search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    சீர்காழியில் 4 குடிசை வீடுகளில் தீ விபத்து

    சீர்காழியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பணங்காட்டாங்குடி ரோடு மதினா நகர் அருகே குப்புசாமி மகன்கள் பன்னீர்(வயது60), அவரது சகோதரர்கள் ராஜேந்திரன்,சேகர் மற்றும் குப்புசாமி மருமகள் மல்லிகா ஆகியோர் குடிசை வீட்டில் அருகருகே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சேகர் என்பவரது குடிசை வீட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு மற்றும் வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருந்து விறகுகள் அனைத்தும் தீபிடித்து எரிந்தன. தீ மள,மளவென பரவி அருகிலிருந்த பன்னீர், ராஜேந்திரன், மல்லிகா ஆகியோரது வீடுகளுக்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலையத்தினர் நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.மேலும் பூம்புகார் பகுதி தீயணைப்பு வாகனமும் விரைந்து வந்து நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    இந்த தீவிபத்தில் நான்குபேர் வீட்டிலிருந்த நகைகள், ரொக்க பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. மேலும் ராஜேந்திரன்-லட்சுமி மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கமும், கஸ்தூரி வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1½லட்சம் மதிப்பிலான விறகுகளும் எரிந்தன.இந்த விபத்தில் மொத்தம் ரூ.30லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றார். மேலும் வருவாய் ஆய்வாளர் பொன்னி வளவன், வி.ஏ.ஓ. பபிதா உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டனர்.

    Next Story
    ×