என் மலர்tooltip icon

    மதுரை

    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார்.
    • விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் கைதி ஒருவர் மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். சிறையில் இருந்தபோது அவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அந்த ஓட்டலுக்கு உதவி ஜெயிலர் பாலகுருசாமி அடிக்கடி சாப்பிட சென்றுள்ளார்.

    அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நட்பாக பழகிய அவர், ஓட்டல் உரிமையாளரின் திருமணமாகாத மகள் மற்றும் 14 வயது பேத்தி ஆகியோரின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை ஞானஒளிவுபுரம் ஏ.டி.எம். மையம் அருகே தனியாக வருமாறு பாலகுருசாமி அழைத்திருந்தார். இத்தகவலை சிறுமி தன் தாத்தா, பாட்டி, சித்தியிடம் கூறவே, அவர் கூப்பிட்ட இடத்துக்கு இருவரும் உடன் சென்றனர். அங்கு வந்த பாலகுருசாமி சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில் பாலகுருசாமியை கடுமையாக திட்டியவாறு கைகளாலும், காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி சரமாரியாக தாக்கினார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    இதனை பார்த்தும், பகிர்ந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்த பலர் பெண்ணுரிமையை காக்கும் லட்சணம் இதுதானா..., என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அச்சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் பாலகுருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே உதவி ஜெயிலரை பொது இடத்தில் பலரது முன்னிலையில் தாக்கியதாக முன்னாள் சிறை கைதி, அவரது மகள் ஆகியோர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இந்திய தண்டனை சட்டம் 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 355 (ஒருவரை அவமதிக்கும் வகையில் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தந்தை, மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் திட்டத்திற்கு சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவ னத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை சூழலியல் பாதிக்கப்படுவதோடு விவசாயம் அழிந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த திட்டத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டங்ஸ்டன் திட்டத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்.

    ஆனால் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தற்போது வரை மவுனம் காத்து வருகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அதன்படி இன்று மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லா ளப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்கு தெரு, கல்லம்பட்டி, சூரக்குண்டு, எட்டிமங்களம், புளிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரும்பு, வாழை, நெல், ஏர்கலப்பை ஆகியவற்றை ஏந்தி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

    • வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள்.
    • பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபயண நிறைவு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.

    டங்ஸ்டன் தொடர்பாக பாராளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசலாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஊர்களில் பேசினால் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்த முழுவிவரமும் மேலூரின் ஒவ்வொரு கிராமத்தினருக்கு தெரிந்தால் தான் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்து நமக்காக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், அதிகாரிகள் பேசுவார்கள் என்பதை விட நமக்காக நாம் பேசினால் தான் அரசு செவி மடுக்கும்.

    வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள். இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள். டங்ஸ்டன் பிரச்சனையில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை சட்டமன்ற தீர்மானம். இவ்வளவு நடந்த பிறகும் ஒன்றிய அரசு இப்போது வரை டங்ஸ்டன் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

    மத்திய அமைச்சரிடம் பேசும்போது, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக்கேட்டேன். அதற்கு மத்திய மந்திரி மொத்தம் 5,000 ஏக்கரில் அரிட்டாபட்டி பாரம்பரிய சின்னங்கள் வெறும் 500 ஏக்கர் தான், மீதமுள்ள 4,500 ஏக்கரில் திட்டத்தை நிறைவேற்றினால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.

    மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார்கள். டங்ஸ்டன் ஏல உத்தரவு ரத்து என மத்திய அரசு அவ்வளவு எளிதாக அறிவிக்க மாட்டார்கள். நம் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதாது. போராட்டம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும்.

    பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை. அதானி என பேசினால் மைக் ஆப் செய்யப்படுகிறது. பெரு முதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வந்திருப்பது சாதாரண ஆபத்து அல்ல. மேலூர் மக்கள் பெருமுதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மேலூர் போராட்டம் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மேலூரின் சத்தம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்று மதுரை மேலூர் ஆகிவிடக்கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 14 பேர் சுடப்பட்டார்கள். அங்கெல்லாம் ஜனநாயக சக்திகள் கோட்டை விட்டு விட்டார்கள். கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். மேலூரை எந்த தலைவர்களும் காப்பாற்ற மாட்டார்கள்.

    மக்கள், தலைவர்களை நம்ப வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்று போராடுங்கள். டங்ஸ்டன் ஏலம் ஒப்பந்த அறிவிப்பு ரத்து என்பதை அறிவிக்கிற வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பு சட்டம், ஒன்றிய அரசு என எல்லாமே வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மக்கள் சக்தி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உள்ளது.

