search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks exploded"

    மயிலாடுதுறை அருகே கோவில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசு வெடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராஜமாணிக்கம் (வயது 23). கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்த தர்மன் மகன் சதீஷ் (27).

    இவர்கள் 2 பேரும் பொறையாறு அடுத்த தில்லையாடி பைரவபிள்ளை தெருவை சேர்ந்த பட்டாசு வியாபாரி மோகன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் சீர்காழி அருகே கொடுவாய் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக கோவில் நிர்வாகத்தினர் வாணவேடிக்கை நடத்துவதற்காக மோகனிடம் பட்டாசு ஆர்டர் கொடுத்திருந்தனர்.

    இதனால் திருவிழாவுக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கொண்டு செல்ல இன்று அதிகாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ராஜமாணிக்கமும், சதீசும் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். பின்னால் ராஜமாணிக்கம் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை தனது வயிற்று பகுதியில் வைத்திருந்தார். மேலும் சில பட்டாசுகளை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தனர்.

    மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் அடுத்த ஆக்கூர் முக்கூட்டு கருவேலி என்ற இடத்தில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள ஒரு பாலத்தில் சென்ற போது பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் ராஜமாணிக்கம், சதீஷ் ஆகியோர் கீழே விழுந்தனர்.

    அப்போது திடீரென ராஜமாணிக்கம் வைத்திருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. இதில் பட்டா சுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்ததால் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சதீசும் படுகாயம் அடைந்தார். இந்த வீபத்தில் மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதமானது.


    அதிகாலை நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி கிராம மக்கள் திரண்டு வந்தனர். அங்கு ராஜமாணிக்கம் உடல் சிதறி பலியாகி கிடப்பதையும், சதீஷ் காயத்துடன் சத்தம் போட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி பொறையாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் காயம் அடைந்த சதீசை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மயிலாடு துறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் செம்பனார் கோவில் போலீசார் விரைந்து வந்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசு வெடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×