search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் குளத்திற்குள் இடிந்து விழுந்த வீடுகளையும், குளத்தில் மிதக்கும் பொருட்களையும் காணலாம்.
    X
    கோவில் குளத்திற்குள் இடிந்து விழுந்த வீடுகளையும், குளத்தில் மிதக்கும் பொருட்களையும் காணலாம்.

    நாகையில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் இடிந்து விழுந்தன

    நாகையில் கோவில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீரின் காரணமாக சிவன் கோவில் குளம் படிக்கட்டுகளை தாண்டி நிரம்பி வழிகிறது. குளத்தில் நீர் நிரம்பி வழிவதால், வடகரை பகுதியில் குளத்தைச் சுற்றி கட்டப்பட்ட சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி ஆகியோரின் 8 வீடுகளின் சுவர்கள் அடுத்தடுத்து இன்று காலை மளமளவென இடிந்து குளத்தில் மூழ்கியது.

    இதையடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரம் என அனைத்தும் குளத்துக்குள் மூழ்கியது. தாங்கள் குடியிருந்த வீடுகள் அவர்களது கண் முன்னாலேயே குளத்து நீரில் மூழ்கியதால், வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பரிதவித்தனர்.

    விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் குடிநீர் பிடிக்க பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததன் காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×