என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அடப்பாற்றில் தண்ணீர் வராததை கண்டித்து ஆற்றில் இறங்கி படுத்து போராட்டம் நடத்தினர். #Kallanai #Cauvery
    வேதாரண்யம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்த 7 நாட்களுக்குள் வேதராண்யம் அருகே துளசாபுரம் அடப்பாற்றில் தண்ணீர் வந்துவிடும்.

    தற்போது 10 நாட்களாகியும் தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உம்பளச்சேரி, மகாராஜபுரம், கீழ்பாதி, மேல்பாதி, கரியாப் பட்டினம், அண்டகத்துறை, மூலக்கரை, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வராததால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடப்பாற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி ஆற்றில் இறங்கி படுத்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    வேதாரண்யம் அருகே உம்பளச்சேரி சாக்கை பகுதியில் அடப்பாற்று பாசனத்தை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு பணிக்கு வயல்கள் தயாராக உள்ளன. ஆனால் தண்ணீர் வராததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததற்கு காரணம் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரப்படவில்லை. எனவே பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Kallanai #Cauvery



    குத்தாலம் அருகே புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். #waterissue

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் உள்ள புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலங்குடி புதுக் குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையான புதுக்குளம் வாய்க்காலில் சிலர் கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்தி, தண்ணீர் செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் தற்போது காவிரி ஆற்றில் செல்லும் நீர் புதுக்குளத்துக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, புதுக்குளத்துக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் 50 பேர் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர். தாசில்தார் சபீதாதேவி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #waterissue

    நாகை கூலித்தொழிலாழி ஒருவர் போதை ஏறாததால் மறுகரையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல காவிரி ஆற்றை கடந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து சித்தர்காடு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றின் இருகரைகளிலும் தலா ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    தற்போது கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    காவிரி ஆற்றில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்

    இந்த நிலையில் மறையூர் அக்ரஹார தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி (வயது 52) என்பவர் நேற்றுமாலை சித்தர்காடு காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அவர் மதுகுடித்தார். ஆனால் அவருக்கு போதை ஏறாததால் ஆத்திரம் அடைந்தார். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

    பின்னர் இந்த கடை சரக்கு சரியில்லை. நான் அக்கரையில் உள்ள கடைக்கு மது குடிக்க போகிறேன் என்று கூறினார். இதைகேட்டு மற்றவர்கள் ‘வேண்டாம்.. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது,’’ என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்.

    அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் நீந்த முடியாமல் தத்தளித்தார். பிறகு சில நிமிடங்களில் பழனிசாமி ஆற்று தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார்.

    இதைபார்த்து கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் காவிரி ஆற்றில் பழனிசாமி உடலை தேடி பார்த்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சுற்றி செல்லாமல் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சாலைகளை சேதப்படுத்தும் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சீர்காழி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்சசித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி ஒன்றியம் மருவத்தூரில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.85 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் குமாரநத்தம் வரையில் சாலை அமைக்கும் பணிகளையும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.85 லட்சம் மதிப்பீட்டில் தென்பாதி மேலத்தெரு சாலை அமைக்கும் பணிகளையும், காத்திருப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார். மேலும் திருவெண்காடு முத்தையா நகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு (2017-18) நிதியின்கீழ் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தையும், திருவாலி முதல் நெப்பத்தூர் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு (2017-18) திட்டத்தின்கீழ் ரூ.133.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை சோதனை செய்தார்.

    நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் உழவு பணிகளுக்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரத்தினை பொருத்தி சாலைகளின் வழியாக வயல்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதால் சாலைகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டரை எடுத்துச் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறி சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டர்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகை மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, பொறியாளர் முத்துகுமார், ஓவர்சியர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாக கொண்டு பர்பி தயாரிக்கும் பணியில் தமிழாசிரியர் கார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். #PanangKizhangu
    வேதாரண்யம்:

    இன்று நாம் பகட்டான வாழ்க்கையில் பாரம்பரிய உணவுகளை மறந்து பாஸ்ட்புட்டிற்கு மாறி வருகின்றோம். உணவே மருந்தாக இருந்த காலம் போய் இன்று வேளைக்கு இத்தனை மாத்திரைகள் என்று எண்ணி உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    பனங்கிழங்கை பறித்து பின்பு அதனை வேகவைத்து பனங்கிழங்கினை நன்கு உலர வைத்து மாவாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலை, ரவா, முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப்பாகும் கொண்டு தயாரிக்கப்படும் கேக் வடிவிலான பனங்கிழங்கு பர்பி தயார் செய்கிறார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் உண்பதற்கு ஏற்றதாகவும் அமைகிறது.

    வழக்கமாக ஒரு பனங்கிழங்கு முப்பது பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை பர்பியாக தயார் செய்யும்பொது குறைந்த பட்சம் ரூ.3 மதிப்பு கூட்டப்பட்டப்படுகிறது. பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. பனங்கிழங்கு மலச்சிக்கலை தீர்த்து உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது.

