என் மலர்
மதுரை
- விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மதுரை:
மதுரையை சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.
பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது.
தற்போது இது பெண்கள், குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது.
எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது அல்ல. இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டு கிளையில் மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புக்கு சொந்தமான தனியார் மண்டகப் படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனியார் மண்டகப்படிகளுக்கு சாதி ரீதியான அமைப்பு மண்டகப்படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில், பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும் பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால் அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
- தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
- மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.
மதுரை:
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனியாக இருந்தார். எந்த போராட்டமும் நடத்தவில்லை, இது வரலாறு.
ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்கு தி.மு.க.வும் பதிலளித்து பேசி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. பொய் பேசுகிறது என்றால் பா.ஜனதா பயங்கர பொய்யை பேசுகிறது. இது அவர்களது தேர்தல் ஸ்டண்டாகும்.
ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர். எனவே தான் பா.ஜனதாவும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து கபடநாடகம் நடத்துகிறது.

கடந்த 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் இந்த விவகாரம் குறித்து அம்மா பேசினார். அப்போது பதில் அளித்த கருணாநிதி, தமிழக மீனவர்கள் பேராசைப்பட்டு இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்தான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த கருத்தை அன்றைக்கு அம்மா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதை தி.மு.க., பாரதிய ஜனதா தலைவர்கள் மறந்தாலும் மீனவர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எதுவுமே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்.
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு தேர்தல் ஸ்டண்டாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
- தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி மதுரையில் பல்வேறு பகுதிகளில் வாகன பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் குரல் உண்மையாகவே பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டுமானால் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். மக்களின் குரலை எதிரொலிக்க பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வேண்டும். பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
ஜனநாயகத்தையும் மதச் சார்பின்மையையும் காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளித்தபோது மத்திய அரசு நிவாரணமாக ஒரு பைசா கூட தரவில்லை. அப்போது வந்து மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தேர்தல் நேரம் என்பதால் ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்துக்கு அடுத்தடுத்து ஓடோடி வருகிறார்.
தமிழக மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவர். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார். தமிழகத்துக்கு எந்தவொரு நன்மையையும் செய்துவிடக் கூடாது என்ற திடமான முடிவோடு இருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை திரட்டி ஊழல் செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா அனைத்திலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி.
- கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியல் அ.தி.மு.க. சார்பில் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார். அவர் டுவிட்டர் அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். மதுரை மக்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
கடந்த 4 வருடங்களாக மக்களை சந்திக்காத அவர் தற்போது தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கிறார். அவரது சொத்து 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலின்போது சு.வெங்கடேசன் உள்ளிட்ட எண்ணற்ற 44 வாக்குறுதிகளை மதுரை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி, மு.க.ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல சு வெங்கடேசனும் 44 ஊசி போன வடைகளை சுட்டுள்ளார்.

