என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுதிரம் ஜெயேந்திரர் நகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இதையொட்டி உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து, திருமண வேலைகளை ராஜதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ராஜதுரை சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வேறு எங்காவது பணம், நகை உள்ளதா? என பார்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இன்று காலை வந்த ராஜதுரை வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற கடப்பாறையை கைப்பற்றினர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அகஸ்தியன்பள்ளியில் கோடியக்காடு, கடினெல்வயலில் ஆகிய பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் வரை நடைபெறும் உப்பு உற்பத்தி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 6 லட் சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தற்போது துவங்கி நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு உப்பு விலை 100 கிலோ மூட்டை ரூபாய் 2000 வரை விற்பனை ஆனது. இதனால் அகஸ்தியன்பள்ளியில் 3000 ஏக்கரில் முழுவீச்சில் நடைபெறுகிறது. தற்போது 100 கிலோ மூட்டை 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. உற்பத்தி முழுவீச்சில் இருப்பதால் உற்பத்தி இலக்கான 6 லட்சம் டன் உற்பத்தி ஆகும் எனவும் கஜா புயலால் பாதித்த வேதாரண்யம் பகுதியில் வீடு, தென்னை, மா, முந்திரி உள்ளிட்ட அனைத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் உப்பள பகுதிக்கு பாதித்த உப்பளங்களுக்கு இதுவரை அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை எனவும் இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் எனவும் உப்பள சேதத்தை ஈடுகட்ட முடியாமல் வட்டிக்கு வாங்கி தற்போது உப்பள பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கஜா புயலால் பாதித்த உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய செயலாளர் செந்தில் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் , பிப்.26-
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட் டம் சீர்காழி ஈசானியம் தெருவில் உள்ள வார சந்தை அமைக்கப்படும் இடத் தையும், சீ£காழி புதிய பஸ் நிலையத்தையும் மற்றும் புதிய பஸ் நிலையத் திற்கு அருகேயுள்ள திருத் தோணிபுரம் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
பின்னர் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தரைத்தளம் அமைக்கும் பணிகளையும் பார்வை யிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சீர்காழி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் கலெக்டர் பிரவீன்.பி.நாயர்ஆய்வு மேற்கொண்டு அங்கு உணவருந்திய பொது மக்க ளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் பிரசாந்த், சீர்காழி நகராட்சி ஆணையர் வசந்தன், நகராட்சி மேற்பார் வையாளர் பாலசுப்பி ரமணியன், தாசில்தார் சண்முகம் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளில் காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்தல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதற்குத்தேவையான பாட்டில்களை காரில் கடத்திவருவது வாடிக்கை.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாபுராஜா என்ற உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படும் சிறப்புப்படையினர் மயிலாடுதுறை அருகே குடைவிளாகம் என்ற பகுதியில் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் 17 சாக்கு மூட்டைகளில் பாண்டிச்சாராயம் நிரப்பிய 2500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட கார் ஓட்டுனர் கோடங்குடியை சேர்ந்த சின்னபிள்ளை மகன் மகேந்திரன், பிரபல கள்ளச்சாராய வியாபாரியான கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயகாந்தன் (31) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர் கள்ளச்சாராயக் கடத்தலில் ஈடுபட்டதால் ஜெயகாந்தன் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன்பு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை:
விழுப்புரம்- மயிலாடுதுறை ரெயில் பாதையில் மார்ச் 1 ம் தேதி முதல் 6 ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
1. விழுப்புரத்தில் காலை 5:55-க்கு புறப்படும், 56873 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
2. மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40 மணிக்கு புறப்படும், 56874 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
3. விழுப்புரத்தில் பிற்பகல் 2:30க்கு புறப்படும், 56875 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
4. மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3:45க்கு புறப்படும், 56876 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
5. விழுப்புரத்தில் மாலை 5:40க்கு புறப்படும், 56877 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரெயில்.
6. மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45க்கு புறப்படும், 56878 மயிலாடுதுறை விழுப்புரம் பயணிகள் ரெயில்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும், 56886 காட்பாடி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55க்கு புறப்படும், 56881 விழுப்புரம் பயணிகள் ரெயில் ஆகியவை மார்ச் 1-ந் தேதி முதல் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு அண்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சகுந்தலா (வயது 34). இவரது தங்கை நந்தினியை அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் (35) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறி தகராறு செய்துள்ளார்.
