search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட குமாரசுப்பிரமணிய சுவாமி கோவில்.
    X
    ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட குமாரசுப்பிரமணிய சுவாமி கோவில்.

    சீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

    சீர்காழி அருகே கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் கீழ்பழனி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பழனியில் தைபூசம் விழா நடைபெறுவதுபோல் இக்கோவிலிலும் தைபூசவிழா விமரிசையாக நடைபெறும்.

    பழனிக்கு பாத யாத்திரை செல்ல முடியாத அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் இக்கோவிலுக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 8-ம் தேதி தைபூச விழா இக்கோவிலில் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் இரவு கோவிலில் வழிபாடுகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை வழக்கம்போல் சுவாமிக்கு பூஜை செய்வதற்காக பாபு கோவிலுக்கு வந்த போது கோவிலின் வெளிபக்க இரும்பு கேட் திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு கருவறையின் வெளிப்புற இரும்பு கிரில்கேட் திறக்கப்பட்டு உள்ளே கருவறையின் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து கருவறைக்குள் சென்று பார்த்த அவர் மூலவர் குமாரசுப்பிரமணிய சுவாமியின் பக்கவாட்டில் இருந்த 2½ அடி உயரம் உள்ள முருகன், தலா 1½ அடி உயரம் உள்ள வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய 3 உற்சவர் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கோவில் புசாரி பாபு அதிகாலை கோவில் மணியை அடித்தும் சத்தம்போட்டும் அப்பகுதி கிராமமக்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோவில் முன்பு கிராமமக்கள் ஒன்று திரண்டனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கோவிலுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்வதற்கக சென்றனர். ஆனால் கண்காணிப்பு கேமிரா செயல்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து காண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்த போது கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமிராவின் வயர்களை துண்டித்திருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்கப்பட்டது.

    கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு சிலைகளின் எடை 35ல் இருந்து 40 கிலோ வரை இருக்கும் என கோவில் பூசாரி தெரிவித்துள்ளார். இதேபோன்று கோவில் கருவறையின் அருகே ஐம்பொன்னால் ஆன 35 கிலோ எடையில் விநாயகர் மற்றும் இடும்பன் சிலைகள் உள்ளது.

    எனவே 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், அவர்களால் 3 சிலைகளை மட்டுமே தூக்கி செல்ல முடியும் என்பதால் மற்ற 2 சிலைகளை அவர்கள் விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவிலில் நீண்ட நாட்கள் கண்காணித்து கண்காணிப்பு கேமிராக்கள் எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்காணித்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளைசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×