இது மதுரை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல. கீழடிக்கு அவர் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். கீழடி தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஆனால் வெங்கடேசன் உரிமை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் அவர் போலி விளம்பர அரசியல் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு 26 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது மதுரையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு உள் இடஒதுக்கீடு. குடிமராமத்து பணி, அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், மடிக்கணினி, பெண்களுக்கு இலவச கால்நடை திட்டம்
திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. அரசு கடந்த முறை தேர்தல் அறிக்கையின்போது கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறையும் என தெரிவித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தற்போது 75 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் விலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். தி.மு.க. அரசு இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசையை தூண்டுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
- இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.
நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Madurai: Tamil Nadu Minister Dr Palanivel Thiaga Rajan says, "A minister from Tamil Nadu has been in jail for a year without bail. Similarly, the Chief Minister and ministers of the Delhi government are in jail. If this government continues, democracy will be completely… https://t.co/Ud3IbP3Vkh pic.twitter.com/pysVg0q1sS
— ANI (@ANI) April 2, 2024
- தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
- உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட மோடி தமிழராகவே செயல்படுகிறார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். மருத்துவமனை வருவதற்கு துணை நிற்காமல், வராமல் இருப்பதற்கு துணை நிற்கிறார்கள். ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.
கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க. துணை போனது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்த கூட்டணியாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உள்ளது.
இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி உள்ளது. 10 வருட காலம் மோடி அரசின் சாதனை எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
இவர் அவர் பேசினார்.
- மூதாதையர்களின் நினைவு நாள் போன்ற நாட்கள், பிற நாட்களிலும் இந்த புனிதப் பணிக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
- வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன் - வள்ளலார்
மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சேவைக்கு நீங்களும் உதவலாமே! இயலாதவர்களுக்கு உணவு வழங்குவது மூதாதையருக்கு திதி கொடுத்த புண்ணியம். மதுரையில் வீதியோரத்தில் உணவுக்காக தவித்துக் கொண்டு இருக்கிறவர்களுக்கு "மதுரையின் அட்சயப் பாத்திரம்" என்ற அமைப்பை தொடங்கி கடந்த 1050 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் 300 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.
தங்களது திருமண நாள், பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள், மூதாதையர்களின் நினைவு நாள் போன்ற நாட்கள், பிற நாட்களிலும் இந்த புனிதப் பணிக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம். வாடிய பயிரை கண்டபோதெல்லம் வாடினேன் - வள்ளலார்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ.40 வீதம் 300 பேருக்கு ரூ.12000 ஆகிறது.
25 நபர்களுக்கு ரூ.1,000
50 நபர்களுக்கு - ரூ.2,000
100 நபர்களுக்கு - ரூ.4,000
200 நபர்களுக்கு - ரூ.8,000
250 நபர்களுக்கு ரூ.10,000
300 நபர்களுக்கு - ரூ.12,000
Rtn. நெல்லை பாலு, நிறுவனர், மதுரையின் அட்சயப் பாத்திரம், G-102, சாந்தி சதன் குடியிருப்பு கோச்சடை மதுரை-16
செல்: 94426 30815 (G-pay).

Account Details:
MADURAIYIN ATCHAYA PAATHIRAM TRUST
Canara Bank-Madurai West Avani Moola Street
A/C No:110031396472
IFSC CODE: CNRB0001010, MICR CODE: 625015006.
- அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்
- எம்.எஸ். ஷா மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
மதுரை திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், எம்.எஸ். ஷா மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், 15 வயதான தனது மகளின் செல்போனுக்கு எம்.எஸ், ஷா ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது மகளை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச்சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னுடன் வந்து தங்கினால் பைக் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தனது மனைவியும் (சிறுமியின் தாய்) உடந்தையாக இருந்தாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
- திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா செல்லூர் 50 அடி சாலை, முனிச்சாலை சந்திப்பு, வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பு, ஜீவா நகர் 1-வது தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு கூட்டணியையும் மக்கள் நம்ப தாயாராக இல்லை. வைகோ தனது மகனுக்கு ஒற்றை சீட் வேண்டும் என முதலமைச்சர் வீட்டின் பூட்டு போல தொங்கிக் கொண்டு இருந்தார். திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
பெரம்பலூர் தனித் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவுக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது என தெரியவில்லை. தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி மிகவும் மோசமாக உள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் கட்சியினர் கூட்டணியில் ஏன் இருக்கிறோம், ஏதற்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகும் என தெரியவில்லை. சரத்குமார் விருதுநகரை பெற்றுக் கொண்டு கட்சியை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. பா.ம.க.வை கழற்றி விட்டு விடும் என ராமதாஸ் கூறியும் அன்புமணி ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி வைத்துள்ளார்.
மரியாதையுடன் வாழ்ந்த டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் பாவம். சுயநலத்திற்காகவும், வாரிசுக்காகவும் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். தி.மு.க. தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். தி.மு.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தி.மு.க. கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றமால் அமைச்சர் உதயநிதி செங்கல்லை தூக்கி கொண்டு செல்கிறார். தி.மு.க. நீட்டை ஒழிப்போம் என சொல்லி விட்டு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வையும், திருந்தாத பா.ஜ.க.வையும் மக்கள் ஒற்றை விரலால் ஒங்கி அடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
- மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.
மேலூர்:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தணிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கொடிமலர் ஆகியோர் தலைமையில் தலைமை காவலர்கள் அலாவுதீன், கார்த்திக் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மேலூரில் உள்ள தனியார் சிகரெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் சரவணன் என்பவர் சிகரெட் விற்பனை செய்து பல்வேறு கடைகளில் வசூல் செய்த ரொக்கம் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 400-ஐ கொண்டு வந்தது தெரியவந்தது.
ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் உத்தரவின் பேரில் அந்த பணம் சரி பார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.






