என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீரின் காரணமாக சிவன் கோவில் குளம் படிக்கட்டுகளை தாண்டி நிரம்பி வழிகிறது. குளத்தில் நீர் நிரம்பி வழிவதால், வடகரை பகுதியில் குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி ஆகியோரின் 8 வீடுகளின் சுவர்கள் அடுத்தடுத்து இன்று காலை மளமளவென இடிந்து குளத்தில் மூழ்கியது.
இதையடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரம் என அனைத்தும் குளத்துக்குள் மூழ்கியது. தாங்கள் குடியிருந்த வீடுகள் அவர்களது கண் முன்னாலேயே குளத்து நீரில் மூழ்கியதால், வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பரிதவித்தனர்.
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் குடிநீர் பிடிக்க பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததன் காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாகை மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கி. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமார், செற்குழு உறுப்பினர் சிங்காரவேல், மாவட்ட மகளிர்அணி செயலாளர் ஷீலாதேவி, மகளிர் அணி தலைவர் சுபா, நகரபொருளாளர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.
கூட்டத்தில் நகர ஒன்றிய பகுதிகளில் கட்சி கொடியேற்றுதல், அதிகளவு கட்சியில் உறுப்பினர்களை சேர்த்தல், கிளை அமைத்தல், நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பணிகள் மேற்கொள்வதற்கு ஆயத்தமாவது, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டிப்பது, மயிலாடு துறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துவது, சீர்காழி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர தலைவர் ரகுநாதன் நன்றி கூறினார்.
நாகை மாவட்டம் சீர்காழி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜா(40).
இவர் நேற்று புதிய பஸ் நிலையம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதிய பேருந்துநிலையம் பகுதி சாலையில் வழியாக நடந்து சென்ற சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த எஸ்.ஐ.ராஜா உடனே சென்று முதியவரை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தார். பின்னர் முதியவரிடம் பரிவுடன் பேசி அவர் குறித்த தகவலையும் பசியினால் மயங்கி விழுந்ததையும் கேட்டறிந்து அவருக்கு உணவு, குடிநீரை வாங்கி கொடுத்து சாப்பிட கூறினார்.
தொடர்ந்து அந்த முதியவரை திட்டையில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். பணியின்போது கண் எதிரே நடந்த செயலை கண்டு சப்- இன்ஸ்பெக்டரின் மனித நேயத்தினை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாராட்டினர். காவல் உதவி ஆய்வாளரின் மனிதநேயத்தினை சீர்காழி பகுதியில் சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சபரிராஜ் (வயது 38 ). திருமணமாகாதவர்.
அவரது அண்ணன் அசோக் நடத்திவரும் சிமெண்டு சிலாப் அமைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவரது உறவினர் மணி மகன் சதீஷ்(39). இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். சதீஷ் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று மாலை சதீஷும் சபரிராஜூம் ஒன்றாக மது அருந்த சிமெண்டு சிலாப் செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சதீஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சபரிராஜ் தலையிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சபரிராஜ் இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன நாகங்குடியை சேர்ந்தவர் மகாலட்சுமி(வயது32). இவர் இருசக்கர வாகனத்தில் தன் வீட்டுக்கு அருகே சாலையில் திரும்பும் பொழுது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தனியார் பஸ் மோதி பெண் பலியானதால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனியார் பஸ்சின் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை- சீர்காழி சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் கீழ்பழனி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பழனியில் தைபூசம் விழா நடைபெறுவதுபோல் இக்கோவிலிலும் தைபூசவிழா விமரிசையாக நடைபெறும்.
பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடியாத அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் இக்கோவிலுக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 8-ம் தேதி தைபூச விழா இக்கோவிலில் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் இரவு கோவிலில் வழிபாடுகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை வழக்கம்போல் சுவாமிக்கு பூஜை செய்வதற்காக பாபு கோவிலுக்கு வந்த போது கோவிலின் வெளிபக்க இரும்பு கேட் திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு கருவறையின் வெளிப்புற இரும்பு கிரில்கேட் திறக்கப்பட்டு உள்ளே கருவறையின் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து கருவறைக்குள் சென்று பார்த்த அவர் மூலவர் குமாரசுப்பிரமணிய சுவாமியின் பக்கவாட்டில் இருந்த 2½ அடி உயரம் உள்ள முருகன், தலா 1½ அடி உயரம் உள்ள வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய 3 உற்சவர் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கோவில் புசாரி பாபு அதிகாலை கோவில் மணியை அடித்தும் சத்தம்போட்டும் அப்பகுதி கிராமமக்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோவில் முன்பு கிராமமக்கள் ஒன்று திரண்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்வதற்கக சென்றனர். ஆனால் கண்காணிப்பு கேமிரா செயல்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து காண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்த போது கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமிராவின் வயர்களை துண்டித்திருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்கப்பட்டது.
கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு சிலைகளின் எடை 35ல் இருந்து 40 கிலோ வரை இருக்கும் என கோவில் பூசாரி தெரிவித்துள்ளார். இதேபோன்று கோவில் கருவறையின் அருகே ஐம்பொன்னால் ஆன 35 கிலோ எடையில் விநாயகர் மற்றும் இடும்பன் சிலைகள் உள்ளது.