    பனையின் பாலிலிருந்து மதிப்பு கூட்டித் தயாரிக்கப்பட்ட பொருட்களான பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கட்டி (கருப்பட்டி), பனஞ்சீனி என்ற வரிசையில் பனங்கிழங்கு புதிய பர்பியும் தயார் செய்யப்படுகிறது.

    ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு கிலோ பர்பி தயார் செய்ய 25 பனை கிழங்கு உள்பட மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து ரூ.200 செலவாகிறது என்றும் ரூ.250-க்கு ஒரு கிலோ பர்பி விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். #PanangKizhangu

    சீர்காழியில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதையடுத்துயடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியில் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்லும் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்கள் தினமும் இந்த வழியாக செல்லும்.

    இந்த நிலையில் இன்று காலை திருப்பதி எக்ஸ்பிரஸ், விழுப்புரம் பயணிகள் ரெயில் சென்ற பின்னர் சீர்காழி ரெயில் நிலையம் அருகே சில அடி தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை ரெயில் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் தண்டவாளத்தை சீரமைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அடுத்து திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழிக்கு 11.30 மணிக்கு வரும் என்பதால் அதற்கு முன்பே சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் சேலம் கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Mrudercase #Bombthrowing

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி, எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47), இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், முதல் நிலை காண்ட்ரக்டராகவும் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த மர்ம நபர்கள் சிகப்பு நிற காரில் தப்பி சென்றதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது.

    கொலை நடந்த அன்று மாலை திருக்கடையூர் அருகே கருவேலக்காட்டில் கேட்பாரற்று சிகப்பு நிற கார் ஒன்று நிற்பதாக பொறையார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிகப்பு நிற காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரனை மேற்கொண்டனர். இதில் மேற்படி காரில் எழுதப்பட்டிருந்த நம்பர் போலியானது என்றும், அது ஒரு இருசக்கர வாகனத்தின் நம்பர் என தெரியவந்தது. இதன் அடிப்படையில் காரின் என்ஜீன் நம்பர், சேஸ் நம்பர் ஆகியவற்றை ஆய்வு செய்து உண்மையான உரிமையாளரை தேடி போலீசார் சேலம் சென்றனர். விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கார் உரிமையாளர் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வரதராஜனை சீர்காழி அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு பார்த்திபன், அருண்பிரபு, பிரேம்குமார் ஆகிய 3 பேர் சரணடைந்தனர். இருப்பினும் சரணடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது உண்மை தெரியவரும்.

    இந்நிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி கொலை தொடர்பாக நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் உண்மை குற்றவாளி பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #Mrudercase #Bombthrowing

    நாகை மாவட்ட எல்லையை சென்றடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். #cauverywater

    மயிலாடுதுறை:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரியில் 9 ஆயிரத்து 29 கனஅடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 16 கனஅடியும், கொள்ளிடத்தில் 8 ஆயிரத்து 30 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வெண்ணாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை வழியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பை வந்தடைந்தது. இதையடுத்து இங்கிருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமினி ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வெட்டாறு, ஓடம் போக்கியாறு, வெள்ளையாறு உள்ளிட்ட ஆறுகளில் காவிரி தண்ணீர் வந்தடைந்தது.

    நாகையை அடுத்த கீழ்வேளூர் பகுதியில் காவிரி தண்ணீர் வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கி வந்த காவிரியை வணங்கி மலர்தூவி வரவேற்றனர்.

    இந்த நிலையில் காவிரி தண்ணீர் தஞ்சை, கும்பகோணம் வழியாக இன்று காலை நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவாலூரில் உள்ள ‌ஷட்டர்சை வந்தடைந்தது.

    இந்த ‌ஷட்டர்ஸ் மூலம் திறக்கப்படும் தண்ணீர் காவிரி துலா கட்டம், சத்திய வான், மேலபாதி, மேலையூர், பூம்புகார் சென்று மீதமாகும் தண்ணீர் கடலில் சென்று கலக்கும். காவிரி நீர் நாளை பூம்புகாரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மயிலாடுதுறை வந்த காவிரி நீர் மூலம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் தாலுகா பகுதிகளில் 30 ஆயிரம் எக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலையூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்காடு ஏரிக்கு காவிரி நீர் செல்லும்.

    கல்லணை திறக்கப்பட்டு 6 நாட்களுக்கு பிறகே காவிரி நீர் மயிலாடுதுறை பகுதியில் கடைமடை பகுதியை வந்தடைந்துள்ளது.

    இதனால் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான நாகை, கீழையூர் தலைஞாயிறு, கீழ்வேளூர், மயிலாடுதுறை மற்றும் திருமருகல் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

    சீர்காழியில் கொல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கடந்த 23-ந் தேதி பிடாரி வடக்கு வீதியில் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வந்த ரமேஷ் பாபு, கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், திருக்கடையூர் பகுதியில் அனாதையாக நின்றது. இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே பல்வேறு காண்டிராக்ட் பணிகளை எடுத்தார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அமைச்சரின் ஆதரவாளராகவும், செல்வாக்குமிக்கவராகவும் கட்சியில் விளங்கினார். இதனால் அவருக்கு தொழில் போட்டி, அரசியல் போட்டிகள் அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை உணர்ந்த அவர் எப்போதும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால் அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. இதுவே கூலிப்படைக்கு அவரை கொலை செய்ய வசதியாக போய்விட்டது.

    ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலை கும்பல், கடந்த 20-ந் தேதியே நாகை மாவட்டத்தில் திருக்கடையூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் சுற்றி வந்துள்ளனர். ரமேஷ் பாபுவை தீவிரமாக நோட்டமிட்டே இந்த கொலை அரங்கேற்றியுள்ளனர்.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை, பகுதியை சேர்ந்த 3 ரவுடிகளிடம் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபு கொலை தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த பார்த்திபன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் நேற்று இரவே சேலத்தில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம் சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் ரமேஷ்பாபுவின் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியில் யார் இருந்தனர் என்றும் தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
    சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை தொடர்பாக கூலிப்படை கும்பலுக்கு ரூ.1 கோடி பணம் கைமாறியதா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் பாபு நேற்று முன்தினம் மதியம் பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் அதிபர் வீட்டுக்கு காரில் சென்ற போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் கார், திருக்கடையூர் பகுதியில் போலீசார் மீட்டனர்.

    நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த ரமேஷ்பாபு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனிப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கூலிப்படையினர் ரமேஷ்பாபுவை கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

    அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே கட்சியில் தீவிரமாக இருந்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்தவரின் வெற்றி பெற வியூகங்கள் வகுத்து தீவிரமாக பணியாற்றினார். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உதவியாளரானார்.

    அந்த நேரத்தில் ரமேஷ் பாபு சிறு சிறு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து புறவழிச்சாலை அமைக்க சவுடுமண் சப்ளை செய்யும் ஒப்பந்த பணியில் இறங்கினார். இதில் கோடிக்கணக்கில் பணம் புரள தொடங்கியது.

    குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்த ரமேஷ்பாபு அப்பொழுது மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் அறிமுகம் ஆகி அவரது ஆதரவாளரானார்.

    இந்த நிலையில் வேறொரு மற்றொரு மாவட்ட அமைச்சரின் ஆதரவோடு மாநில அளவில் ஒப்பந்த பணிகளை ரமேஷ்பாபு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இருந்த ரமேஷ் பாபுவின் செல்வாக்கு மாவட்டம் முழுவதும் அரசியல் ரீதியாகவும், அரசு அதிகாரிகள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் உயரத் தொடங்கியது.

    இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளிப்போடும் ஒப்பந்தம் ரமேஷ்பாபுவிற்கு எளிதாக கிடைத்தது. இதனால் அவருக்கு தொழில்ரீதியாக அதிக போட்டிகள் உருவானதாக கூறப்படுகிறது.

    தொழில் மற்றும் அரசியல் போட்டியால் முன்விரோதம் கொண்ட யாரோ சிலர் பிரபல ரவுடியின் உதவியுடன் கூலிப்படைகளை அணுகி ரூ.2 கோடி வரை பேரம் பேசி ரூ.1 கோடி முன்பணம் வழங்கியதாகவும், அதன் பின்னர் ரமேஷ்பாபு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தனிப்படை போலீசார் கூறும் போது,‘ ரமேஷ்பாபு கொலையில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்’ என்று தெரிவித்தனர்.
    நாகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நீலா மேலவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காக்கா பிள்ளையார் என்று அழைக்கப்படும் சாபம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு நாகை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள். 
    நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தண்ணீர் வரத்து தொடங்கியதை அடுத்து விவசாயிகள் ஆற்றில் மலர்தூவி பூஜைகள் செய்து வரவேற்றனர்.
    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக அந்த அணைகளில் இருந்து உபரி நீரை அதிகளவில் திறந்துவிடப்பட்டன.

    இந்த தண்ணீர் மூலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து கடந்த 22-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களின் சம்பா சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றுக்கு 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாயில் ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

    தஞ்சை வெண்ணாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அடுத்துள்ள மூணாறு தலைப்பை வந்தடைந்தது. வெண்ணாறு உதவி பொறியாளர் தியாகசேன், தண்ணீரை திறந்து வைத்தார்.

    நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு என மூன்றாக பிரிந்து செல்கிறது. இதில் வெண்ணாற்றில் 718 கன அடியும், கோரையாற்றில் 810 கன அடியும், 410 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த மூன்று ஆறுகள் தான் திருவாரூர், நாகை மாவட்டத்திற்கு முழுமையான பாசனத்தை அளித்து வருகிறது. மேலும் இந்த மூன்று ஆறுகள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளாகப் பிரிகிறது. திருவாரூர்- நாகை மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த மூணாறு தலைப்பு காவிரி பாசனத்தின் கடைமடை பாசனத்துக்கு திறந்து விடப்படும் முக்கிய தடுப்பணையாக விளங்குகிறது.

    இன்று அதிகாலை மூணாறு தலைப்பில் தண்ணீர் வரத்து தொடங்கியதை அடுத்து விவசாயிகள் ஆற்றில் மலர்தூவி பூஜைகள் செய்து வரவேற்றனர். இதனால் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×