என் மலர்
நீங்கள் தேடியது "motorcycle hit"
தஞ்சாவூர்:
தஞ்சை வண்ணாரப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி அஞ்சலை (வயது 50). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புற வழி சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அஞ்சலை காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள பழனி கவுண்டன் புதூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் பகத் சிங் (58). இவர் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இரவு பகத் சிங் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பகத் சிங் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த பகத் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பகத்சிங் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை துடியலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.
தாம்பரம்:
சென்னை குரோம் பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (18). அதே பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரகாஷ் (18).
இவர்கள் இருவரும் ¼ கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி. பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற விஜய்பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் உடல் சிதறி விஜய்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவத்தில் மதிவண்ணன் படுகாயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மதிவண்ணனிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி வேலூரை சேர்ந்தவர்கள் கார்த்திக். (வயது 37). அவரது உறவினர் கருப்புசாமி (65). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிமந்தையம் பகுதியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இடையகோட்டை பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி தாறுமாறாக சென்றது. அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மோட்டார் சைக்கிள் பிடித்தார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக அந்த பகுதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி கொண்டல் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25) இவருடன் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (45), கல்யாண சுந்தரம் (58), ரூபன் ராஜ்(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கொண்டல் அண்ணா பஜார் என்ற இடத்தில் சென்றபோது சாலையோர மணலில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். கல்யாண சுந்தரம், ரூபன்ராஜ் ஆகயோர் படுகாயம் அடைந்தனர். இதில் காயமின்றி தப்பிய பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான அறிவழகன் உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரைபாக்கம் கிராமம் கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளி.
இவர், நேற்று புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்கரையில் நடை பெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு (கரும காரியம்) மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
ஆலங்குப்பம் என்ற இடத்தில் வந்த போது சாலையில் மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதையடுத்து மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரது மகனுக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து முருகனின் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே வி.நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அறுமுகம். இவரது மனைவி இளங்கலை (வயது60). இவர் நேற்று புதுவை கல்மேடுபேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் மாலையில் ஊர் திரும்ப அய்யங்குட்டிபாளையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இளங்கலை மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கலை படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளங்கலை பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து அவரது மகன் பிரதாப் கொடுத்த புகாரின்பேரில் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