இதை பார்த்த சகுந்தலா தட்டிக்கேட்டபோது காமராஜ் சகுந்தலாவை தரக்குறைவாக பேசி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து சகுந்தலா வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
வேதாரண்யம் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் வேட்டைக் காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலிசார் அவரிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவரிக்காடு பகுதியில் தோப்பு பகுதியில் மறைமுகமாக சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அவரிக்காடு சேர்ந்த வீரபத்திரன் (வயது 48) செந்தில்குமார் (41) என்பதும் தெரியவந்தது. அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
நாகை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அந்த இளம்பெண் திருமங்கலத்தில் வசித்தபோது அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வினோத் தன்னிடமுள்ள போட்டோக்களை காட்டி இளம்பெண்ணை தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள உடன்படும்படி அடிக்கடி போனில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம்பெண் பாலையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதாக அறிவித்து நெல் கொள்முதல் செய்வதற்கு எடை மேடை, சாக்கு, நெல் தூற்றும் எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
நெல் கொள்முதலுக்கு தயாரான நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து அடுக்கி வைத்தனர். கடந்த மூன்று நாட்களாக பணியாளர் நியமிக்கப்படாததால் கொள்முதல் நடைபெறவில்லை. நேற்று திடீரென பெய்த மழையில் விற்பனைக்காக கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.
அதனை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நிலையில் விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளோடு காத்து கிடக்கின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையம் திறந்து உடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுக்காவில் ஆயக்காரன் புலம், கத்தரிப்புலம், செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், குரவப்புலம், நாலுவேதபதி வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்றது. இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை இப்பகுதியில் விளைந்தன. மாம்பழ சீசன் காலத்தில் இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் டன் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
கஜா புயலுக்கு பிறகு மாமரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. தற்போது வேதாரண்யம் பகுதிக்கு வெளியூர்களிலிருந்து ஒட்டு மாங்காய்கள் விற்பனைக்கு இங்கு வருகின்றன. தற்போது பனிப்பொழிவின் காரணமாக மாம்பூக்கள் கருகி வருகின்றன. மேலும் தேன்வண்டு காரணமாக பூக்கும் ருமேனியா, ஒட்டு, கெளதாரி, செந்தூரா ஆகிய மா வகைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பனிப்பொழிவால் பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம்பஸ் ஆகிய மாமரங்கள் பூக்காமல் காணப்படுகிறது.
இதனால் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. தேன்வண்டு என்று அழைக்கப்படும் தத்துப்பூச்சி தாக்குதலால் பிஞ்சி பிடித்திருக்கும் மாமரங்களும் பிஞ்சுகள் கருகி கொட்டுகின்றன. இதனால் மா விளைச்சலை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு வகையான மருந்துகளை அடித்து வருகின்றனர்.
கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதிதாக நடப்பட்ட மாங்கன்றுகள் பலன் தர குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போது காய்ப்பிற்கு வரும் மரங்களும் பனிப்பொழிவு வண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பூ கருகுதலும் பிஞ்சு உதிர்ந்து கொட்டுகிறது. இதனால் கடுமையான விளைச்சல் பாதிப்பு இருக்கும் என விவசாயி செம்போடை ஜெகநாதன் தெரிவித்தார்.
பூச்சி தாக்குதல் பனிப்பொழிவு இவற்றிலிருந்து மா விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை தோட்டக்கலைத்துறை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைக்க முதல்-அமைச்சர் எப்பாடி பழனிசாமி, அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி நாகைக்கு வருகிறார். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
நாகை மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான புதிய மருத்துவக்கல்லூரி ஒரத்தூரில் அமைய உள்ளது. அரசின் தீவிர முயற்சியால், ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி ஆணை பெறப்பட்டுள்ளன. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரியினை கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் 12 மருத்துவக்கல்லூரிகள் அமைத்திட அனுமதி ஆணை பெற்றுள்ளது. மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி பெற்றதோடு நின்றுவிடாமல், உடனடியாக நிதி ஒதுக்கி, இடம் தேர்வு செய்து, மதிப்பீடுகள் செய்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாகை ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் 60.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.366.85 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 150 மாணவ-மாணவிகள் பயிலும் வகையில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.123.05 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை, ரூ,119.03 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி, ரூ.124.77 கோடி மதிப்பீட்டில் மருத்துவ பேராசியர்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளிட்ட 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இவற்றில் 6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை ஆகியவையும் அடங்கும். தற்போது, இப்பகுதியில் மண் பரிசோதனை, கருவேலமரங்களை அகற்றுதல், மண் சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேறகாள்ளப்பட்டு வருகின்றன.
வருகிற மார்ச் மாதம் 7-ந் தேதி, முதல்-அமைச்சரால் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த கல்லூரி அமைய இருப்பது நாகை மாவட்டத்துக்கு சிறப்பை பெற்று தரக்கூடியதாக உள்ளது. கல்லூரி முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், தாசில்தார் பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் தொண்டியக்காடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் ராஜூவ்காந்தி(வயது36). இவர் ஆய்காரன்புலம் 2-ம்சேத்தி பாப்புரெட்டி குத்தகை பகுதியை சேர்ந்த பூபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாமனார் வீட்டிலேயே தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 16-ந்தேதி ராஜூவ்காந்தி வாய்மேடு மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தகட்டூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜூவ்காந்தி படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.