எனவே 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அவர்களால் 3 சிலைகளை மட்டுமே தூக்கி செல்ல முடியும் என்பதால் மற்ற 2 சிலைகளை அவர்கள் விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவிலில் நீண்ட நாட்கள் கண்காணித்து கண்காணிப்பு கேமிராக்கள் எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்காணித்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளைசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை வெளிப்பாளையம் பச்சைபிள்ளையார் கோயில் கீழ்கரையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பெரியநாயகி(வயது19). கர்ப்பம் அடைந்த பெரிய நாயகியை பிரசவத்திற்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். மதியம் பெரியநாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரம் உடல் நலத்துடன் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென பெரியநாயகிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ரத்த போக்கு அதிகமானதால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியநாயகி இறந்தார்.
பெரியநாயகி இறந்த செய்தி கேட்டு கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி நிலைய மருத்துவ அதிகாரி அறையை முற்றுகையிட்டனர். மேலும் பெரியநாயகி இறப்பிற்கு காரணம் டாக்டர்களின் அலட்சியமான போக்கே, சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைய மருத்துவ அதிகாரி அறையை முற்றுகையிட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாதவர்கள் அரசு தலைமை மருத்துவமனை முன்பு கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்களின் அலட்சிய போக்கின் காரணமாக தான் பெரியநாயகி இறந்தார். எனவே டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பிறந்த குழந்தையுடன் கோஷங்கள் எழுப்பினர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறினர். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து நிலைய மருத்துவ அதிகாரி காதர் கூறியதாவது:- நாகை அரசு தலைமை மருத்துவமனை கடந்த 4 ஆண்டு காலமாக பிரசவத்தின் போது மரணம் இல்லாமல் இருந்துள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு நுரையீரல் அடைப்பு காரணமாக உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சீர்காழி:
சீர்காழி பணங்காட்டாங்குடி ரோடு மதினா நகர் அருகே குப்புசாமி மகன்கள் பன்னீர்(வயது60), அவரது சகோதரர்கள் ராஜேந்திரன்,சேகர் மற்றும் குப்புசாமி மருமகள் மல்லிகா ஆகியோர் குடிசை வீட்டில் அருகருகே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேகர் என்பவரது குடிசை வீட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு மற்றும் வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருந்து விறகுகள் அனைத்தும் தீபிடித்து எரிந்தன. தீ மள,மளவென பரவி அருகிலிருந்த பன்னீர், ராஜேந்திரன், மல்லிகா ஆகியோரது வீடுகளுக்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலையத்தினர் நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.மேலும் பூம்புகார் பகுதி தீயணைப்பு வாகனமும் விரைந்து வந்து நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த தீவிபத்தில் நான்குபேர் வீட்டிலிருந்த நகைகள், ரொக்க பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. மேலும் ராஜேந்திரன்-லட்சுமி மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கமும், கஸ்தூரி வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1½லட்சம் மதிப்பிலான விறகுகளும் எரிந்தன.இந்த விபத்தில் மொத்தம் ரூ.30லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றார். மேலும் வருவாய் ஆய்வாளர் பொன்னி வளவன், வி.ஏ.ஓ. பபிதா உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல்படை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக கடற்கரையோரங்கள் மற்றும் நாகை முக்கிய சாலைகளில் அவ்வப்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் கஞ்சா கடத்தலை அவர்களால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? இந்த கடத்தல் சம்பங்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து கஞ்சா கடத்தலை தடுக்கும் விதமாக மதுரை சேர்ந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர்களுக்கு நாகை கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக வாகனத்தில் கஞ்சா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று நாகை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த ஆக்காரன்புலம் வள்ளுவர் சாலை மெயின்ரோட்டில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கண்டெய்னருக்கும் முன்னும் பின்னும் 2 கார்களில் வந்த 5 பேர் கண்டெய்னரை திறக்கவிடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்டெய்னரின் கதவை உடைத்துள்ளனர். அதனை பார்த்த 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தப்பி செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.
அதனை தொடர்ந்து கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்போது கஞ்சா, பண்டல் பண்டல்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பண்டல் 2 கிலோ எடையில் உள்ளதும், அதுபோன்று 310 பண்டல்களில் 620 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரமணன் (வயது 40), அதேபகுதியை சேர்ந்த தவமணி, கோடியக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35), பரமாநந்தன் (35), செல்வராஜ் (54) என்பது தெரியவந்தது.
இவை கோடியக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கஞ்சா பண்டல்கள் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? கஞ்சா கும்பலின் தலைவன் யார்? என்பது குறித்து தொடர்ந்து அந்த 5 பேரிடம் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி, 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனது தந்தையின் சதாபிஷேக திருமணவிழாவையொட்டி வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதை சட்டசபையில் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளை பாதுகாப்பது குறித்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பது குறித்தும் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
மீத்தேன், ஷேல் கியாஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் தான் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தார். அதன் விளைவு டெல்டா மாவட்டங்களில் விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் மு.க.ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். அவர் பெரிய நடிகர். மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் நடித்து வருகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சோழ மண்டலத்தை பாதுகாக்க ராஜராஜ சோழனாகவே மாறி செயல்படுகிறார்.
வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பரவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சித்தானந்தம் இறந்து விட்டார். அவரது சடலத்தை வடக்கு பொய்கை நல்லூர் பிரதான சாலையில் இறந்தவர் சடலத்தை வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்த்தால் நாகப்பட்டினம் -வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாகை தாசில்தார் பிரான்சிஸ், டி.எஸ்.பி. முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில், 2½ ஏக்கர் அரசு நிலத்தில் தனி சுடுகாடு அமைத்து தருவதாக தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






