் அடைந்த சதீசை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மயிலாடு துறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் செம்பனார் கோவில் போலீசார் விரைந்து வந்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசு வெடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம், திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்காடி புதிய கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கோபால் எம்.பி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர்கள் அவை.பாலசுப்பி்ரமணியன் (தலைஞாயிறு), கிரிதரன் (தேத்தாக்குடி), மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருகிற பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு நாகை மாவட்டத்திற்குட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினரின் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கிராம பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்களுக்கும் மேலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் கிராம பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 வாக்குச்சாவடிகளையும், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளையும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 வாக்குச்சாவடிகளையும், பிரிப்பது தொடர்பாகவும், பழுதடைந்த 74 வாக்குச்சாவடிகளை மாற்றி அதே அமைவிடத்தில் உள்ள வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யவும், அதேபோல 24 வாக்குசாவடிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பாகவும், கருத்துக்கள் கோரப்பட்டது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, கிராமபுறங்களில் 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள 9 வாக்குச்சாவடிகளை வாக்காளர்களின் வசதிக்காக பிரிக்கப்படும் எனவும், பயன்படுத்த இயலாதநிலையில் உள்ள வாக்குசாவடி மையங்கள் மற்றும் பெயர் மாற்றப்படும் எனவும், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் வசதிக்காக மின்சார வசதி, குடிநீர்வசதி, சாய்தள வசதி, கழிப்பிட வசதிகள் ஆகியவை அமைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் மீனவர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தொழிலாளர்களுக்கும் மீன் வர்த்தகம் கை கொடுத்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட விசை படகுகள், பைபர் படகுகள் முலம் மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சுறா, வஞ்சிரம், திருக்கை, கனவா, இறால், நண்டு மற்றும் கானாங்கெழுத்தி, மத்தி, கோலா போன்ற மீன்கள் சீசனுக்கு ஏற்றவாறு அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு வரப்படும் மீன்கள் தனித் தனியாக ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் வெளி மாநில வியாபாரிகள் இறால், நண்டு, மத்தி மீன் போன்றவற்றை வாங்குவதற்கு இங்கேயே நிரந்தரமாக தங்கி உள்ளனர்.
மீன்கள் மட்டுமின்றி தரம் பிரிக்கப்படும் மீன் வகைகளில் சிறிய அளவில் காணப்படும் ஒரு வகை கழிவு மீன்கள் காய வைக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனம் தயாரிக்க கருவாடாக அனுப்பப்படுகிறது.
தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் நாகை பகுதியில் அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற இடங்களில் தீவன கருவாடுகள் காயவைக்கும் பணியில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்வேளூர்:
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கீழ தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி உய்யம்மாள் (வயது 80). இவரது மகன் கலியமூர்த்தி (60).
கலியமூர்த்திக்கு பூசம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் உய்யம்மாளுக்கும், அவரது மருமகள் பூசத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அப்போது கலியமூர்த்தி மனைவிக்கு ஆதரவாக இருந்து தனது தாயை தாக்குவாராம்.
இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உய்யம்மாளுக்கும், பூசத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பெற்ற தாய் என்றும் பாராமல் அடித்து உதைத்தார். அப்போது நிலை குலைந்து உய்யம்மாள் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்து விட்டார். தாய் இறந்ததை கண்டு கலியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே வெளியே தெரியாமல் வீட்டிலேயே தாய் உடலை புதைத்து விட முடிவு செய்தார்.
பின்னர் வீட்டின் பின்புறம் கொல்லையில் குழி தோண்டி தாயின் உடலை புதைத்து விட்டார். பிறகு அவர் வழக்கம் போல் வெளியே உள்ளவர்களிடம் பேசி பழகி வந்தார்.
இந்த நிலையில் உய்யம்மாளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை வரும். இதேபோல் இந்த மாதத்துக்கான உதவி தொகை வந்தது. உய்யம்மாள் இறந்து விட்டதால் உதவிதொகை வாங்க முடியவில்லை. இதனால் உய்யம்மாளை எங்கே? என்று அக்கம்பக்கத்தினர் கலியமூர்த்தியிடம் கேட்க தொடங்கினர். அவர் தாய்க்கு உடம்புக்கு சரியில்லை. இதனால் வீட்டிலேயே இருக்கிறார் என்று கூறி சமாளித்து பார்த்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்டதால் வேறுவழியின்றி ஊர் நாட்டாண்மை சுப்பையா என்பவரை சந்தித்து தனது தாய் உய்யம்மாளை கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவத்தை கூறினார்.
இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கலியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். தாயை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெற்ற தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர் களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மகளிர்குழு அமைப்பாளர் ஜம்ருத்நிஷா, வட்டார தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் வளர்மாலா, பொருளாளர் மணிவண்ணன், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் சரவண பெருமாள், ஓவர்சீயர் சங்க மாவட்ட செயலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டார தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாகை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து 8 நாட்களாக பணிக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பணிகள் நிமித்தமாக வரும் பொதுமக்களும் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொறையாறு:
நாகை மாவட்டம் பொறையாறில் அமைந்துள்ளது தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி. கடந்த 1882-ம் ஆண்டு இந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. 1956-ம் ஆண்டு இந்த பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. 1978-ம் ஆண்டு இந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் 775 பேர் படித்து வருகிறார்கள். 44 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 136-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மத்திய- மாநில அரசின் பல்வேறு உயர் பதவிகளிலும், வெளிநாடுகளில் பல்வேறு உயர் பதவிகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள் நலன் கருதி ரூ.30 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்களை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன்ஆதித்தன் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த சுகாதார வளாக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு புதிய சுகாதார வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமாருக்கு பள்ளியின் நிறுவனரான தவசுமுத்து நாடாரின் முதல் மகன் ரத்தினசாமி நாடாரின் கொள்ளுப்பேரன் முத்துசாமி நாடார் சால்வை அணிவித்தார். 2-வது மகன் வெள்ளைத்தம்பி நாடாரின் கொள்ளுப்பேரன் தவசுமுத்து நாடார் மாலை அணிவித்தார். 3-வது மகன் குருசாமி நாடார் பேரன் தங்கமணி நாடார் மலர்க்கொத்து வழங்கினார். மற்றொரு பேரன் ஜெயக்குமார் நாடார் நினைவு பரிசு வழங்கினார்.
இந்த விழாவில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நிறுவனர் தவசுமுத்து நாடார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன்ஆதித்தனின் இளையமகன் பா.ஆதவன் ஆதித்தன், சகோதரி அனிதாகுமரன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கே.சிவக்குமார் மற்றும் தவசுமுத்து நாடாரின் குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னதாக மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. #tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓலைக் கொட்டகைமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பழையாறு பகுதி மீனவர்கள் சீன என்ஜின் பொருத்திய படகுகளை பயன்படுத்தி இப்பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீன் வளம் வெகுவாக அப்பகுதியில் குறைந்து விட்டதாக ஓலைக்கொட்டகைமேடு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
மேலும் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிவேக சீன என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. #Fishermenstruggle






