என் மலர்
மதுரை
- தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது. உடனடியாக வினியோகத்தை நிறுத்தவும் என நீதிமன்றம் உத்தரவு.
- தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்.
தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் நன்கொடையாளர்கள் அளித்த தொகை உள்ளிட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப காலத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நிலையில், அவகாசம் கேட்பது யாரை காப்பாற்றுவதற்கு? என கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் மதுரை தொகுதி எம்.பி.யான ஏ. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.
அது நவீன அறிவியலின் சாதனை.
மும்பையிலிருக்கும் எஸ்.பி.ஐ. டெல்லியிலிருக்கும் உச்ச நீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை.
48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை எஸ்பிஐ. இனி பின்னொட்டாக Modi Ka Parivar-ஐ இணைத்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது.
- பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும்.
மதுரை:
எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கியது தொடர்பாக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதா வது:-
எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தை போல மத்திய அரசு தொடங்கி உள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். அப்போது அவரே இதனை தொடங்கி வைத்திருக்கலாம். ஆனால் உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது. ஒரு திட்டத்தினுடைய அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் தொடங்குவதற்கு இடையில் 5 ஆண்டுகள் உருண்டோடிய புதிய வரலாற்றை பா.ஜ.க. ஆட்சியில் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த செயல் வெளிப்படையாக பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும். பொறியியல் துறையை மட்டும் வைத்து தற்போது பணியை தொடங்கி உள்ளார்கள். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்காக மார்ச் மாதத்தில் திட்டப் பணியை தொடங்கி உள்ளார்கள். இவை அனைத்தும் தேர்தலுக்காக மக்களை திசை திருப்புகிற நாடகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும்.
மதுரை:
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி மலையின் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தது. பின்னர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிப்பது, பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கு தனி இடவசதி செய்து தருவது என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், "கிரிவலப்பாதைகளில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போதுவரை அகற்றப்பட்டு உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பழனி மலை கிரிவலப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதைக்கு அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தவித வணிக நோக்க நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை கோவில் இணை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமான நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
- 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
- வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
மதுரை:
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ள மன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய அவரை மதுரை ரெயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கினர்.
அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில், போதைப்பொருள் 30 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் மதுரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருடன் தொடர்புகொண்ட ஜேசுதாஸ் என்பவர் போதை பொருளை ரெயிலில் மதுரைக்கு கொண்டு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.
மேலும் 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.
இதையடுத்து பிரகாசின் மனைவி மோனிஷா ஷீலாவை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். நேற்று முழுவதும் அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் போதைப்பொருளை கடத்த உத்தரவிட்ட ஜேசுதாஸ் என்பவரும் கைதானார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ், அவரது மனைவி மோனிஷா ஷீலா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
- தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
- குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
தி.மு.க. அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து தமிழகம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை பொருள் கடத்தலால், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் எடப்பாடியார் ஒரு வீடியோ பதிவை கொடுத்துள்ளார்.
அதில் கடைசி சொட்டு போதை ஒழிப்பு வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்படும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. போராட்டம் தொடரும் என எடப்பாடியார் மன உறுதியோடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் போதை மாபியாவை உலகமே தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் இந்த போதைப் பொருள் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், தி.மு.க.வை எச்சரிக்கின்ற வகையிலும் எடப்பாடியார் பல்வேறு ஆதாரங்களோடு குற்றச்சாட்டை எடுத்து வைத்து இன்றைக்கு இந்த தாய் தமிழ்நாட்டை இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து உரிமைக்குரல் எழுப்பி வருகின்றார்.
போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவிகளும், ஐ.டி. துறையினருமாகிய இளைய தலைமுறைதான். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனே 2021 செப்டம்பர் 15 அன்று குஜராத் மாநிலம் துறைமுகத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21,000 கோடியாகும், இந்த வழக்கிலே சென்னையை சேர்ந்த கணவன், மனைவி முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட் டுள்ளனர்.
2021 ஆண்டு மார்ச் 18-ந்தேதி லட்சத்தீவு படகில் 300 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டது. 2022-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 26-ந் தேதி ரூ.2000 கோடி மதிப்பில் போதை மருந்து கடத்தப்பட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் மாபியா தலைவனாக உள்ளார். அதேபோல் 29-ந்தேதி மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த தான் எடப்பாடியார் உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் அணி திரளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
மதுரை:
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.

மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலூர்:
நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 42 பெண்கள் உள்பட 50 பேர் தனியார் பஸ்சில் இன்று காலை மேல் மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் காலை 10 மணியளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோபா, ஏட்டு தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை:
கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்ததும், பெண் போலீஸ், கோவிலில் மது அருந்தக்கூடாது என்று கூறி, அவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் மதுபோதையில் இருந்த சிலர், போலீசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் பேரில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குபேந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பெண் போலீசை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் நீண்டநாளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.
அவர், நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி பிறப்பித்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது.
- மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.
2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அதிநவீனமான அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டது.
அந்த அடிப்படையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஜப்பானில் இருக்கக்கூடிய ஜெய்கா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு முழுமையாக அந்த இடம் எந்த வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக எய்ம்ஸ் மருத்தமனைக்கான மாணவர்கள், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு, பயிற்சி உபகரணங்கள் போதுமானதாக இல்லாத நிலை தான் நீடித்தது.
இதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இதற்காக டெண்டர் வெளியிடபட்டு, திருமங்கலத்தில் உள்ள செயல்படாத ஒரு நர்சிங் கல்லூரியை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்த எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
- 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
- அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
- மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.
'மதுரை தொகுதி MP-யை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார்.
- இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், விருப்ப மனுவினை 1-ந்தேதிக்குள் அளிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவை தாக்கல் செய்ய மதுரையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
40 தொகுதிகளில் தனித்தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமைக் கழகத்தில் அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்ப மனுவை நாளை தாக்கல் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது.
குறிப்பாக கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காக தொலைநோக்கு திட்டங்கள், பசி பட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி உள்பட இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைவரின் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அ.தி.மு.க. ஆட்சியை யாரும் குறை கூற முடியாது. அதற்கு தான் பாரத பிரதமர் புகழாரமாக சான்று அளித்துள்ளார்.
அந்த சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரையே சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக்கல்லூரிகள், 2,000 அம்மா மினி கிளினிக், 69 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இதுபோன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது.
இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு உள்ளது. சாமானிய மக்களின் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. கூட்டணி குறித்து எடப்பாடியார் அ.தி.மு.க. நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார்.
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூட தெளிவாக கூறியுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு. ஆனால் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. முடிவை தெள்ளத்தெளிவாக எடப்பாடி யார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மன உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100 சதவீத வெற்றி பெறுவார். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு, இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம்.
இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தகுதி உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும். அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். பாராளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி குறித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை. தமிழகத்தின் உரிமையை காக்க தி.மு.க. கூட்டணியில் உள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