    ஒரு கேடயம் போல சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி. ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை.
    • கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக, சட்டங்களை இயற்றி மக்களுக்கான திட்டங்களை கொடுத்து செயல்படுத்த வேண்டிய சட்டசபை கடந்த நான்காண்டு திராவிட முன்னேற்றக்கழக அரசு, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுகிறதா? என்றால் மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நிதி அமைச்சர் கூட ரூ.26 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். வளர்ச்சி திட்டம் எதுவும் செய்யவில்லை என்பது கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் உண்மை நிலையாகும்.

    மழைநீர், வெள்ளை நீருக்கு நிவாரணம் இல்லை, வறட்சிக்கு நிவாரணம் இல்லை, பயிருக்கு நிவாரணம் இல்லை, உயிரிழப்புக்கு நிவாரணம் இல்லை என்று எதையும் செய்யாத நிலையில் தான் தி.மு.க. அரசு உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை. இந்த உண்மையை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.

    மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகின்ற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றார். அப்போது, அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

    இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது சித்தியுடன் சம்பவ இடத்திற்கு அந்த மாணவி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்தாராம்.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை நடுரோட்டில் வைத்து எட்டி உதைத்தார். பின்னர் செருப்பாலும் தர்மஅடி கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

    இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், பொது இடத்தில் அரசு அதிகாரியை தாக்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார்.
    • உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலாராக குருசாமி பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு விசாரணை கைதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் மூலம் அவரது மகள் மற்றும் பேத்தியுடன் பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறைவாசியின் பேத்தியை தான் வசிக்கும் இடத்திற்கு தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது குடும்பத்தாரிடம் மாணவி கூறியுள்ளார். உடனே மாணவியை அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தார் மறைவாக நின்று நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது அந்த இடத்திற்கு வந்த உதவி ஜெயிலர், மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார். உடனே அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவி கூச்சலிட்டத்தை அடுத்து அருகிலிருந்த மாணவியின் சித்தி உதவி ஜெயிலருக்கு தர்ம அடி கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் குருசாமி மற்றும் மாணவியின் குடும்பத்தாரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர்.
    • ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமத்தேவர். இவருடைய மனைவி நாகம்மாள் (வயது 96). இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் மட்டும் 78 பேர் உள்ளனர்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தேவர் இறந்துவிட்டார். நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசம் காட்டினார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    தனக்கு முதுமையாகிவிட்டதால், தான் இறக்கும்போது யாரும் வருத்தப்படக்கூடாது. எப்படி குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதே போல் நான் இறந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆடல், பாடல், மேளம் என்று ஒரு விழா போன்று எனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். துக்கவீடு போன்று அன்றைய தினம் இருக்கக்கூடாது.

    இதுதான் என் கடைசி ஆசை என குடும்பத்தினரிடம் கூறி வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நாகம்மாள் நேற்று முன்தினம் இறந்தார்.

    அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இணைந்து முடிவு செய்தனர். ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்து கலைஞர்களை வரவழைத்தனர். ஒரு திருவிழா போன்று ஏற்பாடுகளை செய்தனர். மைக்செட் அமைக்கப்பட்டது.

    நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர். ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்னொருபுறம் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாட்டங்கள் நடைபெற்று, நாகம்மாளின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்.

    இதுதொடர்பாக சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் எப்போதும் முக்கியம் என மூதாட்டி நாகம்மாள் தன் குடும்பத்தினர் மட்டுமல்ல, கிராம மக்களிடமும் கூறி இருக்கிறார். அவரும் அவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து 96 வயதில் இறந்துள்ளார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இவ்வாறு செய்திருப்பது நினைக்கையில் ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றனர்.

    • இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும்.
    • 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது.

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவையின் தொடக்கமாக மதுரை – சென்னைக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    முதல் கட்டமாக இன்று முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ஏற்கெனவே சென்னையில் இருந்து 8.45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணிநேர சேவைக்கு பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45-க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதன்பின், இரவு சுமார் 2.15 மணிக்கு மேல் பினாங்கிற்கு புறப்பட்டு செல்கிறது.

    இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமான சேவை இல்லை என்றும், 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    • அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.
    • அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.

    மதுரை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள விழுந்தமாவடியின் ஊராட்சித் தலைவர் மகாலிங்கம்,  ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 12-ந்தேதி நானும், என்னுடைய மகனும், விழுந்தமாவடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அலெக்ஸ் ஆகிய இருவரும் 2.25 கிலோ கஞ்சா பதுக்கியதாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். என் மகனை தேடி வருகின்றனர்.

