என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துக்க நிகழ்ச்சியை திருவிழா போன்று நடத்திய குடும்பத்தினர்- 96 வயது மூதாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்
    X

    துக்க நிகழ்ச்சியை திருவிழா போன்று நடத்திய குடும்பத்தினர்- 96 வயது மூதாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்

    • நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர்.
    • ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமத்தேவர். இவருடைய மனைவி நாகம்மாள் (வயது 96). இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் மட்டும் 78 பேர் உள்ளனர்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தேவர் இறந்துவிட்டார். நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசம் காட்டினார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    தனக்கு முதுமையாகிவிட்டதால், தான் இறக்கும்போது யாரும் வருத்தப்படக்கூடாது. எப்படி குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதே போல் நான் இறந்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆடல், பாடல், மேளம் என்று ஒரு விழா போன்று எனது இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். துக்கவீடு போன்று அன்றைய தினம் இருக்கக்கூடாது.

    இதுதான் என் கடைசி ஆசை என குடும்பத்தினரிடம் கூறி வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நாகம்மாள் நேற்று முன்தினம் இறந்தார்.

    அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இணைந்து முடிவு செய்தனர். ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்து கலைஞர்களை வரவழைத்தனர். ஒரு திருவிழா போன்று ஏற்பாடுகளை செய்தனர். மைக்செட் அமைக்கப்பட்டது.

    நாகம்மாளின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சேர்ந்து கும்மி அடித்தனர். ஆடல் பாடல் ஒரு பக்கம் நடக்க மறுபுறம் நாகம்மாள் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்னொருபுறம் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாட்டங்கள் நடைபெற்று, நாகம்மாளின் இறுதி ஆசையை நிறைவேற்றினர்.

    இதுதொடர்பாக சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் எப்போதும் முக்கியம் என மூதாட்டி நாகம்மாள் தன் குடும்பத்தினர் மட்டுமல்ல, கிராம மக்களிடமும் கூறி இருக்கிறார். அவரும் அவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து 96 வயதில் இறந்துள்ளார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் இவ்வாறு செய்திருப்பது நினைக்கையில் ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றனர்.

    Next Story
    ×