என் மலர்
நாகப்பட்டினம்
காரைக்காலில் இருந்து வேன்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த திருப்பூரை சேர்ந்த 3 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு தங்கராசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 சுற்றுலா வேன்களை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் 3 வேன்களிலும் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் பெரியார் காலனி பிச்சைகனி மகன் சுபேர்சேட் (வயது31), திருப்பூர் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் இமானுவேல் (38), திருப்பூர் கூணம்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஜெயசீலன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்கள் சுபேர்சேட், இமானுவேல், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், 3 வேன்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த மணியன்தீவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
2006-ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த வீடுகள் தரமான முறையில் கட்டப்படாததால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் விரிசல் ஏற்பட்டு எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரது வீட்டின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்தது. வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள தொகுப்பு வீடுகளை சீர் செய்ய வேண்டும். மிகவும் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் பிரகாஷ் என்பவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி:
சீர்காழியில் இன்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
சீர்காழியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது40). கட்டிட காண்டிராக்டராக இருந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷ்பாபு இன்று மதியம் 12 மணியளவில் தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் பஸ் உரிமையாளரை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் கார் டிரைவர் இளவரசன் (30) காரை பஸ் உரிமையாளர் வீட்டு முன்பு நிறுத்தினார். காரின் பின் சீட்டில் ரமேஷ்பாபு அமர்ந்திருந்தார்.
அப்போது பீடாரி வடக்கு வீதியில் அதிவேகத்தில் நுழைந்த ஒரு கார் ரமேஷ்பாபு காரின் முன்பு சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் 10 பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருப்பதை கண்ட ரமேஷ்பாபு சுதாரிப்பதற்குள் காரில் இருந்து இறங்கிய கும்பல் ரமேஷ்பாபு காரின் மீது அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். தாக்கியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

கொலை நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டிருந்த காட்சி.
அப்போது ரமேஷ்பாபு தன்னை காத்துக் கொள்ள காரில் இருந்து இறங்கி தப்பி செல்ல முயன்றார். ஆனால் சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ரமேஷ்பாபு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.பொதுமக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் பட்டப் பகலில் இந்த கொலை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.டி.எஸ்.பி., சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் உடனடியாக ரமேஷ்பாபு உடலை அங்கிருந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரில் வந்த கும்பல் யார்? எதற்காக ரமேஷ்பாபுவை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி கடைத் தெருவில் கண்காணிப்பு கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவிற்கு சுஜா என்ற மனைவியும், ஹர்சவதன் (11)என்ற மகனும், வர்ஷா(8) என்ற மகளும் உள்ளனர்.
பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள போக்குவரத்து நிறைந்த கடைத்தெருவில் அ.தி.மு.க பிரமுகர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Mrudercase #Bombthrowing
சீர்காழி:
சீர்காழி சட்டமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர தலைவர் செல்வமுத்துக்குமார் வரவேற்றார்.
மாவட்ட பொதுசெயலாளர்கள் முத்துசாமி, அகோரமூர்த்தி, வழக்குரைஞர் பிரிவு மாவட்ட பொதுசெயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் மற்றும் அமைப்பு பணிகள் குறித்து மாநில செயலாளர் புரட்சிகவிதாசன், மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் பெரோஸ் காந்தி, கோட்ட பொருப்பாளர் தங்க.வரதராஜன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகோரம் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.
கூட்டத்தில் சீர்காழி உபகோட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் அருகே டாஸ்மாக் கடை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை காத்திட வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் நீண்ட காலமாக இயங்கி வரும் வடரெங்கம், மாதிரவேளூர் மணல் குவாரிகளை நிறுத்தவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோகன், மகளிர் அணி பவானி ஆகியோர் பங்கேற்றனர்.நிறைவில் ஒன்றிய தலைவர் கிரி நன்றி கூறினார்.
கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #FloodAlert #Nagapattinam
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையாறு நெல்லுக்காரத் தெருவை சேர்ந்தவர் ஆன்றன் பீட்டர். இவரது மனைவி குமுதவல்லி (வயது 54).
இவர்கள் சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்றனர். அவர்கள் இரவு 10 மணி அளவில் காளகஸ்திநாதபுரம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் குமுதவல்லி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுவது போல சென்று அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதவல்லி இதுபற்றி செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடராஜன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இந்த சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வங்க கடலில் கடந்த சில நாட்களாக சூறைகாற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் குறைந்த அளவிலேயே கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாகை மாவட்டம் நாகை, ஆறுக்காட்டுத்துறை வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானமன் மாதேவி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இன்று பலத்த காற்று வீசிவருகிறது. கடலிலும் காற்று அதிவேகமாக வீசுவதால் மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் 75 சதவீத மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
25 சதவீத மீனவர்கள் கடலோர பகுதியில் வலை வீசி மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் படகுகள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக கடலோர பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. #Fishermenboat
வேதாரண்யம்:
வேதாரண்யம் தால்ககா தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவி நாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Chennairain
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் விசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் சங்கர் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை ஆய்வாளர் நாகராஜன், துணை தாசில்தார் முருகு, விவசாய சங்கத்தலைவர் ராஜன், செயலாளர் ஒளிச்சந்திரன், புலவர் மன்றம் கந்தசாமி, முன்னோடி விவசாயி மணியன், காவேரி தமிழ்தேச விவசாய சங்கத்தைச் சேர்நத சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், மற்றும் வேளாண்மைத்துறையினர், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் காவிரியில் கடைமடை பாசன பகுதியான ஆதனூர், கருப்பம்புலம், கடினல்வயல், கைலவனம்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் மின் இறவை பாசனத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கோவில்தாவில் உள்ள சட்ரஸ் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதை சரிசெய்ய நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்த சட்ரஸை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.
வண்டுவாஞ்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான 144 ஏக்கர் நிலத்தை தூர்வாரி நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2013-14-ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்ததையொட்டி விவசாயிகள் தாலுக்கா அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Farmersmeeting
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் விளாவடி காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. பா.ஜனதா கட்சியில் எஸ்.சி, அணியின் குத்தாலம் நகர பொதுச் செயலாளராக உள்ளார். மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த வேளாண்மை பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி என்ஜினீயர் பாஸ்கரன் என்பவர் மீது, விளாவடி காலனி பகுதியில் பிளாட் போடுவதாக கூறி அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக, குத்தாலம் தாசில்தார் மற்றும் போலீசில் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குத்தாலம் விளாவடி காலனிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புகழேந்தியை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து என்ஜினியர் பாஸ்கரன் மீது குத்தாலம் போலீசில் புகழேந்தி புகார் அளித்தார். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த 11-ந் தேதி தமிழக எல்லைப்பகுதியை தாண்டி ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் 19 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை ஆந்திர கடலோர பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை மீனவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களையும் மீட்க கோரி மனு கொடுத்தனர்.
மேலும் நாகை பஞ்சாயத்தார் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 25 மீனவர்கள் சென்னை சென்று மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்களையும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் ஆந்திர கடலோர காவல் படை போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யொட்டி விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 19 பேரும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று நாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். அப்போது மீட்கப்பட்ட மீனவர்கள் தங்களது 2 விசைப்படகுகளையும் மீட்டு தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.






