என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    நாகை:

    நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 

    காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. 
    டெல்டா மாவட்டங்களில் இனி எப்போதும் புதிய தொழிற்சாலை தொடங்க அனுமதி இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

    நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிதாக மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவக்கல்லூரி ஏழை மாணவர்களுக்காகவே இந்த மாவட்டத்தில் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஏழை மக்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கவே இங்கு மருத்துவககல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. மக்கள் நலம் காக்கவே ஜெயலலிதாவின் ஆசியோடும், அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அனைத்து மக்கள் நல திட்டங்களை மக்களுக்காகவே செயல் படுத்தி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாகக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இமாலய சாதனை அ.தி.முக. அரசு படைத்துள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்த பணிகளில் இறங்கி உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் இனி எப்போதும் புதிய தொழிற்சாலை தொடங்க அனுமதி இல்லை. நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடையின்றி இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
    நாகை:

    நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட  மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க, நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த அரசு விவசாயிகளுக்காக பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டெல்டா பகுதிகளை பாதுகாக்காப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சாதனை படைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 2 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி இல்லை. 

    நாகை மாவட்டத்தில் 3 மாதங்களில் 4000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாகையில் புதிய துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    சீர்காழி அருகே காரில் கடத்தி வந்த ரூ.4½ லட்சம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.

    சீர்காழி, மார்ச் 6-

    நாகை மாவட்டம் சீர்காழியை அருகேயுள்ள திருநகரி பாலத்தில் இன்று அதிகாலை சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப் படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காருடன் பைக்கில் வந்த ஒருவர் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரைச் சோதனையிட்டதில் 6 மூட்டைகளில் 2350 சாராய பாக்கெட்டுகள் இருந்ததும், அவை காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சாராய பாக்கெட்டுகள் மற்றும் பைக், காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் போலீசார் கார் டிரைவரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா மயிலபத்து பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது31) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சாராயம் மற்றும் பைக்-கார் ஆகியவற்றையும் போலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.4.5 லட்சம் என கூறப்படுகிறது. தப்பி ஓடிய காரைக்கால் வடமட்டத்தை சேர்ந்த ராஜி என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் புகார் அளித்த ஆசிரியர் இடம்மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தாலுகா அலுவலகம் முன்பு நல்லடை ஆதிதிராவிடர் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று சீர்காழி ஆதிதிராவிடர் தாசில்தார் ராணியிடம் அதே பள்ளி சேர்ந்த ஆசிரியர் புகார் அளித்திருந்தார்.

     இந்த நிலையில் புகார் அளித்த ஆசிரியரை பணி இடமாற்றம் உத்தரவு வந்தது. இதுகுறித்து வக்கீல் சங்கமித்திரன் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் உரிய விசாரணை செய்ய வில்லை. இதனால் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் அமைப்பாளர் அன்பு செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் செயலர் ரவிச்சந்திரன், கடலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார், மயிலாடுதுறை முன்னாள் நகர செயலர் பிரபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணமூர்த்தி, மக்கள் பாதுகாப்பு அமைப்பு சுகந்தன், நாம மக்கள் இயக்கம் செந்தில், விடுதலை சிறுத்தை மாநில பொறுப்பாளர் சிறுபான்மை பிரிவு ரியாஸ்ஹான் உள்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாடு முழுவதும் கோவிட்-19 (கொரனோ) காய்ச்சல் பாதிப்புக்கான அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுகு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அல்லது அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிப்பதற்கான சிறப்பு வார்டு நேற்று திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தனியாக உள்ள ஒரு கட்டிடத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 2 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளுடன், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கோவிட்-19 காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நாகை அரசு தலைமை மருத்துவனையில் தயாராக உள்ளன.

    கோவிட்-19 காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தி, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கோவிட்-19 காய்ச்சல் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மருந்தகம் போன்ற இடங்களில் ஊசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலையை மீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சின்னத்தும்பூரில் தனியாருக்கு சொந்தமான செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த கோவிலில் உள்ள மாரியம்மன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.

    இதுகுறித்து நாகப்பட்டினம் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், டி.ஐ.ஜி.லோகநாதன் ஆகியோரின் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆலோசனைப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக வேதாரண்யம் மறைஞான் நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரவேல் மகன் உதயராஜன் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அம்மன் சிலையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து, 2 அடி உயரமுள்ள வெண்கல அம்மன் சிலை, குத்துவிளக்குகள் 5, செம்புகள் 6, கவரிங் ஆரம் 2 ஆகியவற்றை பறி முதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
    தமிழகத்தில் பழமையான கோவில்களை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததில் வைத்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அதனை தற்போது தமிழக அரசு அறிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகள் விடுப்பட்டுள்ளதை சேர்க்க வேண்டும். காவிரி பாசனவசதி பெறும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அரசு அறிவிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.

    மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பழமையான திருகோயில்களை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற் கொண்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு அதனை கைவிட வேண்டும். கடந்த 2002ம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல்துறை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்தபோது அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 2005ம் ஆண்டு அதனை கைவிட்டது. அந்த நடைமுறையில் இருந்த 3 ஆண்டுகள் பராமரிப்பு இன்றியும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

    ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை மத்திய அரசு எடுக்க முயற்சிசெய்தபோது கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மத்திய அரசு கைவிட்டது. தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த பண்பாட்டை காக்கின்ற கோயில்களை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு பல நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். தமிழக அரசு நெல்லுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தின் வறட்சியை போக்குவதற்கான நீர்மேலாண்மை திட்டங்களை கொண்டுவர வேண்டும். கோதாவரிகாவிரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடன் தொடங்குவதற்கான நிதியை நடப்பாண்டு ஒதுக்கீடு செய்ய பணியை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உத்தரவிட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகக்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். 

    மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 13 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 399 மனுக்கள் என மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து சத்துணவுத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையும், கரியாப்பட்டினம் சரகம் பிராந்தியங்கரை கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நவீன மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி வழங்கினார். இதில் தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விளந்திடசமுத்திரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தினமும் அளவுக்கு அதிகமான குடிநீர் நிலத்தடியில் இருந்து ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இதனையடுத்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த குடிநீர் ஆலையால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படுகிறது என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் விளந்திடசமுத்திரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் ஆலையை பொதுப் பணித்துறை நிலநீர் கோட்டம் தஞ்சை செயற்பொறியாளர் ராஜீவ் தலைமையில், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாகை மாவட்ட கடற்கரையில் ஹெராயின் பவுடருடன் கரை ஒதுங்கிய மரப்பெட்டியை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தனமாக கஞ்சாவை கடத்தி வருபவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து கடற்கரையோரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலோர காவல்படை போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாக நாகை கடற்கரை பகுதியில் ஹெராயின் பொட்டலங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

    கடந்த மாதம் 25-ந் தேதி நாகையை அடுத்த வேளாங்கண்ணி அருகே செருதூர் கடலில் மரத்தினாலான பெட்டி ஒன்று மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் கடலில் மர்ம பெட்டி மிதந்து வருவதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த மர்ம பெட்டியை கைப்பற்றி சோதனை செய்தனர்.

    அதில் மிக கொடிய போதைப் பொருளான ஹெராயின் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வசம் ஹெராயின் பொட்டலங்கள் வந்த மரப்பெட்டியை ஒப்படைத்தனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் இந்த ஹெராயின் பொட்டலங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? அதன் மதிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கஞ்சா கடத்தலை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள கடலோர காவல் படை போலீசாருக்கு இந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக இன்று அதிகாலை வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரன் இருப்பு வடக்குஜல்லிகுளம் கடற்கரை பகுதியில் மரப்பெட்டி ஒன்று கரைஒதுங்கியது.

    இதுகுறித்து கடலோர காவல்குழும போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் அந்த மரப்பெட்டியை சோதனை செய்தனர். அதில் ஹெராயின் பவுடர்கள் பலஅடுக்குகளில் நிரப்பப்பட்டு இருந்தது.

    அதனை கைப்பற்றி திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    நாகை கடற்கரை பகுதியில் அடிக்கடி கரை ஒதுங்கும் இந்த ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய மரப்பெட்டிகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது என்பது குறித்தும், மேலும் இதுபோன்று ஹெராயின் அடங்கிய மரப்பெட்டிகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி கடலோர காவல் குழும போலீசார்கடற்கரை பகுதிகளிலும், படகு மூலம் கடலிலும் சென்று தேடி வருகின்றனர். இதுவரை கிடைக்கப்பெற்ற ஹெராயின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்களால் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    மயிலாடுதுறையில் 2 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை புதுத்தெரு பகுதியில் உள் மேட்டு தெருவில் ரகுமான்ஷா. இவரது மனைவி பாத்திமா பீவி(வயது65). இவர் தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்

    நேற்று பகல் இவரது வீட்டின் மேல் கூறை தீ பற்றியதை கண்டு அலறியடித்து வெளியேறினர். இவர்கள் வீட்டின் அருகே இருந்த குமார் மனைவி மணிமேகலையின் வீடும் தீ மளமளவென பரவியதால் பற்றிகொண்டது இதுகுறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மற்ற வீடுகளில் தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீவிபத்தில் பாத்திமாபீவி தனது பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் மகளிர் குழுவில் கட்ட வேண்டிய குழுவினரின் பணம் எரிந்து சேதமாகியது. இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கலாம். அதே போல் மணிமேகலை வீட்டிலும் நகை பணம் பொருட்கள் எரிந்து நாசம் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×