என் மலர்
செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் இனி புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படாது- எடப்பாடி பழனிச்சாமி
நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிதாக மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவக்கல்லூரி ஏழை மாணவர்களுக்காகவே இந்த மாவட்டத்தில் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஏழை மக்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க. அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கவே இங்கு மருத்துவககல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. மக்கள் நலம் காக்கவே ஜெயலலிதாவின் ஆசியோடும், அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அனைத்து மக்கள் நல திட்டங்களை மக்களுக்காகவே செயல் படுத்தி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாகக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இமாலய சாதனை அ.தி.முக. அரசு படைத்துள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்த பணிகளில் இறங்கி உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் இனி எப்போதும் புதிய தொழிற்சாலை தொடங்க அனுமதி இல்லை. நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தடையின்றி இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