    நாங்கள் சட்டவிரோதமான எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டு உள்ளது. எனவே எங்கள் மீதான பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளதால் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அபுடு குமார் ராஜரத்தினம், ஜான்சன் யுவராஜ் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் ஊராட்சித்தலைவர் என்பதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதில் அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பையும் அகற்றப்பட்டு வந்தன.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், போலீசார் மூலமாக மனுதாரர், அவரது மகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்ய வைத்து, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே மனுதாரர் சென்னையில் போதைப்பொருள் பதுக்கியதாக பதிவான வழக்கில் 5 நாளில் ஜாமீன் வழங்ப்பட்டது. அதைப் போல இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்கள்.

    விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர், அவரது மகன் ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் 500 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக கைதானார்கள். அவர்கள் மீதான வழக்கு பொய்யானது என்றும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    ஊராட்சி தலைவரான மனுதாரரும், ஒன்றிய கவுன்சிலரான அவரது மகனும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லாமல், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தெரிகிறது.

    இவர்கள் சுயேட்சைகள் என்பதால் அவர்கள் மீது அரசு தரப்பில் ஏற்கனவே 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், இதே வழக்கில் மனுதாரர் மகனுக்கு முன்ஜாமீன் வழங்கியதையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார்.
    • மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வினரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் மு.க.அழகிரி. கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி அமோக வெற்றி பெற்று மத்திய கேபினட் மந்திரியானார். இதனால் தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து மு.க.அழகிரி தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு சமயங்களில் அரசியல் வியூகங்களை கையாண்டார். மு.க.ஸ்டாலினையும் பொது நிகழ்ச்சிகளில் விமர்சித்தார்.

    கடந்த 2016 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களை எதிரணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு மு.க.அழகிரி மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தார். மு.க. அழகிரியின் திடீர் மனமாற்றம் தி.மு.க.வினர் மத்தியில் பரவலாக பேசும் பொருளானது. மு.க.அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் கட்சி தலைமை சேர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

    இதற்கிடையே மு.க.அழ கிரி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணி ஆற்ற விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக மு.க.அழகிரி தனது கண்ணசைவை காட்டாத நிலையில் ஆதரவாளர்கள் 15 பேரில் 9 பேர் மட்டும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மதுரை நகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மூலம் கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

    மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், உதய குமார் எம்.எல்.ராஜ், முபாரக் மந்திரி, அன்பரசன், கொட்டாம்பட்டி ராஜேந்திரன், இசக்கிமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் கட்சி தலைமையிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மன்னிப்பு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறுகையில், அண்ணன் மு.க. அழகிரி தலைமையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வை வளர்க்க அயராது பாடுபட்டோம். பல தேர்தல்களில் இரவு-பகல் பாராது உழைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளோம். அந்த தகுதியின் அடிப்படையில் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இதற்காகவே மன்னிப்பு கடிதத்தை தி.மு.க. தலைமைக்கு எழுதி அனுப்பினோம். ஆனாலும் இதுவரை மேலிடத்திலிருந்து எந்தவிதமான உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

    மு.க.அழகிரி ஆதரவாளர்களின் மன்னிப்பு கடிதம் கொடுக்காத சிலர் கூறும்போது, தி.மு.க.வில் சேர அண்ணன் அழகிரி இதுவரை யாருக்கும் அனுமதி தரவில்லை. ஆனால் சிலர் அவர்களாகவே தனிப்பட்ட முறையில் கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது விருப்பத்தை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றார்.

    எனவே மன்னிப்பு கடிதம் கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? அல்லது தனித்து விடப்படுவார்களா? என்பது கட்சி மேலிடத்தின் கையில் தான் இருக்கிறது என்று மதுரை முக்கிய தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • டிடிவி தினகரன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
    • ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன்

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர். இந்த கோஷம் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்

    இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.

    இதனையடுத்து கடவுளே அஜித்தே என்று பொது இடங்களில் கோஷம் போடுவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்று அஜித் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "திருப்பூர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சென்றிருந்தேன். அப்போது நான் பேச தொடங்கியபோது அங்கிருந்த பள்ளி மாணவர்கள் கோஷமிட்டனர். எனக்கு அந்த கோஷம் தெளிவாக கேட்கவில்லை. உடன் பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவதாகவும் இது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் கூறினார்கள்.

    நானும் அஜித்தினுடைய ரசிகன் தான். ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன். பல குழந்தைகளுக்கு நான் அஜித்குமார் என்றே பெயர் வைத்துள்ளேன்.

    நல்ல படங்களை பார்ப்பேன். தற்போது கூட தங்கலான் திரைப்படம் ஓடிடி-யில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. கங்குவா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • தேனியில் தங்கி இருந்த சவுக்கு சங்கர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.
    • கடந்த சில விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை.

    மதுரை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கஞ்சா பதுக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×